திரைப்பட இசையில் உலகில் மாபெரும் உயரத்தில் இருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை வரலாற்றை எழுதும்போது, இளையராஜாவின் குருவாக சொல்லப்படும் தன்ராஜ் மாஸ்டர் பெயரை சொல்லாமல் இருக்க முடியாது.
‘இந்த தன்ராஜ் மாஸ்டர், தன் திறமைக்கு ஏற்ற உயரத்தை அடையாமல் போனவர். பாடப்படாத நாயகர்’ என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
மைலாப்பூர், லஸ் கார்னர் – சாய் லாட்ஜ், அறை எண் 13.
அவரை சந்திக்க அங்கு வந்து போகாத கர்நாடக, மேற்கத்திய இசை மேதைகளும் இல்லை, இசை அமைப்பாளர்களும் இல்லை என்கிறார்கள்.
கிடார் இசையும், ட்ரம்ஸ் ஒலியும், பியானோவின் மெல்லிசையும் அந்த அறையிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்குமாம்.
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானவர்கள் மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது தன்ராஜ் மாஸ்டரிடம்தான்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர், ஷியாம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
”ஆர். பார்த்தசாரதி, எல்.வைத்தியநாதன் போன்ற ஒரு சிலரைத் தவிர, அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களும் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றவர்களே.
இளையராஜா தமது முதல் படமான அன்னக்கிளியில் மெட்டுக்களிலும், இசைச் சேர்ப்பிலும், வாத்திய அரேஞ்ச்மெண்டிலும் அசத்தி இருக்கிறார் என்றால், அது தன்ராஜ் மாஸ்டரிடம் அவர் பயின்ற பாடம்தான்” என்று, திரை இசை அலைகள் என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் வாமணன்.
150 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஆசிரியரும், 28 முறை சிறந்த இசைப் பயிற்சி ஆசிரியர் விருதைப் பெற்றவருமான அப்துல் சத்தார், தன்ராஜ் மாஸ்டரிடம் இசைப் பயிற்சி பெற்றவர்தான்.
வருங்காலத் தலைமுறையும் பயன் பெறும் வகையில் ‘இசை வழி 180 டிகிரி’, ‘பிரம்ம மேளப் பிரமாணம்’ என்ற இரு இசை நூல்களையும் தன்ராஜ் மாஸ்டர் எழுதியுள்ளார். இவை இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இத்தனைக்கும் அவர் வணிகச் சிந்தனையோடு இசைப் பயிற்சிப் பள்ளி எதுவும் நடத்தவில்லை.
இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார்.
சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார் இளையராஜா.
ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றியவரும் தன்ராஜ் மாஸ்டரே. பின்னர் அன்னக்கிளி படத்துக்கு இசை அமைக்கும் போதுதான், இளையராஜா என்று பஞ்சு அருணாசலம் மாற்றினார்.
”வருமானம் இல்லாத நிலையில் இருந்த என்னிடம் தன்ராஜ் மாஸ்டர் பணமே வாங்கவில்லை. இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். பியானோ கற்றுக் கொள்வதற்காக நான் அவரிடம் சேர்ந்தேன்.
எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக் கொள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
வாரத்தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான், தினமும் வருகிறேன் என்றேன். சரி வா என்றார்.” என்று தனது ‘சங்கீதக் கனவுகள்’ என்ற படைப்பில் தன்ராஜ் மாஸ்டர் பற்றி குறிப்பிடுகிறார் இளையராஜா.
ஏ.ஆர். ரகுமானும், தமது எட்டாவது வயதில் இருந்து தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் கற்க ஆரம்பித்தார்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றபோது, தன்ராஜ் மாஸ்டரை நினைவு கூர்ந்தார் ஏ.ஆர்.ரகுமான்.
தமிழ்த் திரை இசையமைப்பாளர்கள் பலருக்கும் துரோணாச்சாரியாராகத் திகழ்ந்த தன்ராஜ் மாஸ்டரை, தமிழ்த் திரை உலகம் பெரிய அளவில் கொண்டாடவில்லை.
அவ்வளவு திறமைகள் கொண்ட அவர் ஏன் அப்படி ஓர் அறைக்குள் கூட்டுப் புழுவாக இருந்து மறைந்தார் என்பதும் தெரியவில்லை.
– சு.செந்தில் குமரன்