ரஹ்மான்-எஸ்பிபி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி!

இசைஞானி இளையராஜா – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காம்போவில் உருவான ஏராளமான பாடல்கள் செம ஹிட்டித்தது போலவே, ஏ.ஆர்.ரஹ்மான் – எஸ்பிபி கூட்டணியில் உருவான பாடல்களுக்கும் இன்றளவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.

இந்தக் கூட்டணியில் உருவான பல பாடல்களைப் பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி, நாசர் நடிப்பில் வெளியானது மின்சார கனவு.

படத்தில் ‘தங்கத் தாமரை மகளே‘ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

அந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு அப்பாவாக நடித்திருந்த நிலையில், அரவிந்த் சாமிக்காக அப்படியொரு பாடலையும் அவர் பாடி இருந்ததை ரசிகர்கள் மறக்க முடியாத ஒன்று.

எஸ்பிபி பாடிய இந்தப் பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

இந்தப் பாடல் உருவான விதம் குறித்து ஒரு இசை நிகழ்ச்சியில் விளக்கமளித்த பாடகர் எஸ்.பி.பி., “தங்கத் தாமரை மகளே பாடல் கொஞ்சம் புதுமையாகவும், விசித்திரமாகவும் இருக்கும். இந்தப் பாடலுக்கு எனக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

இதனை ரெக்கார்டிங்கின் போது ரஹ்மான் என்னிடம், ஒரு சோம்பேறி போல பாட வேண்டும் என்று கூறினார்.

அதாவது பாடவே விருப்பம் இல்லாமல் இழுத்துக் கொண்டே ஒருவர் பாடினால் எப்படி இருக்குமோ அப்படி அவரை என்னிடம் பாட கூறினார்” என எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.

அவர் சொன்னது போலவே இந்த விஷயம் தெரிந்த பின்னர் அந்த பாடலைக் கேட்டால் மிக சோம்பேறியாக இழுத்துக் கொண்டே ஒருவர் பாடுவது போன்ற உணர்வைத் தரும்.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் பாடியதற்காக 4 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம், 5வது முறையாக கன்னடத்தில் வெளியான சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்‌ஷர காவாய் படத்தில் இடம்பெற்ற “உமண்டு குமண்டு கன கர்” பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

தமிழ்ப் பாடலுக்காக அவர் பெற்ற ஒரே தேசிய விருதும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

– மணி அமுதன்

You might also like