லட்சியக் கனவுகளைச் சுமந்து, தனக்கான பாதையில் பயணித்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட வெற்றியாளர் தான் ‘விக்கிப்பீடியா’ நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.
இணையவாசிகளுக்கான இணையற்ற கருவூலமாகtஹ் திகழ்கிறது இவரின் விக்கிப்பீடியா.
கூகுளுக்கு அடுத்தபடியாக விளங்கும் விக்கிப்பீடியாவில் கிடைக்காத விவரங்களே இல்லை எனும் அளவிற்கு, தகவல்களின் பொக்கிஷமாக அனைத்து மொழிகளிலும் இயங்கி வருகின்றது.
இந்த ஆன்லைன் களஞ்சியம் உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் வாசகர்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய கட்டமைப்பை நிறுவிய ஜிம்மி வேல்ஸ், அமெரிக்காவில் 1966-ம் ஆண்டு பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தவரின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த, encyclopedia புத்தகத்தைப் பரிசளித்தார் அவரின் தாயார்.
ஆனால், ஜிம்மி எதிர்பார்த்ததை விட குறைவான கட்டுரைகள் மற்றும் தகவல்களே இடம் பெற்றிருந்ததால், அவரின் அறிவுப் பசிக்கு ஈடு கொடுக்கவில்லை.
அப்போது அவர் மனதில் அனைவரும் இலவசமாக படிக்கக் கூடிய வகையில் கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றவர், சிறிது காலம் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.
அந்த வேலையின் தன்மை தன்னைக் கவராத காரணத்தினால் அதிலிருந்து விலகியவர் தனது கனவுத் திட்டத்தை நனவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
பங்குச் சந்தையில் ஈடுபட்டு பணம் திரட்டினார். பின்பு 2000 ஆவது ஆண்டு ‘நு பீடியா’ எனும் இணையதளத்தைத் தொடங்கினார்.
இதில் வெளிவரும் கட்டுரைகள், அறிஞர்கள் உருவாக்கியதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என விரும்பி பல்வேறு அறிவுசார் கட்டுரைகளை அதில் பதிவிட்டார்.
ஆனால், இதற்கான பணிகள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் 25 கட்டுரைகளை மட்டுமே அவரால் வெளியிட முடிந்தது.
இவ்வாறு சென்றால் தனது இலக்கினை அடைய முடியாது என உணர்ந்தவர், 2001-ம் ஆண்டு ‘விக்கிப்பீடியா’ என்னும் புதிய இணையதளத்தை உருவாக்கினார்.
முன்பிருந்த தளத்தைப் போல அல்லாமல் இதில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே இருக்கின்ற கட்டுரைகளில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.
இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்ற புதிய விதிமுறையையும் கொண்டு வந்தார். எதிர்பார்த்ததைவிட மக்களிடம் இத்தளத்திற்கு அமோக வரவேற்பு காணப்பட்டது.
ஒரு மாதத்திலேயே விக்கிப்பீடியாவிற்கு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கிடைத்தன. அந்த ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டன.
நான்கே வருடங்களில் அவர் நினைத்தபடியே கலைக்களஞ்சியம் உருப்பெறத் தொடங்கியது.
அறிவுத் தேடல் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதால் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், விளம்பரம் இல்லா இலவசச் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார் ஜிம்மி வேல்ஸ்.
அதன்படி இன்று வரை விக்கிப்பீடியா பக்கத்தில் எந்தவித வணிக விளம்பரமும் தோன்றியது இல்லை.
இது ஒரு லாப நோக்கமற்ற தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படும் கலைக் கருவூலமாகும். இது நிதி உதவி மற்றும் நன்கொடைகள் மூலம் மட்டுமே இயங்குகிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 300 மொழிகளில் 66 மில்லியன் கட்டுரைகள் விக்கிபீடியாவில் எழுதப்பட்டுள்ளன.
Google, youtube, facebook ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகளாவிய இணையதளங்களில், விக்கிப்பீடியா நான்காவது இடத்தில் உள்ள ஒரு தளமாகும்.
நாம் சிந்திக்கவும் கற்கவும் நமது அறிவைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடமாக விளங்குகிறது விக்கிப்பீடியா.
இது மாதந்தோறும் பல கோடி மக்களுக்கு பல பில்லியன் இணையப் பக்கங்களைப் பார்வையிடும் சேவையை அளித்து வருகிறது.
சிறந்த திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் இலக்கு நோக்கிய கவனம் ஆகியவற்றின் காரணமாக விக்கிப்பீடியாவை உலகளாவிய நூலகமாக உருவாக்கி இருக்கிறார் ஜிம்மி வேல்ஸ்.
– எஸ். வாணி