அப்துல் கலாமுக்கு முன்னோடியான அபுல் கலாம்!

நவம்பர் – 11: தேசிய கல்வி தினம்

மாணவர் நலன் மற்றும் கல்வி, நாட்டின் எதிர்காலம் என கலாம் கண்ட கனவுகள் ஏராளம்.

நடப்புத் தலைமுறையினர் நன்கறிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு முன்னதாக, இத்தகைய கனவுகளுடன் சுதந்திர இந்தியாவைக் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றிய கலாம் ஒருவர் உண்டு.

அவர்தான் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்கள் முதல் பல்கலைக்கழக மானியக் குழு வரை, தொலைநோக்குப் பார்வையில் அபுல் கலாம் ஆசாத் கல்வித்துறையில் கட்டமைத்தவை ஏராளம்.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக, இந்திய மாணவர்களின் எதிர்காலத்துக்கு அடித்தளமிட்டதில், நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பிகளில் ஒருவராக இன்றும் போற்றப்படுபவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

இவர் 1888-ம் ஆண்டு நவம்பர் 11-ல் பிறந்தார். அபுல் கலாம் ஆசாத் நினைவாக, கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில் தேசிய கல்வி தினத்தை இன்று (நவம்பர்-11) கொண்டாடுகிறோம்.

மௌலானா அபுல் கலாம், மகாத்மா காந்தியை பின்பற்றி இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட வீரராக, ஆசாத் கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1919-ல் ஒத்துழையாமை இயக்கத்தை கட்டமைக்க உதவினார்.

காந்திய தத்துவத்தை முழுமையாகப் பின்பற்றிய ஆசாத், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். 1923 மற்றும் 1940-45 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்டிருக்கிறார்.

சுந்திர இந்தியாவின் கல்வி அமைச்சராக ஆசாத் பொறுப்பேற்றது, நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. தனது 11 ஆண்டு கால கல்வி அமைச்சர் பணியில், ஏராளமான உயர்கல்வி நிறுவனங்களின் உதயத்துக்கு காரணமானார்.

சுதந்திரத்துக்கு முன்பே உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

1934-ல் பல்கலைக்கழக வளாகத்தை அலிகாரிலிருந்து புது டெல்லிக்கு மாற்ற உதவினார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் எதிர்கால தலைமுறையினருக்காக சர்வதேச தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க உறுதிபூண்டார். டிசம்பர் 28, 1953-ல் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவை நிறுவச் செய்தார்.

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப உயர்கல்வி நிலையங்கள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டதில் அபுல் கலாம் ஆசாத்துக்கும் பெரும் பங்குண்டு.

ஐஐடி வரிசையில் ஐஐஎஸ்சி உயர்கல்வி நிறுவனத்தையும் உருவாக்கினார். கூடவே கட்டிடக்கலை மற்றும் பிளானிங் ஸ்கூல் உள்ளிட்டவற்றையும் நிறுவச் செய்தார்.

கல்வி மட்டுமன்றி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக 1953-ல் சங்கீத நாடக அகாடமி, 1954-ல் சாகித்ய அகாடமி மற்றும் 1954ல் லலித் கலா அகாடமி ஆகியவற்றை நிறுவச் செய்தார்.

2008, செப்டம்பர் 11, அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதியை தேசிய கல்வி தினமாக கொண்டாட முடிவு செய்தது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எம்.பில்., மற்றும் பிஹெச்டி பயில்வதற்கான நிதி உதவி மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரிலான தேசிய கல்வி உதவியை வழங்குகிறது.

டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி, போபாலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய உருது பல்கலைக்கழகம், ஆசிய ஆய்வு நிறுவனம், கொல்கத்தா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,

டெல்லியில் உள்ள ஒரு மத்திய சிறுபான்மை பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பிரத்யேக நூலகம், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானம் உள்ளிட்டவை அபுல் கலாம் ஆசாத் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.

– நன்றி: காமதேனு

 
You might also like