எங்கும் எல்லாருக்குமான சமத்துவம்!

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களைப் பிறருக்குச் சமமான இடம் நோக்கி நகர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் பலர் செயலாற்றியிருக்கின்றனர்.

அவர்களே வரலாற்றின் பக்கங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கின்றனர். நம் நாட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், வரலாற்றாசிரியர்கள் எனப் பலரை அதற்கான உதாரணங்களாகக் கொள்ளலாம்.

’எங்கும் எல்லாருக்குமான சமத்துவம்’ என்பதே அவர்களது பிரதான வலியுறுத்தலாக இருந்து வந்திருக்கிறது.

அதனை நோக்கி மக்களைத் திருப்புவதில் தங்களது வாழ்வை அவர்கள் அர்ப்பணித்ததையும் அவர்களது வாழ்வு நமக்குச் சொல்கிறது.

ஆனால், அதையும் மீறி இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் முளைப்பதும் மறைவதுமாக இருந்து வருகிறது. அவற்றைச் சரி செய்ய, சமூக நீதியை முன்னிறுத்துவதும் தொடர்ந்து வருகிறது.

எது சமூகநீதி?

ஓரிடத்தில் நான்கு பேர் இருக்கின்றனர் என்றால், அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு உயரங்களில் இருக்கின்றனர்.

குள்ளம், நடுத்தர உயரம், மிக உயரம் என்றிருக்கும் அவர்கள் நால்வருமே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தைப் பார்க்க விரும்புகின்றனர். அதற்காக, அங்கிருக்கும் சுற்றுச்சுவரைத் தாண்டிப் பார்க்க வேண்டிய சூழல்.

அப்போது, அருகிலிருக்கும் சிறிய மரப்பெட்டிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற ஐடியா அவர்களில் ஒருவரால் செயல்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, அங்கு ஆறு பெட்டிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். பெட்டி எதுவும் தேவைப்படாமல் நின்றவாறே பார்க்கிற வகையில் ஒருவர் உயரமாக இருக்கலாம்.

அவர் தனக்கான பெட்டியை ரொம்பவே உயரம் குறைவானவருக்கு வழங்குவார்.

மற்ற இருவரும் சுவரை எட்டிப் பார்க்கிற அளவுக்குப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு மீதமிருப்பவற்றை மேற்சொன்ன நபருக்கு அளிப்பார்கள். முடிவில், நால்வரும் சுவர் மீது கைவைத்து அந்த ஆட்டத்தை ரசிப்பார்கள்.

நால்வருக்கும் சிறப்பான நட்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நால்வரும் சமம்தானே என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டியைத் தந்தால், அது நிகழ்ந்திருக்காது. சமம் என்பதற்கும் சமத்துவம் என்பதற்குமான வித்தியாசம் இதுதான்.

பேராசிரியர் கிரெய்க் ப்ராலி சொன்ன கருத்து இது. இதனைப் பட விளக்கத்தோடு நம்மில் பலர் பார்த்திருப்போம்.

ஒவ்வொரு மனிதரும் தனக்கான உரிமையைச் செயல்படுத்தும் சூழல் வாய்ப்பது, தனது அடிப்படைத் தேவைகள் முதல் கல்வி, சுகாதாரம் உட்படச் சமூகத்தில் அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவது,

சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் தனது பங்களிப்பை அளிப்பது, சமத்துவமான இடத்தை இச்சமூகத்தில் பெறுவது ஆகியன தான் சமூகநீதியின் அடிப்படையாக விளங்குவதாகச் சொல்கின்றனர் அறிஞர்கள்.

பாலினம், இனம், சாதி, மதம், நிறம் உட்படப் பல வகையிலும் வேறுபாடு பாராட்டப்படுவதை எதிர்த்து, அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றாக வாழ வழி செய்வதே சமூகநீதிச் செயல்பாடாக நோக்கப்படுகிறது.

சரியாகச் சொல்வதானால், ஒவ்வொருவருடைய மனித உரிமைகளும் மதிக்கப்படுவது, காக்கப்படுவது, ஊக்குவிக்கப்படுவதுதான் சமூக நீதி. ப்ராலியின் கதையும் அதையே பிரதிபலிக்கிறது.

உலக சமூகநீதி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ஆம் தேதியன்று ‘உலகச் சமூகநீதி தினம்’ பின்பற்றப்படுகிறது. 2007ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று இதற்கான அங்கீகாரத்தை ஐநா சபை வழங்கியது. 2009 முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, சமூக ஒருங்கிணைப்பைச் செயல்படுத்துவதில் சமூகநீதியின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் இத்தினம் உலகம் முழுக்கப் பின்பற்றப்படுகிறது.

‘சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடு’ என்பது இந்தாண்டுக்கான கருப்பொருளாகும்.

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டில் சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இன்று சமூக, அரசியல், பொருளாதாரச் செயல்பாடுகளில் பல முன்னேற்றத்தைக் கண்டபோதும் கூட, முழுமையான சமூக நீதி என்பது ஒரு இலக்காகவே இருந்து வருகிறது. அதனை அடைவது மட்டுமல்லாமல், அதில் திளைப்பதுதான் மனித வாழ்வின் அடிப்படையாக அமைய வேண்டும்.

அதனை நாம் ஒவ்வொருவரும் மனதில் பதித்துச் செயல்படுவது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகிற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு, மனிதர்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றாகக் கரம் கோப்பது அவசியம். அதற்கான உறுதிப்பாட்டை இந்தச் சமூக நீதி தினத்தில் மனதிலேந்திக் கொள்வோம்!

பிப்ரவரி 20 – உலக சமூக நீதி நாள் 

– சரோ

You might also like