ஓவியர் லியானார்டோ டாவின்சி வரைந்த உலகப்புகழ் பெற்ற ஓவியம், மோனாலிசா ஓவியம்.
30க்கு 20 அங்குல உயிரோவியம் அது.
1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி திங்கள்கிழமை காலை. பாரிஸ் லூவ்ர் அருங்காட்சியகத்தில் வழக்கம் போல காவலாளிகள் காவல்சுற்று (ரோந்து) வந்தார்கள்.
மோனாலிசா ஓவியத்தை மாட்டி வைத்திருந்த சுவரில் மோனாலிசாவை காணவில்லை.
காவலாளிகள் யாரும் அதனால் கலவரமடையவில்லை. ‘அட, சுத்தம் செய்றதுக்காக எடுத்துப் போயிருப்பாங்கப்பா. அல்லது அருங்காட்சிய அலுவலர் யாராவது புகைப்படம் எடுக்க எடுத்துப் போயிருப்பாங்க’ என்கிற முடிவுக்கு காவலர்கள் வந்தார்கள்.
இந்த நினைப்பில் வழக்கம் போல அவர்களது கடமையைப் பார்க்கப் போய்விட்டார்கள். மறுநாள் செவ்வாய்க்கிழமை தான் மோனாலிசா ஓவியம் காணாமல் போய்விட்ட தகவல் தெரியவந்தது. ஒரே பரபரப்பு.
ஓவியம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உறை அப்படியே இருந்தது. ஓவியத்தின் சட்டகம் (ஃபிரேம்) ஒரு படிக்கட்டுச்சுவர் பக்கம் கிடந்தது. ஓவியத்தை யாரோ லவட்டி விட்டார்கள் என்பது அப்போதுதான் உறுதியானது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வின்சென்சோ பெருஜியா. இவர், அதே லூவ்ர் அருங்காட்சியகத்தில் கைவினைஞராக, பழுதுபார்க்கும் வேலையாளாக பணிபுரிந்து வந்தார்.
ஓவிங்களுக்கு கண்ணாடி உறை மாட்டுவது இவரது வேலை. மியூசியத்தை மூடும் நேரம் பெருஜியா, மோனாலிசா ஓவியத்தைத் திருடி ஒரு சிறிய அலமாரியில் ஒளித்து வைத்திருக்கிறார்.

பிறகு ஓவியத்தின் சட்டகத்தைக் கழற்றி படிக்கட்டு அருகே போட்டுவிட்டு ஓவியத்தை சட்டைக்குள் திணிந்து விட்டு வெளியே போய்விட்டார்.
பழகிய முகம் என்பதால் அவர் மீது யாருக்கும் ஐயம் ஏற்படவில்லை.
அவ்வளவுதான் 400 ஆண்டு பழமையான அந்த ஓவியம் அவருடன் போயே போய்விட்டது.
வெறும் முப்பது மணித்துளிகளில் இந்த ஓவியத் திருட்டு நடந்து முடிந்திருந்தது.
மூளையைப் போட்டு ரொம்பவும் குழப்பிக் கொள்ளாமல், எந்த நவீன கருவிகளையும் பயன்படுத்தாமல் எளிதாக மோனாலிசாவை நகர்த்தி விட்டார் பெருஜியா.
மறுநாள் உலகமே பரபரப்பானது. நாளிதழ்களில் அது முதல் பக்க செய்தி. பிரான்ஸ் அரசு கடும் நெருக்கடியில் சிக்கியது. லூவ்ர் அருங்காட்சியக இயக்குநர் பதவி துறந்தார்.
இந்த ஓவியத் திருட்டு தொடர்பாக நூறு பேர்களிடம் பிரெஞ்சு காவல்துறை புலனாய்வு செய்தது. கேள்விகள் கேட்டு குடைந்தது. ஓவியர்கள், தரகர்கள், திருடர்கள் யாரும் தப்பவில்லை.
மோனாலிசா ஓவியம் திருடுபோனபோது காவல்துறையால் விசாரிக்கப்பட்டவர்களில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவும் ஒருவர்(!)
ஒருமுறை திருட்டுப் பொருளான ஒரு ஐபீரியன் சிலையை தெரியாமல் ஆசைப்பட்டு வாங்கியவர் பிகாசோ.
அதன்பிறகு அந்த சிலை வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தெரிந்து விடுவிக்கப்பட்டார்.
அந்த அடிப்படையில்தான் மோனாலிசா திருடு போனபோதும் பிகாசோவிடமும் விசாரணை நடந்தது.
மோனாலிசா, ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால ஓவியம். 1910ல் இந்த ஓவியத்தைப் பற்றி பெரிதாக யாருக்கும் அப்போது தெரியாது. லூவ்ர் அருங்காட்சியகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள், கலைப்பொருள்களில் மோனாலிசாவும் ஒன்று. அவ்வளவுதான்.
ஆனால், மோனாலிசா திருடுபோனதால் அதன்புகழ் திடீரென பல்கிப் பெருகியது. பல மாதங்களாக அதுபற்றி செய்திகள் நாளிதழ்களில் இடம்பிடித்தன.

யார் எடுத்திருப்பார்கள்? ஏன் எடுத்தார்கள்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.
உலக வரலாற்றில் ஓர் ஓவியம் திருடு போனதற்கு அவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது அதுவே முதல்முறை.
லூவ்ர் மியூசியத்தில் மோனாலிசா ஓவியம் தொங்கிய சுவரில் வேறு ஓவியம் எதையும் மியூசிய நிர்வாகம் மாட்டி வைக்கவில்லை.
அந்த இடம் அப்படியே காலியாக விடப்பட்டது. அந்த வெற்றுச் சுவரைப் பார்க்க கூட்டமோ கூட்டம்.
மோனாலிசா ஓவியம் தொங்கியபோது வராத கூட்டம், அந்த வெறும் சுவரைப் பார்ப்பதற்காக வந்தது. அந்த வெற்றிடம் அந்த அளவுக்கு வேலை செய்தது.
மோனாலிசா இல்லாத அந்த வெற்றுச் சுவரின் படம், அஞ்சல் அட்டைகளில் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. மோனாலிசா ஓவியம் அச்சிட்ட அஞ்சல் அட்டைகளை விட இந்த வெற்றுச் சுவர் அஞ்சல் அட்டை விற்றுத் தீர்ந்தது.
இப்போது, ஓவியத்தைத் திருடிய பெருஜியாவுக்கு வருவோம். தனது டிரங்குப் பெட்டியின் உள்ளே அதன் அடிப்பகுதியில் ரகசிய இடம் அமைத்து மோனாலிசா ஓவியத்தை பெருஜியா ஓளித்து வைத்திருந்தார். அந்த டிரங்குப் பெட்டியுடன் அவர் இத்தாலிக்குப் போய்விட்டார்.
‘ஓவியர் டாவின்சி இத்தாலிக்காரர். அவர் வரைந்த மோனாலிசா ஓவியம் இத்தாலி நாட்டுக்குச் சொந்தமானது.
பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் இந்த ஓவியத்தைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஆகவே நான் அதை மீட்டு மீண்டும் இத்தாலிக்கு கொண்டு வந்துவிட்டேன்’ இதுதான் பெருஜியா தனக்குத்தானே கூறிக்கொண்டது நியாயம்.
ஆனால், பாவம். ஓவியர் டாவின்சிதான் பிரான்ஸ் நாட்டுக்குப்போனபோது அந்த ஓவியத்தை கையோடு எடுத்துச் சென்றார். பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸ் உரிய விலை கொடுத்து அதை வாங்கிக் கொண்டார் என்பதெல்லாம் பெருஜியாவுக்குத் தெரியாது.
1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். ஃபிளாரன்ஸ் நகரத்தில் உள்ள ஓர் ஓவியத் தரகரிடம் மோனாலிசா ஓவியத்தைக் காட்டியபோது பெருஜியா பிடிபட்டார். டிசம்பர் 13ல் ‘வளைகாப்பு’ வைபவம் நடந்தது.
மீட்கப்பட்ட மோனாலிசா ஓவியத்தை இத்தாலி நாட்டு அரசு உடனே பிரான்சுக்கு அனுப்பவில்லை.
ஃபிளாரன்ஸ், ரோம், மிலன் போன்ற நகரங்களில் கண்காட்சிக்கு வைத்து விட்டே அனுப்பியது. பெருஜியாவுக்கு 7 ஆண்டு சிறை.
அதன்பின் லூவ்ர் அருங்காட்சியகத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடி தடுப்புக்கு பின்னே மோனாலிசா தொங்கவிடப்பட்டாள்.
பார்வையாளர்கள் அனைவரும் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று தடுப்பு அமைத்து தள்ளிவைக்கப்பட்டார்கள்.

பிரான்ஸ் நாட்டின் பண்பாட்டு சின்னமாக மோனாலிசா மாறினாள். அவளைப் பற்றி நிறைய எழுதப்பட்டது பேசப்பட்டது. பாடல்கள் புனையப்பட்டன.
அவளைப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடியது.
மோனாலிசா இருந்தபோது அவளுக்கு இல்லாத மதிப்பும் பெருமையும் அவள் மீட்கப்பட்டபோது அவளுக்குப் புதிதாகக் குவிந்தன.
திருட்டு, அவளை உலகப்புகழ் பெற்ற ஓவியமாக மாற்றியது.
இன்றைக்கு, ‘உலகப்புகழ் பெற்ற ஓவியம் ஒன்றைச் சொல்லுங்கள்’ என்று நீங்கள் அருகில் இருக்கிறவரிடம் கேட்டுப்பாருங்கள்.
அவர் பெரும்பாலும் ‘மோனாலிசா’ என்றுதான் சொல்வார். உலக அளவில் பார்த்தவுடன் அடையாளம் காணக்கூடிய ஓவியமும் மோனாலிசா ஓவியம்தான்.
எதுவும் சிலகாலம் இல்லாமல் இருந்து, காணாமல்போய், அது பேசப்படும் ஒரு மர்மப் பொருளாகி, நாளிதழ்களில் செய்திகள் குவிந்தால்தான் புகழ்பெறும் போலிருக்கிறது.
மோனாலிசா அப்படியானவள்தான்.
– மோகன ரூபன்.