தவெக-வில் செங்கோட்டையன்: அதிமுக தொண்டர்களின் சில கேள்விகள்!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அண்மையில் நீக்கப்பட்ட பிறகு, அவர் எந்தக் கட்சியில் சேர்வார் என்று பல்வேறு யூகங்கள் எழுந்து கொண்டிருந்தன.

குறிப்பாக டெல்லிக்கு அடிக்கடி சென்று பாஜக தலைமையைச் சந்தித்து வந்த பின்னணியை வைத்து அவர் பாஜகவில் சேரக் கூடும் என்கின்ற வதந்திகள் அடிபட்டன. தனிக்கட்சி துவங்கலாம் என்று கூட சில யூகங்கள் எழுந்தன.

ஆனால், அவற்றையெல்லாம் முறியடிக்கும் விதமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியில், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் பெற்றிருக்கிறார். அதோடு செய்தியாளர்களையும் சந்தித்திருக்கிறார்.

1972-ம் ஆண்டில் அதிமுக துவக்கப்பட்டதிலிருந்தே, அதிமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்த செங்கோட்டையனுக்கு பல்வேறு பொறுப்புகள் கட்சியிலும் ஆட்சியிலும் கொடுக்கப்பட்டன.

அவருக்குப் பல நெருக்கடிகள் கட்சியில் உருவானபோதும், எந்த விதத்திலும் கட்சியை விட்டு விலகுவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை. கட்சித் தலைமை குறித்து எப்போதும் அவர் அதிருப்தியை தெரிவிக்கவே இல்லை.

ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே அவருக்கும் செங்கோட்டையனுக்கும் இடையிலான வெவ்வேறு பிரச்சனைகள் வெளிவரத் துவங்கின.

செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டு வருவதாக செய்திகள் அடிபடத் துவங்கின.

எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் கட்சித் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம் பெறாதது குறித்து, அவருக்கு அதிருப்தி இருந்தது.

பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அந்த கட்சி நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தி வந்தவர்,  அந்த அதிருப்தியை பல்வேறு தரப்பில் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறார். பாஜக தரப்பிடமும் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தான் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் முற்றி, அவர் விலக நேர்ந்தது. தற்போது விஜய் கட்சியில் சேர்ந்திருப்பது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

அப்படி, அதிமுக தொண்டர்கள் எழுப்பும் கேள்விகள்தான் இவை:

1. பத்தாண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமை தமிழ்நாட்டில் முன்வைத்த முழக்கங்களில் ஒன்று, கழகங்கள் இல்லாத ஆட்சி.

அதாவது திமுகவோ, அதிமுகவோ இடம்பெறாத ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் இலக்குகளில் ஒன்றாக இருந்தது.

அதை வெளிப்படுத்தவும் செய்தார்கள். கட்சி சுவர்களில் கூட அத்தகைய முழக்கங்கள் வெளிப்பட்டன.

ஆனால், அந்த முழக்கங்களுக்கு நேரெதிராக எந்தக் கட்சியைக் குற்றம் சாட்டினார்களோ, அதே அதிமுகவுடன் கூட்டணி வைக்கவும் முயற்சித்து, கடைசியில் கூட்டணி வைக்கவும் செய்தார்கள்.

தற்போது அன்று பாஜக முன்வைத்த அதே முழக்கத்தை, இப்போது தவெகவில் சேர்ந்திருக்கிற அதிமுகவின் 52 ஆண்டுகள் நீடித்த அனுபவம் நிறைந்த செங்கோட்டையன் வைக்கலாமா?

2. எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் பல்வேறு மனஸ்தாபங்கள், அதிருப்திகள் தனிப்பட்ட முறையில் இருக்கலாம். அது வேறு. ஆனால், தன்னை உருவாக்கி வளர்த்தவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்பது அவரது நினைவுகளில் வேரூன்றிய ஒன்றாக எப்போதும் இருக்கும்.

எம்.ஜி.ஆரின் தொண்டர்கள்தான் செங்கோட்டையனுக்கும் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

அப்படித் தன்னை உருவாக்கிய எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சியான அதிமுகவைவிட்டு தமிழகத்தில் கழகங்கள் இல்லாத இன்னொரு ஆட்சியை உருவாக்குவோம் என்று சொல்வது செங்கோட்டையனுடைய தற்காலிக முழக்கமாக இருக்கலாம்.

ஆனால், எம்.ஜி.ஆரை விசுவாசத்துடன் நேசிக்கும் அதிமுக தொண்டர்கள் இதை விரும்புவார்களா?

3. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கு தனி செல்வாக்குண்டு. அவரை பலமுறை ஆட்சியிலும் கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளிலும் அமர வைத்தது அந்த கொங்கு மண்டலத்தில் அவருக்கென உருவான ஆதரவு தான்.

அத்தகைய ஆதரவு நிலையில் தொடர்ந்து கட்சித் தொண்டர்களிடம் நன்கு பழகி, அவர்களுடைய சுக, துக்கங்களில் பங்கு கொண்டு, தனக்கென ஒரு தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டவரான செங்கோட்டையனின் இன்றைய சரிவை அவரது தொண்டர்கள் சட்டென ஏற்றுக் கொள்வார்களா?

நேற்று வரை தொண்டர்களுக்கிடையே அவருக்கு இருந்த ஆதரவு, இனிமேலும் நீடிக்குமா? 

4. இன்று விஜய் கட்சியில் சேர்ந்து அவர் எடுத்த முடிவினால், பலன் பெறப்போவது யார்?

ஒருவேளை பாஜக தலைமையிடம், அவர் அண்மையில் காட்டி வந்த நெருக்கம்தான் அவரை, தவெக பக்கம் சென்றடைய வைத்திருக்கிறதா?

பாஜகவுடன் நேரடியாக சேராமல், விஜயின் தவெக வழியாக பாஜகவுடனான உறவை புதுப்பித்திருக்கிறாரா செங்கோட்டையன்?

5. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், தன்னை வளர்த்த இயக்கமான அதிமுகவிற்கு காலத்தின் பிரதி உபகாரமாக செங்கோட்டையன் செய்யும் உதவியானது,

ஒருவேளை எடப்பாடி மீது மட்டும் இவருக்கு தனிப்பட்ட முறையில் குரோதங்கள், விருப்பு வெறுப்புகள் இருந்திருக்கலாம். அது வேறு.

ஆனால், தான் உருவாக்கி வளர்த்த கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து களம் ஆடுவதற்கு செங்கோட்டையன் முன்வருவதை அதிமுகவை உண்மையாகவே நேசிக்கும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

6. அண்மையில் பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையின்போது, “அதிமுகவிலிருந்து விலக்கப்படுவீர்களா” என்று செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியபோது, “அப்படி வெளியேற்றினால் சந்தோஷம்தான்” என்று கூறியிருந்தீர்கள்.

அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி உங்களை கட்சியை விட்டு நீக்கியபோது, இந்த நீக்கத்தைத் தாங்க முடியாமல், இரவு முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததாக, திடீர் உருக்கத்துடன் பேட்டி அளித்தீர்கள்.

தற்போது, அதிமுகவையே விலக்கி வைக்கும் அளவுக்கு திடீர் முடிவையும் எடுத்திருக்கிறீர்கள். அதிமுகவை உங்கள் பாணியில் விமர்சிக்கிறீர்கள்.

இதில் மேலே சொன்னவற்றில் எதை உங்களுடைய அசலான கருத்தாக அதிமுக தொண்டர்கள் எடுத்துக் கொள்வது?

– யூகி

You might also like