நூல் அறிமுகம் : சிற்றலை மீதமர் தும்பி
***
//நீயாகத்
திறக்கும் வரை
திறக்கப் போவதில்லை
தாழிடப்பட்டவை//
எத்தனையோ கவிதைகள் இந்த கவிதைகளுக்கு முன்பாக இருந்தாலும் எனக்கு இங்கிருந்துதான் துவங்க வேண்டும் என்றிருந்தது.
ஏனெனில் இப்படித்தான் சிலவற்றை சொல்லத் தெரியாமலோ, சொல்ல முடியாமலோ, சொல்ல விருப்பமற்றோ தாழிட்டு வைத்திருக்கிறோம் ஒவ்வொருவரும் ஓராயிரம் உணர்வுகளை.
அவை அப்படியே தாழிடப்பட்டவையாக இருக்கட்டும். ஆனால், வெளிப்படுவதென்று ஒரு நாளை உகந்ததாய் சொல்கிறார். அதுதான் நீ வந்து திறக்கும் நாள்.
இன்னொரு கவிதை பச்சை மண் குறித்தது.
இப்படியே இருந்து விடக் கூடாதா என்கிற ஆசையும் இப்படியே இருந்து விடமாட்டோமா என்கிற ஏக்கமுமாக இருக்கிறது.
துளிரோ, சருகோ ஒன்றனவே, கொண்டாடி மகிழும் பிள்ளை மனம் பச்சை மண்ணிற்கு என்கிறார்.
ஏன் மரணம் கூட இப்படித்தான் முதிர்ந்ததா, சிறு பிள்ளையா என்பதைப் பார்ப்பதேயில்லை. அதேபோலத்தான் துண்டித்து விழுவது துளிரா சருகா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை எல்லாவற்றையுமே மட்கிச் செரிக்கிறது இந்த பச்சை மண்.
//சடங்குகள்
மரியாதைகள் செய்து
பாடையில் சென்று
முச்சந்தியில் மூன்று முறை சுற்றித்
திரும்புகையில்
கடைசியாய் ஒரு முறை
பார்த்துக் கொண்டான்
தூக்கிச் சுமந்த வீட்டை//
எப்படிப்பட்ட ஒரு காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
முச்சந்தியில் மூன்று முறை சுற்றித் திரும்பும் பாடையைத்தான் எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். இங்கு பாடையில் இருப்பவன் பார்த்துக் கொள்கிறான் தன்னை தூக்கிச் சுமந்த வீட்டை.
இதோ இன்னொரு கவிதையும் மரணத்தைப் பேசுகிறது. மரணத்தின் பயணத்தை பேசுகிறது.
// சிவப்பு மஞ்சள் பச்சை
விளக்குகளைக் கடந்து செல்கிறது
யாரோ ஒருவரின்
இறுதிப் பயணம்//
கவிதைகளில் ஆங்காங்கே இந்த மரணத்தின் துளிகளைத் தூவியிருக்கிறார். காரணம் என்னவாக இருக்கும் என்கிற மனது இயல்பாய் தேடி அலைந்து, அதுவே ஒரு காரணத்தை வரித்துக் கொள்கிறது.
எல்லோரும் இப்படித்தான். இப்படியாக இருக்குமா? அப்படியாக இருக்குமா என்று… அதிலும் பெண் கவிதைகள் என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே ஆய்வு செய்யத் தோன்றுகிறது.
இந்தக் கவிதையைப் பாருங்கள்.
//பழுத்த இலையைத்
தானாகவே உதிர்க்கும்
அந்தப் பெரும் மரம்
பிஞ்சிலையைக்
கிள்ளி எடுக்கும் போது மட்டும்
அப்படிக் கசிகிறது.//
வாழ்வின் இன்னொரு பொருண்மையை இது சொல்லுகிறது.
தளிரோ சருகோ இரண்டையும் ஒன்றாகச் செரிக்கும் பச்சை மண்ணையும், பழுத்த ஒன்றை உதிக்கும் போது சலனப்படாத மரம் கிள்ளி எடுக்கும்போது கசியுமதன் கண்ணீரையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.
//பெருங்கடல் கடக்கும்
சிறு பறவை
இளைப்பாறக்
கவ்விப் பறக்கும்
குறுங்குச்சி தான்
எனக்கு நீ //
நீண்ட தூரம் வலசை செல்லும் பறவைகள் இடையில் கடலில் இளைப்பாற தன் வாயிலேயே கவ்விச் சொல்லும் சிறு குச்சிகளைக் குறிப்பிடுகையில் அது ஒரு அறிவியல் செய்தியை சொல்கிறது. சூழல் சார்ந்த ஒரு குறிப்பைச் சொல்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி இந்த வாழ்வில் எனக்கான அந்த சிறு குச்சி நீதான் என்று தனக்கான இளைப்பாறுதலையும் சொல்லிவிடுகிறது. வேறு என்ன பெரிதான வேண்டுதல்கள் இருக்கப் போகிறது?!
//இன்னும்
வெகு தொலைவு
நடக்க வேண்டும்.
கொஞ்சம்
உன் நிழலில்
இளைப்பாறிக்கொள்ளவா?
அதோ
அந்த சிற்றலையில்
அமர்ந்து சிறகு விரிக்கும்
அந்தத்
தும்பியைப் போல//
![]()
அவ்வளவுதான். இன்னும் எவ்வளவு தூரம் பயணம் என்பது குறித்து எந்த கவலையும் இல்லை. எவ்வளவு தூரம் இருக்கலாம் என்பது குறித்தும் எந்த அனுமானமும் இல்லை. அத்தனை தொலைவும் என்னுடன் இருக்க வேண்டும் என்பதும் கோரிக்கை அல்ல.
எந்த நேரம் பறக்கத் தயாராக சிறகு விரித்திருக்கும் அந்த தும்பியைப் போல கொஞ்ச நேரம் உன் நிழலில் இளைப்பாரிக் கொள்ளவா? என்கிற அந்த உயிர் அதற்காக ஏங்கி நிற்கிறது.
அதை மட்டும்தான் அந்த சிறு உயிர் வேண்டி நிற்கிறது. எல்லா நேரங்களிலும் அது கிடைத்து விடுகிறதா என்பதும் கேள்விக்குறி.
எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே வரும்போதும் மீசையைக் கொண்டாடி ஒரு கவிதை.
//நெருப்பின் சூடும்
மழையின் குளிரும்
கொண்ட
நிறைமேகம்
அவன் மீசை.//
ஆஹா… ஒரு பெண் ஆணைக் கொண்டாடி எழுதக்கூடும் கவிதைகள் எத்தனை ஆர்ப்பாட்டங்களாக இருக்கிறது. எத்தனை ஆர்ப்பரிப்புகளைத் தருகிறது.
ஆனாலும் கேட்பார்கள் இப்படி எல்லாம் பெண் கவிஞர்கள் எழுதினால் யாரை நினைத்து எழுதினாய் என்று. ஆனால், பாருங்கள் ஆண் கவிஞர்களிடம் யாரும் கேட்பதே இல்லை.
பொதுவாகப் பார்த்தால் ஒரு ஆண் கவிதை எழுதும் போது இயற்கையை எழுதுகிறான். பிறகு பெண்ணை எழுதுகிறான். பிறகு காதலை எழுதுகிறான். அதிகபட்சமான பொருண்மை அதுவாகத்தான் இருக்கும்.
ஒரு பெண் கவிதை எழுதும் போதும் அதே இயற்கையைப் பாடுகிறார், ஆணைப் பாடுகிறார், காதலைப் பாடுகிறார். ஆக இரண்டு உயிர்களும் பொதுவாகத்தானே இருக்கிறது. இந்த இருமைகளின் உணர்வுகளும் ஒன்றாகத்தானே இருக்கிறது.
ஆனாலும் ஏன் இந்தக் கேள்விகள் பெண்ணிடம் மட்டும் அதிகமாக இருக்கிறது என்கிற கேள்வி எனக்குள் இருக்கும். இவரிடம் எத்தனை பேர் கேட்டார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கொட்டி பதில் கூறியிருப்பார் குறும்புக்காரி ரேவதி😀😀.
இன்னொரு கவிதையில், ‘நான் மனம் மயக்கும் பூ பூக்கும் பூங்கொடிதான், ஆனால் படர ஒரு மரம் வேண்டுமே’ என்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் திடமான மரமே ஆயினும் காதல் அதை இளக்கி விடுகிறது.
மரம் கொடியானால் அதைத் தாங்கும் அளவிற்கு கொப்பு வேண்டுமே அதுதான் சிக்கல்.
//எத்தனையோ செற்கள் இருக்கு
தேடிப் போய்
என்னை நிலை குலையச் செய்யும்
அந்தச் சொல்லை
எப்படி மிகச் சரியாக
தேர்ந்தெடுத்தாய்
என்பதில் இருக்கிறது
நம் உரையாடல் தொடர்வதற்கான
மாயச் சாவி//
இதை இரண்டு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
எத்தனையோ சொற்கள் இருக்கும்போது அதை ஏன் சொன்னாய் என்கிற ஆற்றாமை, தீயென உள்ளே எரிந்து கொண்டே தான் இருக்கும்.
ஆயினும் இடைவெளிகள் பேணும் இந்த நாட்களில் அந்த சொற்களைத் தேடி எடுத்து எப்படி காலம் காலமாய் இடையில் பூத்துக் கிடந்த இடைவெளியை நொறுக்கி இணையானாய் என்பதாகவும் இருக்கிறது.
ரேவதி அவர்களின் கவிதைகள் சமூகத்தை கேள்வி கேட்கும், அதுவே பதில்கள் தேடும்.
காதலை நிரப்பும், இயற்கையை சுவாசிக்கும் இந்தக் கவிதைகளும் அப்படியே தான் இருக்கிறது வாழ்த்துக்கள் Revathi Ram ரேவதிராம்.
– சுமித்ரா சத்தியமூர்த்தி
******
நூல் : சிற்றலை மீதமர் தும்பி!
நூலாசிரியர் : ரேவதி ராம்
பதிப்பகம்: வியன் பதிப்பகம்
புதுக்கோட்டை
பக்கங்கள் : 114
விலை: ரூ. 120/-