எண்ணெய்க் கிணறுகளும் எரியும் தேசங்களும்!

பத்திரிகையாளர் டி.வி. சோமு

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீண்டும் ஒருமுறை லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு உதவுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா.

நேற்று அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.

ஆனால், இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பது போதைப்பொருள் ஒழிப்பு அல்ல; மாறாக, நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கம் என்பதே!

…………………………………..

எண்ணெய் வளம் மற்றும் கியூபா:

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் ஒளிந்துள்ளன:

உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகளில் வெனிசுலா முதன்மையானது.

தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்காத ஒரு நாடு இவ்வளவு பெரிய வளத்தைக் கொண்டிருப்பதை அமெரிக்கா எப்போதும் விரும்புவதில்லை.

அடுத்து….

கியூபா. இது ஒரு கம்யூனிச நாடு. ஆகவே, ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்து இருக்கிறது அமெரிக்கா.

இதனால், அங்கு ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறை. வெனிசுலாவிலிருந்து வரும் எண்ணெய்தான் கியூபாவுக்கு உயிர் மூச்சு. அதை நிறுத்தவே வெனிசுவேலா மீது அடக்குமுறையை ஏவி இருக்கிறது அமெரிக்கா.

…………………………………….

அடுத்த திட்டம்.

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சடோவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, அதை அரசியல் என்று விமர்சித்தது அமெரிக்கா.

இப்போது அவரையே ஒரு “பொம்மை அதிபராக” முன்னிறுத்த முயல்கிறது.

…………………………………….

அமெரிக்கா இதுவரை சிதைத்த நாடுகள்.

@ 2011 – லிபியா:

ஆப்பிரிக்காவின் மிகவும் வளமான நாடாக இருந்த லிபியாவை, அதன் அதிபர் முஅம்மர் கடாபி ஒரு தனித்துவமான பொருளாதார சக்தியாக மாற்ற முயன்றார்.

டாலருக்குப் பதில் “ஆப்பிரிக்கத் தங்கத் தினார்” (Gold Dinar) என்ற நாணயத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டார். இதுதான் அவர் செய்த ‘பாவம்’.

‘ஜனநாயகம்’ என்ற பெயரில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மூலம் லிபியா தாக்கப்பட்டது. கடாபி மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இன்று லிபியா ஒரு சிதைந்த நாடாக, உள்நாட்டுப் போரிலும் அடிமைச் சந்தைகளிலும் சிக்கித் தவிக்கிறது.

@ 1989 – பனாமா

அப்போதுஆட்சி செய்த மானுவல் நோரிகா ஒரு காலத்தில், அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்தவர்தான்.

ஒருகட்டத்தில், அவர் அமெரிக்கப் பேச்சைக் கேட்க மறுத்தார். அவர் மீது(ம்) “போதைப் பொருள் கடத்தல்” குற்றச்சாட்டைச் சுமத்தியது அமெரிக்கா. பனாமா நகரைச் சிதைத்தது.

அதிபர் நோரிகா கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டார். பனாமா கால்வாயின் முழு உரிமை மீண்டும் அமெரிக்கா வசம் வந்தது.

@ 1973 சிலி

தென் அமெரிக்க நாடான சிலியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அதிபராக விளங்கினார் சால்வடார் அல்லண்டே.

அவர், சிலியின் செம்பு சுரங்கங்களைத் தேசியமயமாக்கினார். இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

உடனே அமெரிக்கா, தனது உளவுப்படையான சி.ஏ.ஐ.வை ஏவியது. அங்கு ராணுவப் புரட்சி நடத்தப்பட்டு, அல்லண்டே கொல்லப்பட்டார்.

அவருக்குப் பதில் அகஸ்டோ பினோசெட் என்ற கொடூரமான சர்வாதிகாரியை அமெரிக்கா அமரவைத்தது.

இவருடைய ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்ன, சிலி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. போதாதா?

@ 1954 – குவாத்தமாலா

குவாத்தமாலாவில் அமெரிக்காவின் ‘யுனைடெட் புரூட்’ (United Fruit Company) என்ற நிறுவனம் ஏராளமான நிலங்களை வைத்து இருந்தது.

உள்ளூர் மக்களுக்கோ நிலம் இல்லை.

ஆகவே, அதிபர் ஜேக்கப் ஆர்பென்ஸ், அந்த நிறுவனத்திடம் இருந்த உபரி நிலங்களை கையகப்பட்டுத்தி, ஏழைகளுக்கு அளித்தார்.

பொறுக்குமா அமெரிக்கா… தனது சி.ஐ.ஏ. மூலம் கிளர்ச்சியைத் தூண்டி அவரை ஆட்சியிலிருந்து அகற்றியது.

தவிர, “ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார்” என ஈராக் அதிபர் சதாம் மீது குற்றம் சாட்டி அவரைக் கொன்றுவிட்டு… பிறகு, “அங்கு ரசாயன ஆயுதங்கள் இல்லை” என்று சொன்னதையும் அறிவோம்.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த உலம், இப்போது வெனிசுவேலா அதிபர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு வீசப்பட்டு, கைது செய்யப்பட்டு இருப்பதையும் வேடிக்கைதான் பார்க்கப்போகிறதா…

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

You might also like