எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் அசலான மனிதர்கள்!

எழுத்தாளர் பவா செல்லதுரை

அவர் தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த சமயம் அது. நான் கல்லூரிப் படிப்பை பாதியில்விட்டு இலக்கியம், இயக்கம் என இயங்கிக் கொண்டிருந்த எண்பதுகளின் இறுதி நாட்கள்.
 
எங்கள் வீட்டு சாலிடர் டி.வி. தெருவில் ஒரு டேபிள் போடப்பட்டு தினம் தினம் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டு, தெரு மக்களுக்கு படம் போட்டுக் காண்பிக்கும் மாபெரும் உபச்சாரத்தை அப்பா தனக்கோட்டி வாத்தியர் தவறாமல் செய்து கொண்டிருந்த நாட்கள்.
 
தோளில் மாட்டின பையோடு டி.வி. பார்க்கும் ஜனக்கூட்டத்தில் வந்து நின்ற அந்த நடுவயது மனிதனை உட்காரச் சொல்லி அப்பா கைக்காட்டின இடம் தெருவை அடைத்து அம்மா கட்டியிருந்த கோழிக் கூண்டு.
 
எதுவும் பேசாமல் அவர்களோடு உட்கார்ந்து ‘சவாலே சமாளி’ பார்த்து முடித்து, எல்லா மக்களும் போன பின்பும் கோழிக் கூண்டைவிட்டு எழாமலிருந்த அம்மனிதனைப் பார்த்து,
 
‘‘என்ன ஊர்ப்பா?’’ இது அப்பா,
 
‘‘தெக்க, விருதுநகர் பக்கம்,’’
 
‘‘பரவாயில்லை வந்து சாப்புடு’’ இது அம்மா.
 
‘‘நான் பவாவைப் பாக்கணும்’’ இது அவர்.
 
‘‘அவன்ல்லாம் ஒரு ஆளு. என் சம்பாதியத்துல தின்னுட்டு ஊர் சுத்திட்டு ஊரடங்குன நடுச்சாமத்துலதான் வருவான், நீ சாப்புடு’’
 
அவர் தரையில் உட்கார்ந்து கை நனைக்கையில்,
 
‘‘அவனைப் பாக்கவா இம்புட்டு தூரம் வந்திருக்க, நீயும் அவன மாதிரியே…’’
 
எதுவோ பொறி தட்ட
 
‘‘உன் பேரு?’’
 
‘‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’’
 
வாயில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளினூடே அவர் வார்த்தைகள் தடுமாற…
 
அப்பாவின் கைகள் அவரை நோக்கிக் குவிகின்றன.
 
ஒரு எழுத்தாளனுக்கான மரியாதையும், அன்பும் அதற்குள் அடங்கியிருந்தன.
 
அதுவரை வந்த அவரின் எல்லாக் கதைகளையும் அப்பா வாசித்து தனக்குள் ஏற்றிக்கொண்ட ஒரு எழுத்தாளனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் அவை.
 
நான் நள்ளிரவு வந்தபோது இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரும், ஈசிச் சேரில் அப்பாவும் தூங்கிக் கொண்டிருந்ததைக் கலைக்க மனமின்றி, திருட்டுப் பூனையின் கால்களில் நடந்து நடையில் பாய் விரித்துப் படுத்தேன்.
 
விடிந்த காலைதான், இரவு வந்திருந்த அதிதி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன் என்பதை எனக்குச் சொன்னது.
 
அடுத்த இருநாட்களும் எங்கள் கொல்லை மேடுகளில் சுற்றிச்சுற்றி நாங்களிருவரும் இலக்கியம் பேசினோம். கிராமத்து மனுஷாளையெல்லாம் அவர் வார்த்தை அப்பங்களாய் எனக்கு ஊட்டினார்.
 
எங்கள் நிலப்பரப்பு ஊற்றுநீரை திராட்சை ரசமாக்கி நான் அவருக்குப் பருகத் தந்தேன்.
 
இதோ முப்பது வருடங்கள் சுலபமாகக் கடந்துவிட்டன.
 
எதனாலோ சொந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, அவர்களின் அப்பாவித்தனத்தை, அல்லது அடாவடியை எல்லாம் இழந்து சென்னையில் மகள் வீட்டு அப்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு அறையில் அப்படைப்பாளியின் வாழ்வு சுருங்கிவிட்டது.
 
எதிரே அவர் எழுதி முடித்துத் தொகுப்புகளாய் வந்த புத்தக அடுக்குகளில் ஒளிந்திருக்கிறார்கள் அவரின் அசல் மனிதர்கள்.
You might also like