எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?

மார்ச் – 3: சர்வதேச மகளிர் தினம்

உயிர்களின் பிறப்பிடம் பெண். அறிவின் ஊற்றுக்கண் பெண். ஆற்றலில் வெளிப்படும் சக்தி பெண். துணிவின் திறவுகோல் பெண். குடும்பத்தின் ஆணிவேர் பெண். நாட்டின் அச்சாணியும் பெண் எனக் கூறும்படி தன்னுடைய பன்முகத் திறமையால் வீட்டையும் சமூகத்தையும் ஒன்றிணைத்து சென்று கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

இவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடுவதற்கும் பாலின சமத்துவத்துக்கான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர் போராட்டங்கள் மூலம் இந்நாள் உருவானதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் வேலை நேர குறைப்பு, ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதே இத்தினத்திற்கு போடப்பட்ட விதையாகும். எனினும் இவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்தப் போராட்டங்களுக்குத் தீர்வு கொடுக்கப்பட்ட நாள் தான் மார்ச் 8.

ஐக்கிய நாடுகள் சபை 1975-ம் ஆண்டு இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பாலினப் பாகுபாடுகளைக் களைவதற்கும் சம உரிமைகளை நிலை நிறுத்துவதற்கும் அவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் ஒரு நல்வாய்ப்பாக இந்நாள் அமைகிறது.

பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் அதற்கான பாதையை அமைத்துக் கொடுத்த பல முன்னோடிகளை நன்றியுடன் நினைவு கூறுவது அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

“பெறுவதற்குக் கொடுங்கள்” என்பதே இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருள் ஆகும். பெண்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சியை பெற முடியும் என்பது இதன் கருத்து.

பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை பலப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயமும் உயர்வடையும் என்பதை இது உணர்த்துகிறது.

இந்நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் சமூக மையங்களில் கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள், சிறப்பு பரிசுகளுடன் கூடிய கண்கவர் விழாக்கள் ஆகியவை நடைபெறுகின்றன.

குறிப்பிட்ட நிறுவனங்களில் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. மேலும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் FLAMES 2026 எனப்படும் மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

பலவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்பச்சரம் மிளிர்ந்து நிற்பது போல், பல்வேறு துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அவர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

உற்பத்தி துறையில் அதிகப் பெண் பணியாளர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

எனவே, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி, அவர்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இத் தினத்தின் மூலம் அறியப்படுகிறது.

திக்கெட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் “பெண்களின் மேன்மையை போற்றுவோம், பெண்மையைக் கொண்டாடுவோம்.”

– எஸ்.வாணி

 
You might also like