அள்ளிக் கொடுத்து வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்.!

மலரும் நினைவுகளைப் பகிரும் பி.ஆர். வரலட்சுமி

“இயக்குநர் ப. நீலகண்டன் அந்த சமயம் வரதட்சணைக் கொடுமையை அடிப்படையாகக் கொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.

அந்த நாடகத்தில் நானும் நடித்திருந்தேன். அதனை பார்ப்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆர் என் நடிப்பை பார்த்து பாராட்டியதோடு ‘நவரத்தினம்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கினார்.

இப்படித்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோடு ‘நவரத்தினம்’ படத்தில் நானும் ஒரு ரத்தினமாக இணைந்தேன்.

‘நவரத்தினம்’ படத்தின் ஷூட்டிங் சிவா கார்டனில் நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென மழை வந்து படப்பிடிப்பு தடைபட்டது.

அப்போது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வெளியே இருந்த கேட் அருகில் கூட்டமாக பல நபர்கள் கூடி எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என கூச்சலிட்டனர்.

இதனை கவனித்த எம்.ஜி.ஆர் உடனே அவர்களை உள்ளே அழைத்து விஷயம் என்ன என கேட்டார்.

அவர்களோ பல நாட்களாக பெய்து வரும் மழையால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் நாசமாகி விட்டன, உங்களால் முடிந்த உதவியை தங்களுக்கு செய்து தருமாறு கேட்டனர்.

அவர்கள் இதைச் சொன்ன மறுகணமே கொஞ்சமும் யோசிக்காத எம்.ஜி.ஆர்., தனது உதவியாளரை அழைத்து அவர்களுக்கு தேவையான பணத்தை அள்ளிக் கொடுத்தார். இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது”.

  • மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி ‘ராணி’ இதழுக்கு பி.ஆர். வரலட்சுமி அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

– நன்றி: ராணி இதழ் 

You might also like