வாக்குக் கோரி வரும் கட்சிகளின் கவனத்திற்கு…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி இடைவிடாமல் தமிழகத்தில் வேலை வாய்ப்புகளைப் பெருக்கியிருப்பதாகக் கொத்தான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தக் கட்சிகள் சொல்லும் புள்ளிவிவரங்கள் எந்தளவுக்கு துல்லியமானவையோ, இல்லையோ ஆனால், பொதுவெளியில் நாம் அன்றாடம் சந்திக்கும் வேலை இழப்புகள் மனதைச் சுடும் விதத்தில் இருக்கின்றன.
மிக அண்மையில் ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் எழுந்ததுமே தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக கேரளம், தமிழ்நாட்டிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை 90,000-ஐ நெருங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.
போர்ச்சூழல் இன்னும் தீவிரமடையும்போது, இத்தகைய வேலை இழப்புகளும் வேறு வழியின்றி சொந்த நாட்டிற்கு வேலை இழந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி வருவதும் இன்னும் அதிகரிக்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்தியில் ஆளும் பாஜக அரசு, பண மதிப்பிழப்பு வேலையை எப்போது தொடங்கியதோ, அதிலிருந்து கள்ளப் பணம் பிடிபட்டதோ, இல்லையோ, பல சிறு தொழில்கள் அந்த பணமதிப்பிழப்பின் பின்னணியில் நசுங்கிக் காணமல் போய்விட்டன.

பிறகு, ஜி.எஸ்.டி வரி உயர்வு இன்னொரு சுமையாய் வந்திறங்கியபோது இன்னும் ஏராளமான சிறு தொழில்கள் முடங்கிப் போயின.
பலர் வேலை வாய்ப்பை இழந்து, பறிதவிக்கும் சூழல் உருவானது.
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு மிக அருகில் இந்த எதார்த்தத்தை சந்திக்க வேண்டி இருந்தது.
ஆனால், மேலே சொன்ன இரண்டு பெரிய பேரிடிகளின் பின்னணியில் எவ்வளவு பேர் வேலை வாய்ப்புகளையோ, தொழில் வாய்ப்புகளையோ இழந்தார்கள் என்கின்ற புள்ளி விவரங்கள் மக்களின் பார்வைக்கு முன்வைக்கப்படவில்லை.
கொரோனா இரண்டு முறை வந்து இந்தியாவை உலுக்கியபோதும் சிறு தொழில் நடத்தி பிழைத்து வந்த பலர் காணாமல் போனார்கள்.
இவற்றையெல்லாம் விட தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் எந்த கட்டுமானப் பணிகளிலும், கடைகள், ஹோட்ட்ல்கள், சிறு சிறு தொழில்கள் என்று எதிலும் வடமாநிலத் தொழிலாளர்களைப் பரவலாகவே பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் நடந்து வரும் மெட்ரோ உள்ளிட்ட முக்கியமான பாலக் கட்டுமானப் பணிகளுக்கான பின்னணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள் என்கின்ற உண்மையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு அதிகரித்திருப்பதற்கும், அதே வேலைகளை இதற்கு முன்னால் செய்திருந்த தமிழகத் தொழிலாளர்கள் எங்கே போனார்கள்? என்கின்ற எதார்த்தமான கேள்விக்கும் நாம் இப்போது பதிலைத் தேட வேண்டி இருக்கிறது.
தஞ்சாவூரில் வயல் புறத்தில் களை எடுப்பதற்குக் கூட வடமாநிலத் தொழிலாளர்கள்தான் தேவைப்படுகிறார்கள் என்றால், அவர்கள்தான் அந்த வேலைவாய்ப்புகளை நிரப்புகிறார்கள் எண்றால், இதுவரை அந்த வேலைவாய்ப்புகளைச் செய்து வந்தவர்கள் என்னவானார்கள்?
ஏன், தமிழகத்திலேயே தமிழர்கள் பின்தங்கித் தனித்துப் போனார்கள்?
ஓர் எளிய வங்கி அதிகாரி பணிக்குக் கூட வடநாட்டிலிருந்து தான் வர வேண்டுமா?
இங்கிருக்கும் சலூன் கடைகளில் கூட அவர்கள் தான் ஆக்கிரமிக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்புகிறவர்களை,
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்களை ஒரு பார்வையைப் பார்ப்பது போல இங்கும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து, வெளிநாடுகளுக்கு பணியாற்றச் செல்பவர்களின் எண்ணிக்கையை கனக்கச்சிதமாக சொல்லும் நாம்,
அதே வெளிநாடுகளில் இருந்து வேலையை இழந்து தமிழகத்திற்கு திரும்பி வரும் தமிழர்கள் எண்ணிக்கையைக் கணக்கிட்டிருக்கிறோமா?

தேர்தல் நேரத்தில், வாக்காளர்களை உடனடியாகக் கவரும் விதத்தில் சில வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் வெளியிடுகிற அரசியல் கட்சிகள்,
இதே தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை சட்டென்று இழந்து குடும்பத்திலும் பொது வெளியிலும் தனித்து விடப்படும் தமிழகத் தொழிலாளர்களின் நிலை பற்றி யோசித்திருக்கின்றனவா?
சீனப் பழமொழி சொல்வது மாதிரி, இன்றைக்கு உடனடியாக சாப்பிட மீனைக் கொடுத்துவிட்டு, தூண்டிலை அவர்கள் கொடுக்க மறந்து போனோம்.
இப்படி வாய்ப்புகள் இல்லாமல், சொந்த மாநிலத்திலேயே கண்டுகொள்ளாமல் தனித்து விடப்படும் தமிழகத் தொழிலாளர்கள், நேற்று வரை பொறுப்புகளில் இருந்து இன்று அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் என்னதான் செய்வார்கள்?
அவர்களை நம்பியிருக்கின்ற குடும்பத்தின் பொருளாதாரம் என்னாகப் போகிறது?
கேட்கும்போது மனதைச் சுடும் கேள்விகளாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் வாக்காளர்களைச் சந்திக்கப் போகும் எந்தக் கட்சியுமே எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளாக இவை இருந்துகொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
– யூகி