பிரிஷா – அறியப்படாத அதிசயப் பெண்!

ஐம்புலன்களைக் கொண்டவன் மனிதன் என்ற போதிலும், நுண்ணறிவின் துணை கொண்டு உருவத்தில் புலப்படாத புலன் மூலம் உலகை காண்பவர்களும் உண்டு. அத்தகைய ஒருவர் தான் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷா.

அதிசயப் பெண் என்று வர்ணிக்கப்படும் இவர், தனது உடம்பில் உள்ள மூன்றாவது கண்ணை செயல்படச் செய்துக் காண்போரை வியக்க வைக்கிறார்.

தன் தாய் மற்றும் பாட்டி, யோகா செய்வதைக் கண்டு, குழந்தை பருவத்திலேயே தியானம் மற்றும் யோகக் கலையை கற்கத் துவங்கியவர், தனது ஒன்பதாவது வயதில் பார்வையற்றோருக்கான உலகின் இளவயது யோகா ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், இத்துறையில் 101 உலக சாதனைகளைப் படைத்த, உலகின் முதலாவது இளம் வயது பெண்ணும் இவரே ஆவார்.

மூன்றாவது கண் என்பது இறைநிலையைக் கொண்டவர்களுக்கு மட்டுமே அமையும் என்பார்கள்.

சாதாரணமாக பார்த்து செய்யும் செயல்களை எல்லாம், கண்ணைக் கட்டிக்கொண்டு செய்யும் திறன் பெற்றவராக இவர் அறியப்படுகிறார்.

அதாவது சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், கத்தியைக் கொண்டு செய்யும் விரல் வித்தை, யோக நிலையில் வேலைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல தளங்களில் இவர் சாதனை படைத்துள்ளார்.

ஆழ்கடல் நீச்சலில் மட்டும் பதினாறு உலக சாதனைகள் இவர் வசமுள்ளன.

கண்ணைக் கட்டிய நிலையில், பிறர் காட்டும் முத்திரைகளை கூறுதல், பிறர் எழுதிய வாக்கியங்களை எழுதுதல், திரையில் தோன்றும் நபரை அடையாளம் காணுதல், வண்ணங்களை வரையறுத்தல் போன்றவற்றை சரியாக செய்து அதிசயிக்க வைக்கிறார்.

யோகக் கலையின் மூலம் தனது மூன்றாவது கண் செயல்படுவதால் இவை அனைத்தும் சாத்தியமாகிறது என கூறும் இவர், பார்வையற்றோருக்கான பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள், காவல்துறை அலுவலகங்கள் ஆகிய இடங்களில் யோகக் கலை வகுப்புகளை எடுக்கிறார்.

மலேசியா, துபாய் ஆகிய நாடுகளிலும் இதனைப் பயிற்றுவிப்பவர், தனது பார்வையற்ற மாணவர் ஒருவரையும் உலக சாதனை புரிய வைத்திருக்கிறார்.

போட்டித் தேர்வுகளில் இவரைப் பற்றிய கேள்விகள் இடம்பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்படுகிறார்.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பங்கு பெற்று 200 தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.

இந்தத் துறையில் இவரின் சிறந்த பங்களிப்பிற்காக மூன்று கௌரவ டாக்டர் பட்டங்களை இந்தியா மற்றும் அமெரிக்காவில் பெற்றுள்ளார்.

யோகக் கலை குறித்து இவர் எழுதிய “இன்றே செய்வோம் இன்பம் பெறுவோம்” என்ற புத்தகம் எல்லோராலும் விரும்பப்படுகிறது.

ஞாபகத்திறன் மேம்படுதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், உடல் வலுப்பெறுதல் போன்ற ஏராளமான பயன்களைப் பெற முடியும் என்ற கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், யோகக் கலையின் மூலம் எல்லா நலன்களையும் பெற முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்று கூறுகிறார் இந்த அதிசயப் பெண்.

  • எஸ்.வாணி
You might also like