இந்தியாவில் குடைகள் அறிமுகமானது இப்படித்தான்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10-ம் தேதி சர்வதேச குடை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் குடைகள் உருவான கதையைத் தெரிந்துகொள்வோம்…

எகிப்தியர்கள்தான் முதலில் குடைகளைப் பயன்படுத்தியவர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை மழையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக குடைகளைப் பயன்படுத்தவில்லை.

மாறாக வெயிலின் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குடைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் வரும்போது, அவர்கள் மீது வெயில் படக்கூடாது என்பதால் இவற்றைத் தயாரித்துள்ளனர்.

அரசர்கள் வெளியில் வரும்போது ஒரு வேலையாள் இந்தக் குடைகளைப் பிடிப்பது வழக்கமாக இருந்துள்ளது.

பனைமரத்தின் ஓலைகள், இறகுகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி அவர்கள் குடைகளைத் தயாரித்துள்ளனர்.

எகிப்து நாட்டு அரச குடும்பத்தினர் குடைகளைப் பயன்படுத்தியதற்கு ஆதாரமாக மெசபடோனியாவில் சில பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன.

அரசர்களுக்கு பின்னே ஒரு வேலையாள் இந்த குடையைப் பிடித்து நிற்கும் காட்சி இந்த பாறை ஓவியங்களில் உள்ளன.

பண்டைய எகிப்தியர்கள் பனை ஓலைகள், இறகுகள் மற்றும் பாப்பிரஸ் (papyrus) தாள்களைக் கொண்டு குடைகளை உருவாக்கினர்.

இவை ரதங்களில் பொருத்தப்பட்டன அல்லது அரச குடும்பத்தினர் மற்றும் தெய்வ பிம்பங்கள் சுட்டெரிக்கும் ஆப்பிரிக்க சூரியனுக்குக் கீழே ஊர்வலமாகச் செல்லும்போது, பணியாட்களால் அவர்கள் தலைக்கு மேல் பிடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து குடைகளைப் பயன்படுத்தும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பனை ஓலைகளை முடைந்து அதைக் குடைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சீனர்களும் கிமு 1100-ல் வாட்டர் ப்ரூப் குடைகளைப் பயன்படுத்தி வந்ததாக அந்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேவைப்படும்போது திறந்து, தேவை முடிந்ததும் மூடக்கூடிய குடைகளை சீனர்கள் கிமு 600-ல் கண்டுபிடித்தனர்.

ஆரம்ப கட்டத்தில் பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

வெயில் மற்றும் மழையை பெண்களின் மென்மையான உடல் தாங்காது என்பதால் குடைகள் அவர்களுக்கான தயாரிப்பு.

மிடுக்கான, உறுதியான ஆண்கள் இதைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற எண்ணம் அப்போது இருந்தது.

பின்னர் காலப்போக்கில் ஆண்களும் குடைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

1800-களில் இங்கிலாந்தில் ஸ்டீல் மற்றும் துணியைப் பயன்படுத்தி குடைகளைத் தயாரிக்கும் முறை அறிமுகமானது.

மழையில் இருந்து நம்மை காக்கும் ‘வாட்டர் ப்ரூப்’ குடையை அறிமுகப்படுத்தியவர் சாமுவேல் ஃபாக்ஸ் என்ற ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்,

1852-ம் ஆண்டில் அவர் இந்தக் குடையைக் கண்டுபிடிக்க, இங்கிலாந்து மக்கள் இதைப் பயன்படுத்த தொடங்கினார்கள்.

1852-ம் ஆண்டில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட குடை, இந்தியாவுக்குள் 1860-ம் ஆண்டில் நுழைந்தது.

மும்பையில் இப்ராஹிம் குரிம் என்பவர் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடைகளை விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனத்தை தொடங்கினார்.

அவர் அந்த குடைகளைப் பழுதுபார்க்கும் கலையையும் கற்றுக்கொண்டு அத்தொழிலை விரிவுபடுத்தினார்.

அவர் மூலம் மும்பை, கோழிக்கோடு மற்றும் சென்னை பகுதி மக்களிடையே குடைகள் பிரபலமாகத் தொடங்கின.

இந்தியாவில் நவீன குடைகள் அறிமுகமானது இப்படித்தான். அதுவரை பனை ஓலைகளால் செய்யப்பட்ட குடைகளையே இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர்.

பூமியில் மட்டுமில்லாமல் விண்வெளியிலும் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆராய்ச்சிக்காக விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், விண்கலத்தில் இருந்து வெளியில் வரும்போது அங்குள்ள கடுமையான சூழலைச் சசமாளிக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குடைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த விண்வெளி குடைகள் சூரியனின் வெப்பம் மட்டுமின்றி கதிர்வீச்சில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறது.

இரண்டாக அல்லது மூன்றாக மடிக்கப்படும் குடைகள்தான் இப்போது அதிகம் விரும்பப்படுகின்றன.

அவற்றை பைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த மடக்கும் குறைகள் அறிமுகமான ஆண்டு 1928. ஜெர்மனி நாட்டில் இது முதல் முறையாக அறிமுகமானது.

– பி.எம். சுதிர்

You might also like