நூல் விமர்சனம்: கனவுகள் இலவசம்!
1988 ல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவல். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே இந்த நூல் தனிப்பட்ட முறையில் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
பதின்மங்களில் தொடர்ந்து பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடைய துப்பறியும் நாவல்களை வாசித்ததுண்டு.
கிராமத்தில் நான் என்னுடைய பெரியப்பா வீட்டு இரட்டைச் சகோதரிகள் சுமதி, சுந்தரி மூவரும் பத்தாயங்களில் மறைந்து ஒரே நேரத்தில் ஒரே நூலை வாசிக்கக் கூடியவர்களாக இருந்தோம்.
இந்த நூலை கையில் எடுத்தபோது எழுத்துநடை என்னை மீண்டும் என்னுடைய பதின்மத்திற்கு அழைத்துச் சென்றது.
தொடர்ந்து அப்பொழுது வாசித்த பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் போன்றோர்களின் நூல்கள் எங்களை ஒரு கனவுலகில் சஞ்சரிக்க வைத்திருந்தது.
திருமணத்திற்கு பின்னான வாழ்க்கை குறித்த பெருங்கனவை விதைத்து வைத்திருந்தது.
பின்னர் எதார்த்த உலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் முரண்பாடுகளில் நாங்கள் மட்டும் தனித்து நின்றபோதுதான் தெரிந்தது வாசிப்பு எங்களுக்குள் ஒன்றை விதைத்திருக்கிறது என்பதை.
கனவுகள் இலவசம் கதையும் நள்ளிரவில் பன்னீர் தெளிப்பாய் ஆரம்பித்த ஏப்ரல் மழையோடு துவங்குகிறது. பொதுவாக கதைகளை வாசிக்கும் போது கதாநாயகியின் மீது நம்மை ஏற்றிக்கொண்டு கதையோடு பயணிப்போம்.
இக்கதையை வாசிக்கத் தொடங்கி இரண்டு பக்கங்களை புரட்டும்போது நாம் பத்மினி ஆகிவிடுகின்றோம்.
அப்படித்தான் அவளின் இயல்பு, நடந்து கொள்ளும் விதம், தீர்க்கம், தெளிவு, அந்த நுட்பமான அணுகுமுறை அத்தனையும் என்னை நானே பத்மினியாக உருவெடுத்துக் கொள்ளும் வகையில் செலுத்தியது.
இயல்பான ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண் எப்படி பேதமையற்று உலகத்தை எதிர்கொள்ள கூடியவளாக இருக்கிறாள் என்றும், எதார்த்த உலகத்தில் பெண் போகப் பொருளாக பார்க்கப்படுவது குறித்த அசௌகர்யங்களை எப்படி கையாளுகிறாள் என்பதையும் அழகாக பதிந்திருக்கிறார் எழுத்தாளர்.
பெண் என்பவள் ஒரு பொருளானது ஏன்? பொருளுக்கு அறிவு கிடையாது, உணர்ச்சி கிடையாது, சிந்திக்காது, கேள்வி கேட்காது, விருப்பம் சொல்லாது, கோபம் கொள்ளாது, ஒரு குடையை போன்ற பொருள்.
வெயிலா மழையா விரித்து கொள்ளலாம். ஆணியில் மாட்டலாம், மூலையில் எறியலாம், கரப்பான் பூச்சி அடிக்கலாம்.
ஒரு புத்தகம் போன்ற பொருள். சுருட்டலாம், மடக்கலாம், படிக்கலாம், படத்தின் மேல் மீசை வரையலாம், தலைக்கு வைத்து தூங்கலாம், கிழித்து பல்பொடி மடிக்கலாம், எடைக்கு போடலாம் என்று உள்ளிருக்கும் ஆதங்கம் அத்தனையும் தத்துவார்த்தமாக ஒரு பெண் கொட்டுவது போன்ற எழுத்துநடை மனதின் அடியாழத்தில் இருக்கும் கோவங்களை எல்லாம் கொட்டித் தீர்க்க வைக்கிறது.
பத்மினியின் குடும்பம் ஒரு சராசரி தந்தை, குடும்பத்திற்காக தன் எழுத்துக் கனவைச் சுருட்டி தூர வீசிவிட்டு, தான் ஒரு எழுத்தாளர் என்பதை மறந்து, தனக்கென ஏதும் விருப்பங்கள் அற்று, குடும்பத்திற்காகவே சிரித்தபடி வலைய வரும் தாய் கஸ்தூரி.
துடுக்குத்தனம் நிறைந்த தங்கை பவானி. பொறுப்பான ஆண் பிள்ளை சந்துரு என்று அழகான ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடியவள்.
பத்மினி நேர்மையான எண்ணங்களுடன் எம்பிஏ படித்து ஒரு நிறுவனத்தின் அசிஸ்டன்ட் மேனேஜராக பணி புரியும் ஒரு திறமை வாய்ந்த பெண். அடுத்தவரைச் சலனப்படுத்தக் கூடாது என்று தன் ஆடை, கூந்தல் அலங்காரத்தை கூட பார்த்துப் பார்த்து செல்பவள்.
தன் தாயிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டாள் என்பதை வலிந்து கேட்பவள். வலியை மறைத்து சிறு புன்னகையோடு கடந்து செல்லும் தாயை வேதனையோடு பார்ப்பவள்.
எதார்த்தமாக அவளுடைய தினப்படி ரயில் பயணத்தில் கிடைத்த ஒரு நட்பு ஜெயந்தி.
அவளுக்கும் அவள் கணவருக்கும் இடையிலான பிரச்சனைகள்… அவள் ஏன் அத்தனையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே தொடர்ந்து வாழ்க்கையை ஓட்டுகிறாள் என்கிற கேள்விகள்…
அவ்வப்போது செல்லும் இலக்கிய கூட்டங்கள். அங்கு சந்தித்த எழுத்தாளர் ஜெயச்சந்திரன், அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையிலான வாழ்க்கை குறித்த நிறைய கேள்விகளோடே பயணிக்கிறாள் பத்மினி.
நூலின் இடையே பழங்கால, தற்கால இலக்கியங்களை ஒப்பிட்டு எது பெரிது? என்பது குறித்த ஒப்பீடுகளுக்கான எழுத்தாளரின் பதில் அவருக்கே உரித்தான முத்திரை.
தந்தையை உற்று நோக்கி காலத்திற்கு ஏற்றார் போல் இந்த ஆண்கள் மாறிக்கொள்ளும் போது, எந்த மாற்றமுமின்றி இருக்கும் தன் தாய் குறித்த கேள்வி அவளுள் எழுகிறது. இந்த அப்பாவிடம் எத்தனையோ மாற்றங்கள்.
ஆனால் அம்மா 20 வருடங்களாக ஒரே இடத்தில் தொங்குகிற இந்த வால் கிளாக் போல் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறாள் என்பதைச் சொல்கையில் ஒரு சராசரி பெண்ணின் வாழ்வு அப்படித்தான் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறார்.
எல்லா சராசரி பெண்களையும்போல தன் விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டு, தன் எதிர்பார்ப்பும், ஏக்கமும் தவிடு பொடியாவதைப் பற்றிக் கவலை இல்லை, தன் விருப்பம் நசுங்கிப் போனாலும் பரவாயில்லை.
அத்தனை ஏமாற்றங்களையும் மாத்திரை முழுங்குவது போல் உடனே முழுங்கி கொண்டு “சரிங்க” என்று சொல்லும் தாயை பரிதாபத்தோடு பார்க்கிறாள்.
சிலநேரங்களில் “எப்பொழுதும் பெருமாள் மாடு மாதிரி தலையை ஆட்டு. உனக்குனு ஒரு யோசனை, சிந்தனை, ஆசை எதுவும் கிடையாதா? சொல்ல வேண்டியது தானே” என்று ஆதங்கத்தோடு கேட்கிறாள்.
அதே நேரத்தில் “பழகிப்போச்சுடி” என்று சொல்லும் தாயை நோக்கி “இது பழக்கமாக வந்ததில்லை பழக்கப்படுத்தப்பட்டதில் வந்தது” என்று இந்த சமூகத்திற்கு ஒரு சாட்டையடி வீசுகிறார்.
திருமண பேச்செடுக்கும் தந்தையிடம் ஏன் எல்லா பெண்களையும் போல் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போடவில்லை என்று அவளே அவளது இயல்பை கேள்விக்குள்ளாக்குகிறாள்.
அது எல்லாம் ஆண்களின் கற்பனை. அப்படி எழுதி, திரைப்படங்களில் எடுத்து சமூகத்திற்கு அவர்கள் பதிந்து விட்டு போக, அதைப் பார்க்கும் பெண்கள் அதை பின்பற்றத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொட்டில் அடித்துச் சொல்கிறார்.
ஆயினும் பத்மினி தனக்குள், “ஏன் மற்ற பெண்களிலிருந்து என் புத்தி சற்றே விலகி இருக்கிறதே, எதையும் சிந்தித்துப் பார்க்கிறதே, கேள்வி கேட்கிறதே, தர்க்கம் செய்கிறதே என்கிற மனப்போராட்டங்களுக்கு இடையில்தான் அவள் மண வாழ்க்கைக்குள் நுழைகிறாள்.
ஆயினும் ஏதோ வீட்டில் சொன்னார்கள் என்ற தலையை நீட்டிவிட்டு தன் கனவுகளையும், விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புதைந்து கொள்வதில்லை என்னும் கருத்தில் உறுதியாக இருக்கிறாள்.
“யானை தன் பலம் உணராத காரணத்தினால்தானே பாகனின் செயலுக்கு கட்டுப்படுகிறது. உன்னை நீயே பலவீனமான பிறவியாக எதற்காக கற்பனை செய்து கொள்கிறாய்? பிறரை சார்ந்திருத்தல் என்பது தாய்ப்பாலோடு சேர்த்து பருகி ரத்தத்தில் வைத்திருக்கும் இந்த பேதமையை என்ன செய்வது” என்னும் இந்தக் குரல் பத்மினியுடையதாக இருந்தாலும் பெண்கள் மீதான அக்கறையில் ஒலிக்கும் எழுத்தாளரின் குரல்.
“திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் உனக்கு ஏன் மற்றவரின் தயவு தேவைப்படுகிறது என்றாவது நிற்க முயற்சியாவது செய்திருக்கிறாயா? அட இப்படி நிற்பதை பற்றி சிந்தித்தாவது பார்த்திருக்கிறாயா?” என்கிற பத்மினியின் கேள்வி நிச்சயமாக நாம் ஒவ்வொருவரையும் பார்த்துதான்.
சமூகத்திலும், அலுவலகத்திலும் அவளுடைய மேலாண்மை சார்ந்த முடிவுகளின் போதெல்லாம் நேர்மையாக ஒரு ஆண் பேசினால் ரொம்பக் கண்டிப்பு. அதே ஒரு பெண் பேசினால் ரொம்ப திமிர் என்று பொருள் கொள்ளப்படுவதின் அபத்தங்களையும் எதிர்கொள்கிறாள்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. வழக்கமான பெண்பார்க்கும் படலங்களைத் தவிர்த்து, பொதுவாக ஏதேனுமொரு இடத்தில் சந்திக்கலாம் எனும் கோரிக்கையை முன்வைக்கிறாள்.
முற்போக்கான இளைஞரான விஜயகுமார் அவர்களுடைய அருகில் இருக்கும் நண்பர் இளங்கோ மூலமாக அந்தச் சந்திப்பு எளிமையாக நிகழ்கிறது. அவள் மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கத் துவங்குகிறது.
நிகழக்கூடிய அந்த மாற்றங்கள் அவளுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தன்னை அலுவலகத்திற்கு தனியே பார்க்க வருகிறான் என்றவுடன் தன்னுடைய கூந்தலை மாற்றி அலங்காரமாக பின்னியவள், அடுத்த கணமே அவிழ்த்துவிட்டு பழைய கொண்டைக்கு மாறிக் கொள்ளும் போது எதற்காகவும் இவள் தன்னுடைய இயல்பை அடுத்தவர்களுக்காக மாற்றிக் கொள்ளாதவள் என்பதை அழுத்தமாக எழுத்தாளர் பதிகிறார்.
அழகான, திறமையான, முற்போக்கு எண்ணம் கொண்ட, இயல்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விஜயகுமாரை அவளுக்குப் பிடித்து விடுகிறது. அவனோடு வாழ்வது குறித்து கற்பனைகளோடும் உறங்காமல் இருக்கிறாள்.
திருமணம் முடித்து ஒரு வார காலம் தேனிலவு காலத்தில் இருவருக்குமான நெருக்கம் அவர்கள் வாழ்வை இனிமையாக அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்று அவள் வாழ்வை தொடங்குகிறாள்.
பார்க்க வந்த தோழியிடமும் தன் கணவரின் முற்போக்கு குறித்து பெருமிதமாகவே பகிர்கிறாள்.
“சந்தேகப்படும் கணவனிடமிருந்து இன்னும் நீயேன் விலகாமல் இருக்கிறாய்?” என்கிற கேள்வியை அவளிடம் கேட்கத் தவறுவதும் இல்லை.
திருமணம் முடித்து மறுவீடு சென்றபிறகு, அந்த குடும்பத்தின் கட்டுப்பெட்டித்தனமான மூத்த மருமகள், பிற்போக்குத்தனமான மாமனார், மாமியார். தந்தையின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாத இரண்டு பிள்ளைகள் என்று அந்த குடும்பத்தில் தானும் ஒன்றிப் போகவே பார்க்கிறாள்.
ஆயினும் இவளின் இயல்பான நடவடிக்கைகளே அங்கு முரண்பட்டு நிற்கும்போது அது அசாதாரண சூழ்நிலையாக மாறுகிறது.
ஒரு கட்டத்தில் அவர்களின் காலத்திற்கு பொருந்தாத கட்டுப்பெட்டித்தனத்தை எல்லா தலைமுறைக்கும் சுமக்க வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுகிறது.
அர்த்தமில்லாத கோபங்கள் அர்த்தமில்லாத நியாயங்கள் என்று அவள் விஜயா போல சமையலறையே வாழ்க்கை என்று தன்னால் மாற்றிக் கொள்ள முடியுமா?
கேஸ் பற்றிய துணி வெள்ளை ஆவது பற்றிய கவலையிலேயே தன் வாழ்க்கையை கழிக்க முடியுமா? என்பதெல்லாம் அவளுக்கு முன் பெரும் கேள்வியாக நிற்கிறது.
வேலைக்குச் சென்று திரும்பும் போது, மாமியாரிடமிருந்து வரும் கேள்விகள் அவள் சிறகுகளை பிய்க்கத் தொடுக்கப்பட்ட முதல் அம்பு. அதுவும் “வேத்து ஆம்பளையுடன் என்ன வெட்டிப் பேச்சு” என்கிற கேள்வி வேரில் ஊற்றப்பட்ட முதல் சொட்டு வெந்நீர் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.
அனுசரித்து செல்லுதல் என்பது வேறு அழித்துக் கொள்ளுதல் என்பது வேறு. நான் என் அம்மா இல்லை. அவளின் பொறுமை எனக்கு கிடையாது. நான் அடுத்த தலைமுறை.
இங்கு நியாயம்தான் சட்டம் என்பதை அழுத்தமாக தன் மனதில் பதிகிற கட்டத்தில் மாமனார், மாமியார் குறுக்கீடுகளால் இவளுக்கும் குடும்பத்திற்கும் இடையிலான சிறு நிகழ்வுகளில் கூட முரண்பட்டு நிற்கும் தருணங்களில் காரணத்தை ஆராயாமல் கோபமுற்று விஜயகுமார் அவளை அடிக்கக் கை ஓங்குகிறான்.
புஜத்தைப் பற்றிக் குலுக்கி கேட்கும் அவனுடைய கேள்விகளின் போதும் அவள் அதிர்ந்து அவன் கண்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பிடிப்பதை பிடித்திருக்கிறது என்று சொல்ல உரிமை இருக்கும்போது, கசப்பதை கசக்கிறது என்று சொல்ல உரிமை இல்லை என்பது என்ன நியாயம்?
தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசக்கூடாது எனும் அவனின் நடத்தை இவளுக்கு பேரதிர்ச்சியை விதைக்க, எந்த பதிலும் உரைக்காமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெற்றோரின் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.
“ஏன் அவர்களுக்கு புரிவதே இல்லை. எப்படி பசி, சந்தோஷம், தூக்கம் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் சமமோ அதே மாதிரி தன்மானமும் சமம்தானே” என்கிற கேள்வி அவளை விடாமல் துரத்துகிறது.
ஒரு கட்டத்தில் சமாதானத்திற்கென இவள் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளும் அவர்களால் தடைபட “நீ வேலையை விட்டு வீட்டில் வந்து அனுசரணையாக இருந்தால் தான் உனக்கு வாழ்வு” என்கிற கட்டத்திற்கு செல்லும் போது,
“அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதுக்கும் அடியோடு மாத்திக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையா? முதலில் என் குணங்களாக நினைத்ததை இப்பொழுது குறைகளாக நினைக்கிறார்” என்பதை இளங்கோவிடம் கூறி வருந்துகிறாள்.
இருவருக்கும் இடையிலான தூதுவனாக இளங்கோ ஏழு மாதத்தில் தன் மனைவியை இழந்த துக்கத்தை மறைத்துக் கொண்டு மாறி மாறி பேசுகிறான்.
இருவரும் பிரிந்திருக்கும் அந்த காலகட்டம் ஒரு புரிதலை வழங்கும் என்று பத்மினி நினைக்கிறாள்.
ஆனால் அவள் இல்லாத வீடு அலங்கோலமானதை, புதிதாக கம்பெனி தொடங்குவது சார்ந்த அவளின் வழிகாட்டல் அது அடுத்த நிலைக்கு முன்னேறி செல்லும் வாய்ப்புகள் என்று விஜயகுமாரும் இந்த பிரிவு குறித்து சிந்திக்கத் தொடங்குகிறான்.
மாமனார் மாமியாரின் விருப்பத்திற்கு ஏற்ப தாயைப் போலவே பத்மினியும் தன் வேலையை விட்டு தன்னை சமரசம் செய்து கொண்டு அந்தக் குடும்பத்திற்குள் சென்றாளா? விஜயகுமாரின் மனம் மாறியதா? என்பதை எழுத்தாளர் கொண்டு செல்லும் விதம்தான் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணின் நுட்பமான முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஆழமாக பதிவு செய்திருக்கிறது.
தன்னுடைய தன்மானத்திற்கு சிறு தீங்குநேரும்போது கிளம்பி வர தயாராக இருக்கக்கூடிய ஒரு பெண், அந்த சூழல் மேலும் சிக்கலாகாது தவிர்ப்பதற்காக இறங்கி செல்லவும் தயங்க மாட்டாள் என்பதையும் நுட்பமாக பதிவு செய்கிறார்.
கதையில் நான்கு பெண்களை காட்டி இருக்கிறார்கள் எழுத்தாளர்.
குறும்புத்தனமான எதார்த்தமாக, பொறுப்புகளை பெரிதாக ஏற்றுக் கொள்ளாத பவானி.
உலகத்திற்கான தானே தன்னுடைய கனவுகளை, எதிர்பார்ப்புகளை, ஆசைகளை புதைத்துக் கொண்ட கஸ்தூரி.
தன்மீது கணவன் சந்தேகப்பட்டாலும் தனியே வாழ முடியும் என்கிற நம்பிக்கை இருந்தாலும் குடும்ப அமைப்பை விட்டு வெளியே வரத் துணியாத ஜெயந்தி.
அடுப்படியைத் தாண்டி அடுத்து ஒரு வாழ்க்கை இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விஜயா.
இதுதான் வாழ்க்கை, என்னுடையதுதான் அனுபவம், இப்படித்தான் இனி வருபவர்களும் இருக்க வேண்டும் என்று முந்தைய தலைமுறையின் கட்டுப்பெட்டித்தனங்களை அடுத்த தலைமுறைக்கு பழக்கப் பார்க்கும் விஜயகுமாரின் தாய்.
இதில் எல்லாவற்றிலும் வேறுபட்டு நிற்கும் பத்மினி.
பலதரப்பட்ட பெண் பாத்திரங்களையும் படைத்து அவர்களின் மனப்போராட்டங்களையும் எதார்த்த வாழ்வையும் பதிவு செய்து, அதில் எதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக இயல்பாக நமக்குள் கடத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
மிகவும் சாமர்த்தியமாக பெண்ணியத்தின் கொடியை உயர்த்திப் பிடிக்கக்கூடிய பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமானவர்கள் அல்ல என்கிற ஆண் மைய்ய குற்றச்சாட்டை அழகாக களைந்து, ஒரு நிர்வாகத்தின் சிக்கலை தீர்க்க முடிந்த பெண்ணால் குடும்பத்தின் சிக்கலையும் புத்திசாலித்தனமாக தீர்க்க முடியும் என்பதையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்குப் பெண் சுதந்திரமும் அவளின் மனமொத்த இல்லறமும் அங்கீகரிக்கப்படும்போது நிறைவேறியதாகிறது. அப்படி அங்கீகரிக்கப் பக்குவம் மிக்க மனங்கள் தேவை.
அப்படிப்பட்ட மனங்களை ஆண்கள் வளர்த்துக் கொள்ளும் வரை பெண்களுக்கு கனவுகளை மட்டுமே இந்த சமுதாயத்தால் இலவசமாக தர முடிகிறது என்று முடித்திருக்கிறார்.
ஒருவகையில் இந்த திறனாய்வு எழுதத் தொடங்கும்போது நான் ஏன் பெண்ணியம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிப்பதில்லை என்று சொல்லும் போது இதைத்தான் சொன்னேன்.
நூலை வாசித்து விட்டு அதன் மீதான நியாய தர்க்கங்களை எதார்த்த உலகத்தில் நம்மால் நிலைப்படுத்த முடியாத போது ஒரு மிகப்பெரிய முரண்பாடு நம்மை மன ஊசலாட்டத்திற்கு தள்ளுகிறது.
இங்கு பெண் சுதந்திரத்தை அங்கீகரிக்க பக்குவப்பட்ட மனங்கள் தேவை என்பதை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.
என் தலைமுறையைச் சார்ந்ததாக இருந்தாலும் இது எல்லா தலைமுறைக்கும் பொருந்தும்.
இன்றும் வீட்டில் பெரியவர்கள் சொன்னால் அது சரிதான் அதைக் கேட்டுக்கொண்டு காலம் காலமாக ஒரு அடிமைப் பெண் சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.
பெரியவர்கள் சொன்னாலும் அதில் உள்ள நியாயங்களை தர்க்கரீதியாக சீர்தூக்கிப் பார்த்து சரியானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு, தவறானவற்றை மறுத்துவிடுதல் நலம் என்பதை அழுத்திச் சொல்கிறது ‘கனவுகள் இலவசம்’.
ஒரு வகையில் பத்மினியின் பார்வையில் என்னை நானே மீண்டும் திரும்பிப் பார்த்திருக்கிறேன். நீங்களும் உங்களைத் திரும்பிப் பாருங்கள்.
******
நூல் : கனவுகள் இலவசம்
நூலாசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்
பக்கங்கள் – 200
விலை – ரூ. 80/-
– சுமித்ரா சத்தியமூர்த்தி