விதியே விதியே என்செய்வாய் என் தமிழ்ச் சாதியை?

கவிஞர் கரிகாலன் ஆதங்கம்

சூப்பர்மேன், ஹல்க், அயர்மேன், தோர், ஸ்பைடர் மேன், X மேன் உலவுகிற தேசத்தில் அவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள்? என யோசிப்பதுதான் இந்திய மனநிலை.

கடந்த இரண்டு நாட்களாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, அமெரிக்காவில் சாதி கேட்ட விசயம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முதல் நாள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான பதிவுகளை அதிகம் பார்க்க முடிந்தது.

மறுநாள் ராஜா ஒரு காணொலி வாயிலாக தன்னிலை விளக்கம் அளித்தார். அவருக்கு சாலமன் பாப்பையா போன்றோர் வக்காலத்து வாங்கியிருந்தனர்.

இப்போது ஒளித்து வைத்திருந்த சாதி காப்பாற்றும் மனம் வெளிப்படத் தொடங்குகிறது. ராஜாவுக்கு ஆதரவாக நிறைய பேர் பொங்கத் தொடங்கியிருந்தார்கள்.

ஒருவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. அநீதி நடந்த இடத்தில் நாம் இல்லை. நிகழ்ந்த அநீதிக்கான ஆதரங்கள் வெளிப்படையாக இல்லை. இதுபோன்ற தருணங்களில் நாம் எப்படி சிந்திப்பது?

பொதுவாக சமூகத்தில் victims வர்க்கத்தால், பாலினத்தால், சாதியால், மதத்தால் பின் தங்கியவராக இருந்தால், அவருக்கு ஆதரவாக சாட்சியங்கள் கிடைப்பது அரிது.

இதுபோன்ற தருணங்களில் சாதிய, பாலின, மத, ஆதிக்க சமூகத்தில் ஒரு தவறு எவ்வாறு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது? என்பதை, நாம் அடைந்திருக்கும் முன் அனுபவங்களின் வாயிலாகத்தான் அனுமானிக்க வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவானதாகவே நாம் சிந்தனை முறை அமைய வேண்டும்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சாதி ராஜா கேட்டிருப்பார் என்றே நான் கருதுகிறேன்.

இன்றைய சமூக ஊடக விழிப்புணர்வால் தனது இமேஜ் சரிவதைக் கண்டு, ராஜா வெளியிட்டிருக்கும் காணொலியில், அவரது பட்டிமன்றங்களில் தென்படும் டிராமடிக்கல் கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

நான் பேசியது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருந்தால் அந்தச் சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்! என ராஜா பேசியிருந்தால்கூட அவரை மன்னித்திருக்கலாம்.

ஆனால், ராஜா தனது தொடர்புகளின் வழி, தனக்கு சாதகமான நிலையை, அமெரிக்காவில் உருவாக்கிய பிறகு, காணொலி வெளியிடுகிறார்.

வழக்கமான ஆணாதிக்க தந்திரங்களோடு பெண்ணைக் கொண்டாடும் அதே நகாசுப் பேச்சு.

இதில் இன்னொரு விசயம். அமெரிக்கா போனாலும் தமிழர்கள் தமிழர்களாகவே இருக்கிறார்கள் என்பதை, ராஜா போன்றவர்களின் பேச்சை ரசிக்கிற மலிவான அவர்களது ரசனையிலிருந்து உணர முடிகிறது.

தனியார் கல்வி மூலம் கிடைத்த வேலை, முதலாளித்துவ சமூகத்திடம் பெறும் ஊதியம், இவற்றின் காரணமாக அமெரிக்காவிலும் முதலாளியம் மற்றும் சனாதனம் இவை இரண்டுக்கும் இசைந்து போகிறவர்களாகவே தங்கள் மனதை அமெரிக்க வாழ் இந்தியர்கள்/ தமிழர்கள் தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

இதன் பொருட்டுதான் அரசியலற்ற பேச்சாளர்களை, எழுத்தாளர்களை இவர்கள் அழைத்து தமிழ்ச் சேவை செய்வதும்.

தமிழ்ப் பண்பாட்டை அயல்நாட்டில் பேணுவதென்பது இன்னும் முற்போக்கானதாக அமைய வேண்டும். அங்கும் இட்லி, தோசை சுடுகிற, சுப்ரபாதம் கேட்கிற, தீபாவளி கொண்டாடுகிற இந்திய / தமிழ் ஞான மரபை விடாது பேணிக்காத்தால், சிலிக்கான் வேலியிலும் பொறியாளராக இருக்க வேண்டியவர்கள், செட்டியாராக, முதலியாராக, பிள்ளைமாராக, வன்னியராகவே எஞ்சுவார்கள்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like