கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.
அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில் கலந்திருக்கும். அப்படியொரு வாசனையைத் தருகிற பழங்களில் ஒன்றாகக் கருதப்படுவது துரியன்.
ஒரு சிலர் ‘வாசனையா அது நாத்தம்’ என்பார்கள். வேறு சிலரோ ‘அது ஒரு வகை வாசனைதான்’ என்பார்கள்.
அந்தக் கருத்துகளைப் புறந்தள்ளினாலும், துரியன் கடுமையான மணத்தைக் கொண்டது என்பதை மறுக்க முடியாது.
எங்கிருந்து வந்தது?
இந்தியாவைப் பொறுத்தவரை கேரளா, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களில் துரியன் விளைவிக்கப்படுகிறது.
பலாப்பழத்தின் மினியேச்சர் மாதிரி இருக்கும் இதனை மலையாளத்தில் ‘அயனி சக்கை’ என்றும் சொல்கின்றனர்.
துரியன் பழம் தென்கிழக்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இது அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
அங்கிருந்து சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது பொது இடங்களில் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், ஏற்கனவே சொன்ன ‘மணம்’ பிரச்சினைதான்.
1 அடி நீளம், அரை அடி அகலம் கொண்டிருக்கும் இப்பழம் சுமார் 1 முதல் 3 கிலோ வரை எடை இருக்கும். வெளிப்புறம் பலாப்பழம் போலவே ‘முள்’ போன்றிருக்கும்.
அதனைக் கிழித்து உள்ளிருக்கும் சுளைகளை எடுத்துச் சாப்பிடலாம். கொட்டையை வேக வைத்தும் வறுத்தும் தின்னும் வழக்கமுள்ளது.
இதனைத் தமிழில் ‘முள்நாறி’ என்கின்றனர். இது கிழக்காசிய நாடுகளில் ‘பழங்களின் அரசன்’ என்றழைக்கப்படுகிறது.
துரியனின் ஆற்றல்!
துரியன் பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் சி, பி1, பி2, பி9, பி3, மாங்கனீசு, தாமிரம், மக்னீஷியம், பொட்டாசியம் ஆகியன உள்ளன.
லேசான இனிப்பு மற்றும் புளிப்பு கலந்திருக்கும். இதனை நீரிழிவு நோயாளிகளும் உண்ணலாம் எனத் தென்கிழக்காசிய நாடுகளில் நம்பப்படுகிறது.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும், இதய நோயைத் தடுக்கும், தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும், உடை எடையை அதிகரிக்கும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனப் பல நன்மைகளைச் செய்யவல்லது.
போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் உடல் வலு குறைந்தவர்களுக்குத் திறனளிக்கும் வகையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க இது உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.
இப்பழத்தின் சாற்றை அருந்தலாம். சூப் வைத்துக் குடிக்கலாம். கொட்டைகளை உணவாகப் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம், கேண்டி ஆக்கிப் பயன்படுத்துவோரும் உண்டு.
சுமார் 40 முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய துரியன் பெரும்பாலும் மலையடிவாரப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் இயல்பு கொண்டது.
போலவே, 75 முதல் 80 சதவிகிதம் வரை ஈரப்பதமும் இதற்குத் தேவைப்படும்.
தென்னை, பலா போலவே இதன் பழங்கள் கீழே விழுந்தால் சேதாரம் அதிகம் என்பதால் இம்மரத்தின் கீழ் நடமாடக்கூடாது என்று சொல்லப்படுவதுண்டு.
தமிழ்நாட்டில் ஜூலை – அக்டோபர் வரை துரியன் பழம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சமயங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் கூடக் கிடைக்கின்றன.
இவற்றின் விலை ஒரு கிலோவுக்குச் சில நூறுகளில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகின்றன.
சீனாவுக்குத் துரியன் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால் தற்போது இம்மரத்தை வளர்க்கச் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது பலன் அளிப்பது நிச்சயம் என்று இணையத்தில் ஆரூடம் சொல்பவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
பொதுவாக, அளவுக்கு மீறிய சுறுசுறுப்பைத் துருதுருப்பு என்று சொல்வோர் உண்டு. அமைதியின்மை நிலையில் வேட்கையோடு செயல்படுவதையும் இது குறிக்கும். அப்படியொரு தன்மையைத் துரியன் பழம் ஊட்டலாம் என்று சொல்லப்படுகிறது.
’அது தேவையில்லையே’ என்பவர்கள் இதனைக் குறைந்த அளவில் சீரான இடைவெளி விட்டு உண்ணுவது அவசியம்.
‘அளவோடு உண்டு வளமோடு வாழ்’ என்று வகுத்துக்கொண்டு வாழ்ந்த தமிழ் மண்ணில் துரியனுக்காகத் தனியாக அறிவுரைகள் கூறத் தேவையில்லைதான்..!
- சரோ