எம்.ஜி.ஆர். பார்முலா வர வேண்டும்: இயக்குநர் சேரன் விருப்பம்!

வைகை மற்றும் தீர்க்கதரிசி ஆகிய படங்களை இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டி அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ‘4த் ஃப்ளோர்’.

ஆரி ஆர்ஜுனன் நாயகனாக நடித்துள்ளார். தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உட்பட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மனோ கிரியேஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்துள்ளார். ஜே.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்ய. தரண்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், “எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் நிறைய டப்பிங் படங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல்.

உடனடியாக எம்.ஜி.ஆர். ’எல்லா தியேட்டர்களிலும் கண்டிப்பாக 90 நாட்கள் தமிழ் படங்கள் திரையிடப்பட வேண்டும் – இல்லை என்றால் தியேட்டர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்‘ என ஆணை பிறப்பித்தார். இதனால் தமிழ் சினிமாவுக்கு உயிர் வந்தது.

அதுபோல் தமிழக தியேட்டர்களில், சிறு படங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்க வேண்டும் – அந்த நேரத்தில் பெரிய சினிமாக்கள் வரக்கூடாது. அப்படி ஒரு நிலை வந்தால், தமிழகத்தில் 3 மாதத்தில் 72 சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகும்” என சேரன் தெரிவித்தார்.

தொடர்ந்து ‘4 த் ஃப்ளோர்’ படம் பற்றி பேசிய இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி, “இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். நான்காவது புளோரில் நடக்கும் கதை என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளோம். கனவில் தெரியும் விஷயம் நிஜத்தில் நடக்கிறது. அதை ஹீரோ எப்படி கையாள்கிறார் என்பதே கதை” என்றார்.

– பாப்பாங்குளம் பாரதி.

 
 
You might also like