நூல் அறிமுகம்:
திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது.
புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய் தாக்குதல்… எத்தகைய சிகிச்சைகளை எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்ற விபரங்களை,
அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை இலாகாவை வகித்தவருமான மூத்த அரசியல் தலைவரும் இந்நூலாசிரியருமான எச்.வி.ஹண்டே மிகத் தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வராக இருந்த எம்ஜிஆருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அன்றைய அரசியல் சூழல் எவ்வாறு மாறியது? மக்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன? என்பன போன்ற விவரங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகியவர் டாக்டர். எச்.வி.ஹண்டே என்பதால், எம்ஜிஆருக்கு அப்பல்லோ மருத்துவமனையிலும்,
பின்னர் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இவர் இந்நூலில் எழுதியிருக்கும் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பலரும் அறியப்படாதவையாகவும் உள்ளன.
எம்ஜிஆரின் உடல் நலக் குறைவு ஏற்பட்ட அவரது இறுதிக் காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு புத்தகங்கள் வெளியாகியிருந்தாலும், அவை அனைத்திலும் இருந்து இந்நூல் வேறுபட்டு விளங்குகிறது.
மக்கள் திலகத்தின் இதயத்தோடு நெருக்கமாக இருந்து வெற்றிப் பாதையில் பயணித்து, எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதிய ஹண்டே என்றென்றும் பாராட்டுக்குரியவர் என்பதை, இந்நூலை படிப்பதன் மூலம் உணரலாம்.
– மாசிலா இராஜகுரு
******
நூல்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு
ஆசிரியர்: டாக்டர் எச்.வி.ஹண்டே
வசந்தா பதிப்பகம்
பக்கங்கள்: 120
விலை: ரூ. 300/-