தமிழ் டிரக்கர் லாஸ்வேகாஸில் இருக்கும்போது, நானோ போரூரில் இருந்து திருத்தணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். ‘கண்களில் பட்ட மின்னல்கள்’ நூல் வெளியீட்டு விழா.
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களின் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 431 பொன்மொழிகளின் தொகுப்பு.
தொகுத்த மண்ணடி முருகனின் சொந்த ஊர் மத்தூர். திருத்தணியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பழம்பெரும் நெசவாளர் கிராமம். எங்கு திரும்பினாலும் மலையழகு. பசுமை கொஞ்சுகிறது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நாளின் காலை 7.45 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்குச் சென்றுவிட்டோம்.
பூந்தமல்லி 400 அடி சாலையில் செம்மஞ்சேரியில் இறங்கி திருவள்ளூர் வழியாக திருத்தணி. வாகன நெரிசலற்ற சாலை. வந்ததே தெரியவில்லை. அடுத்த 10 நிமிடத்தில் மத்தூர் வந்துவிட்டது.
இருபுறமும் மலைகளின் காட்சி. வானம் வரை நீள்வதுபோன்ற சாலைகள். மேகங்கள் அலைந்து கொண்டிருந்தன. மழைக்கான அறிகுறி தெரியவில்லை. மிதமான வானிலை. வெயில் இல்லை. நல்ல பசி. எங்கும் சாப்பிடவில்லை.
மத்தூருக்குச் செல்லும் வழியில் மகிசாசுர மர்த்தினி ஆலயம். ரயில்வே பாலத்திற்குள் நுழைந்தால் ஊர் வருகிறது.
இந்த மத்தூருக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த மொழிப் போரில் சுடப்பட்டு உயிர் பிழைத்த மாணவர் நெடுமாறன் பிறந்த ஊர். அவர் மறைந்துவிட்டார்.
இதுபற்றிய ஆவணப்படத்தை பத்திரிகையாளர் குங்குமம் சுந்தரராஜன் எடுத்திருக்கிறார்.
கோடு போட்டதுபோன்ற தெருக்களில் மணி கோர்த்தாற்போன்ற நெருக்கமான வீடுகள்.
கைத்தறி நெய்த கைகளில் விசைத்தறி. இன்று அதுவும் இல்லை. பிழைப்புத் தேடி வெளியூர் செல்கிறார்கள். ஊருக்குச் சென்றதும் சூடான காபி கொடுத்தார்கள்.
காலை 10.30 க்கு விழா தொடங்கியது. ஊருக்கு மத்தியில் மேடை. அருகே புளியமரத் தோப்பு. ஊர்க்காரர்கள் நிறைந்திருந்தார்கள்.
நெற்றியில் திருநீறு. மேடையில் இருந்து பார்த்தால் எதிரே திருமுருக கிருபானந்த வாரியார் அமர்ந்திருக்கும் அழகிய சிலை. ஒருமுறைகூட அவரைப் பார்க்காத எனக்கு அவரது முன்னிலையில் பேசும் வாய்ப்பு.
பொதட்டூர் புவியரசன் தலைமையில் இறையன்பு அவர்களின் தனிச்செயலர் ஜோசப்ராஜா நூலை வெளியிட எம். எம். சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.
ஜோசப் ராஜா பேசும்போது, மத்தூரில் தீர்க்கவேண்டிய அடிப்படை தேவைகள் இருந்தால் பெரியவர்கள் கூடிப் பேசி சொல்லுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக இறையன்பு அவர்கள் உறுதி அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார். மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
ஊர்க்காரர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது.
“மத்தூர் கிராமத்திற்கு கொரோனா காலத்தில் லாரி நிறைய அரிசியும் மளிகைப் பொருட்களும் அனுப்பி வைத்தார் இறையன்பு அவர்கள்.
அதேபோல குடிநீர் பிரச்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஆழ்குழாய்க் கிணறு அமைத்துக் கொடுத்தார். இந்த இரண்டு உதவிகளையும் எப்போதும் மறக்கமாட்டோம்” என்றார்கள்.
சிறப்பு விருந்தினராக சில நிமிடங்கள் பேசினேன்.
நூலாசிரியர் மண்ணடி முருகனின் அர்ப்பணிப்புப் பற்றியும் இறையன்பு அவர்களின் எழுத்து, சொல், செயல் பற்றியும் குறிப்பிட்டேன். ஜென் தத்துவம் குறித்து அவர் எழுதிய நூல்களையும் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்புரை. கவிஞர் கவியன்பன் கவித்தமிழில் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மண்ணடி முருகன்.
மலைகளின் கீழே அழகிய கிராமம். போனோம் வந்தோம் என்றிருந்தாலும் என்றும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது அந்த நாள்.
சுவையான மதிய விருந்து. விழுந்து விழுந்து கவனித்தார்கள். அவர்களின் அன்பிற்கு நாம் என்ன செய்துவிடமுடியும்? விழா நிறைவடைந்த சில நிமிடங்களில் மழை.
ஊரைச் சுற்றிலும் பல அருவிகள் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் ஆந்திரம். வேறொரு நாளில் சாவகாசமாக மத்தூர் வரவேண்டும் என்ற நினைப்பில் சென்னைக்குப் புறப்பட்டேன்.