ஹரிஹரனின் மென் குரலில் இருக்கும் வசியத் தன்மை!

திரை இசையில் எத்தனையோ குரல்கள் வலம் வந்தாலும், அபூர்வமானது பாடகர் ஹரிஹரனின் குரல். அவரது குரலில் அவ்வளவு மென்மைத் தன்மை இருக்கும். இளம் காற்று வீசுவது போலவும் இருக்கும்.

சொற்களை உச்சரிக்கும் விதம் துல்லியமாக இருக்கும். கேட்கிறபோது லேசாகக் கிறங்க வைக்கிற படியும் இருக்கும்.

கஜல் வரிசையில் பல பாடகர்கள் இருந்தாலும், அதில் மிகவும் தனித்துவத்துடன் ஒலித்தக் குரல் ஹரிஹரனுடையது.

கஜல் பாடலைப் பாடும்போது அதை அவ்வளவு மென்மையாகவும் அதற்கான சங்கதிகளுடனும் வெவ்வேறு ராகத்திற்கான இழுவைகளுடனும் அவர் பாடும்போது, அதைக் கேட்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

மதுரையில் அவர் நடத்திய ஒரு கஜல் நிகழ்ச்சிக்குப் போனபோது தான் அவரது வசீகரமான குரலுக்கு இருந்த அபாரமான வீச்சு வெளிப்பட்டது.

உற்சாகம் ததும்பத் ததும்ப அவர் பாட, அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் சோடா பாட்டில் தளும்புவதைப் போல தளும்பிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வளவு ஜாலியாக ரசிகர்களை உற்சாகமாய் வைத்திருந்தார் ஹரிஹரன்.

பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை எல்லாம் வசீகரித்தது அந்தக் கச்சேரி. பிறகு வெவ்வேறு மேடைக் கச்சேரிகளில் அவர் குரலில் காட்டும் ஜால வித்தைகளைக் கேட்டிருக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘ரோஜா’ படத்தில் “தமிழா தமிழா” என்ற பாடலின் மூலம் இவரது குரலைத் தமிழ்த் திரை இசையில் நுழைத்தபோது, அதில் அவரது முயற்சியை உணர முடிந்தது.

அதையடுத்து ‘பம்பாய்’ படத்தில் அவர் பாடிய  “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு” உள்ளிட்ட பாடல்கள் அவரை அடுத்தடுத்த உச்சிக்கு நகர்த்தின.

‘காதலுக்கு மரியாதை’ படத்தில், “என்னைத் தாலாட்ட வருவாளா” பாடலும் தேவாவின் இசையில் ஆசைப்படத்தில் இடம் பெற்ற ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலும்,

‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில், வித்யாசாகர் இசையில் “ஏதோ ஒரு பாட்டு” பாடலும் ‘நேருக்கு நேர்’ படத்தில் இடம்பெற்ற “அவள் வருவாளா” உள்ளிட்ட பாடல்கள் வழியாக அவரது குரல் தமிழ்த் திரையிசையில் தவிர்க்க முடியாத அங்கத்தைப் போல் பரவி இருந்தது.

அவரும் சென்னைக்கு அடிக்கடி வந்து தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு இசைக் கச்சேரியிலும் வெவ்வேறு ஹேர் ஸ்டைலிலும், வித்தியாசமான உடையிலும் வந்து அவரது குரலைப் பரப்பிக் கொண்டே இருந்தார்.

தமிழ்ப் படம் ஒன்றில் மற்றொருவருடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார் ஹரிஹரன்.

தமிழில் கஜல் கொண்டு வர முயற்சித்தபோது கவிஞர் வைரமுத்துவின் வரிகளில், தமிழில் கஜல் முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும், அதில் ஹரிஹரன் தனது வழக்கமான பாணியிலேயே அசத்தியிருந்தாலும், ஏனோ பெருமளவில் கவனிக்கப்படவில்லை.

அடுத்தடுத்து பல பாடல்களில் இடையறாது பாடிய உயிரோட்டமுடைய குரல் ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையிசையில் ஒலிப்பது குறைந்து கொண்டே வந்தது.

தற்போது பல இளம் பாடகர்கள் வந்து, தமிழிசை பரப்பும் வேறொரு தளத்திற்கு விரிவடைந்து கொண்டே போனாலும்,

பல புது பின்னணிப் பாடகர்கள் காலத்தின் தேவைக்கேற்ப உருவாகிக் கொண்டே இருந்தாலும்,

எப்போதாவது தொலைக்காட்சியில் ஹரிஹரனின் மென் சிறகைப் போன்ற அந்தக் குரலை கேட்கும்போது மீண்டும் தமிழ்த் திரையிசையில் அவரது குரல் ஒலிக்காதா என்கின்ற எண்ணம் வெளிப்படத்தான் செய்கிறது.

அதற்கு, அவரது மென்குரலில் எழுந்த வசியத்தன்மை தான் காரணம். 

– மணா

You might also like