ஈரோட்டில் இயங்கிவரும் சக்தி மசாலா நிறுவனத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘பெருந்தலைவர் காமராஜர் பாதை’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட என்எஸ்வி சித்தனின் வாழ்க்கை வரலாற்று நூலின் வெளியீட்டு விழா ஈரோடு வில்லரசம்பட்டி வெள்ளாளர் கல்வியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள தரு மீடியா தயாரித்துள்ள இந்த நூலின் முன்னுரையில் இயக்குநர் த.செ. ஞானவேல், “காந்தியின் தொண்டராக மக்கள் நலன் சார்ந்த அரசியலை நேர்வழியில் முன்னெடுத்து, அதில் வெற்றியும் காணமுடியும் என்று வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் கர்மவீரர் காமராஜர்.
தனக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் பாடுபட்டார்.

காந்தியின் தொண்டராக இருந்து, அவரால் அடையாளம் காட்டப்பட்டு மாபெரும் தலைவராகக் காமராஜர் உயர்ந்ததைப் போல, காமராஜரின் தொண்டராக இருந்து, அவரால் வழிநடத்தப்பட்டுத் தலைவர்களாக உருவாகியவர்கள் பலர்.
காமராஜரால் அடையாளம் காட்டப்பட்டு, அவரைப் போலவே நேர்வழி அரசியல் பாதையில் பயணித்தவர், மக்கள் வழங்கிய அதிகாரத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவதில் தடம் பதித்தவர் என்.எஸ்.வி.சித்தன் அவர்கள்.
ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நுலை வெளியிட முதல் பிரதியை தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கெளரவ ஆலோசகர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் பெற்றுக்கொண்டார்.
ஜி.கே. வாசன் தன் பேச்சில்: “பெருந்தலைவர் காமராஜரோடு அரசியல் பணியாற்றிய அத்தனை மூத்த தலைவர்களோடும் பழகிய பெருமை அவருக்குண்டு. தான் இளைஞராக இருந்த காலத்தில் பெருந்தலைவருடன் பணியாற்றியவர் அய்யா சித்தன்.
அதேபோலத் தேசிய காங்கிரஸ் தலைவர்களுடன் பழகியவர். தென்மாவட்டங்களில் அவர்களுக்காகப் பல கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர். பல வரவேற்புகளைக் கொடுத்தவர்.
தமிழ்நாட்டில் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மதிக்கத்தக்க ஒருசில தலைவர்கள் உண்டு. அவர்களில் முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதிபெற்றவர் அய்யா என்.எஸ்.வி.சித்தன்.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒரு பள்ளி மாணவனைப்போல அவர் பணியாற்றியதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
இரு மன்றங்களிலும் அவருக்கு 98 முதல் 100 சதவிகிதம் வருகைப்பதிவு இருக்கும். ஏதோ வந்துவிட்டுப் போவது கிடையாது.
காலை முதல் அவை முடியும்வரை இருப்பார். சும்மா உட்கார்ந்திருப்பதில்லை. விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்று, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கும் முதல் பத்து நபர்களில் ஒருவராக இருப்பார்.
தன்னுடைய தொகுதி பற்றி, அனைத்துத் துறைகள் பற்றி, தொகுதியின் வளர்ச்சி பற்றி, தமிழ்நாட்டின் நலன் பற்றி அதிகம் விவாதிக்கும் உறுப்பினராக இருப்பார். சட்டமன்றத்திலும் அதே நிலையில்தான் இறுதிவரை செயல்பட்டார்.

1996-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சில அமைச்சர்கள் உள்பட, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராக அவர் செயல்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
அந்த நேரங்களில் அவர்களுடைய பணி இயக்கத்துக்கும் அரசுக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தொகுதிக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களைப் பற்றி அவர் பேசியதை நினைவுகூர்கிறேன்.
பல துறைகளில் அதற்குப் பலன் கிடைத்ததை நன்றியோடு குறிப்பிடவிரும்புகிறேன். அதிகம் விளம்பரம் தேடாத ஒரு தலைவர்.
நேர்மையானவர், எளிமையானவர், தூய்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. நிறைய ஞாபகசக்தி அவருக்கு உண்டு.
மக்கள் தலைவர் மூப்பனார் அய்யா, 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைவிட்டுப் பிரிந்து ஓர் இயக்கம் ஆரம்பித்தபோது, அவருக்குத் துணைநின்ற முக்கியத் தலைவர்களில் அய்யா என்.எஸ்.வி.சித்தனும் ஒருவர்.
பிறகு தொடர்ந்து பல்வேறு நேரங்களில் அரசியல் சரிவுகள் ஏற்பட்டபோதும், அவருக்கு ஆலோசனை கூறி உறுதுணையாகச் செயல்பட்டார்.
மக்கள் தலைவர் அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு, நான் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடித்தளமாக இருந்த தலைவர்.
அந்த நேரத்தில் இயக்கத்தின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய தலைமையில் பணியாற்ற நம்பிக்கை கொடுத்த முக்கியத் தலைவர்.
இன்றுவரை என் தலைமையில் பல்வேறு சோதனைகளை இந்தக் கட்சி தாங்கிச்செல்லும் வேளையில், கட்சிக்கும் தலைமைக்கும் பக்கபலமாக, எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக்கொள்பவர்.
தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றால் ஒரு கூட்டுக் குடும்பம். அதன் மூத்த தலைவராக, மூத்த குடும்ப உறுப்பினராக, சரி தவறுகளை எல்லோரிடமும் பேசி இயக்கத்தை நான் நன்றாக வழிநடத்துவதற்கு உறுதுணையாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.
என்.எஸ்.வி.சித்தன் போன்ற மரியாதைக்குரிய தலைவர்கள் இந்தக் கட்சியில் இருப்பதன் பிரதிபலிப்பு, கட்சிக்குக் கிடைக்கின்ற வெற்றி தோல்விகளைத் தாண்டிய மரியாதை என்று அழுத்தம் திருத்தமாக நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.டி. சந்திரசேகர் தலைமைவகித்து என்எஸ்வி சித்தன் பற்றிய குறும்படத்தை வெளியிட்டார்.
குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார் சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி.
வரவேற்புரை நிகழ்த்தினார் சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பி.சி. துரைசாமி.
விழாவில், பாஜக மாநிலச் செயலர் இராம சீனிவாசன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி, ராஜேந்திரன், முன்னாள் மதுரை எம்எல்ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தொழிலதிபர் ஆர். ஜெயராமன், சிற்றம்பல நடராசன்,
இதயம் நல்லெண்ணெய் அதிபர் வி.ஆர். முத்து, அணில் சேமியா அதிபர் என். சுகுமார் உள்ளிட்ட பலரும் சித்தனின் அரசியல் பங்களிப்பையும் மக்கள் பணிகளையும் பாராட்டிப் பேசினார்கள்.
வாழ்க்கை வரலாற்று நூலை எழுத்தாக்கம் செய்த பத்திரிகையாளர் சுந்தரபுத்தனுக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார் ஜி.கே. வாசன்.
இயக்குநர் த.செ. ஞானவேல் நூல் மதிப்புரை வழங்கினார். என்எஸ்வி. சித்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலங்களில் கொண்டுவந்த சென்னை – பழநி எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் கேந்திரிய வித்யாலயா, பள்ளி – கல்லூரிக் கட்டடங்கள் உள்ளிட்ட தொகுதி மக்களுக்கு செய்த பணிகளை ஆர்வத்துடன் நினைவுகூர்ந்தார்.
விழாவின் இறுதியில், சி. ராஜமாணிக்கம் நன்றி தெரிவித்தார்.
– தான்யா