தொலைக்காட்சி வழியே:
தினமும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் குறிப்பை எழுதும் இன்று (27.09.2025) ஒரு பவுன் தங்கத்தின் விலை 85 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
தொடர்ந்து தங்கம் விலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதைப் பற்றி, பல ஊடகங்களில் விவாதங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆனால், அதே சமயம் ஊடகங்களில் விவாதம் நடக்கும் அளவுக்கு நகையை வாங்குவதற்கான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிற அளவில் வெவ்வேறு நகைக்கடை உரிமையாளர்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவதை ஊக்கப்படுத்தும்விதத்தில் தூண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆக, தங்கம் விலை உயர்வது பற்றிய பேச்சு ஒருபுறம் இருக்க, தங்க விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் அதை வாங்கச் சொல்லி ஊக்கப்படுத்துவதும் இன்னொரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையிலே தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தங்கம் விலை உயர்வது பற்றி நடந்த ஒரு விவாதத்தில், ஜுவல்லரி உரிமையாளர்கள் சார்பில் பேசிய ஒருவர் வெளிப்படுத்திய கருத்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
“தங்கத்தின் விலை உயர்வுக்கு என்ன காரணம்?” என்று செய்தியாளர் கேட்டபோது, அதற்கு பலதரப்பட்ட சர்வதேச காரணங்களைச் சொன்னார் அந்த உரிமையாளர்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து துவங்கி, இஸ்ரேல் போர் வரை பல்வேறு காரணங்களை சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக முன்வைத்த அவர், இதே அளவில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்தால், இனி ஒரு பவுன் ஒரு லட்சம் அளவிற்கு போவதற்கும் சாத்தியம் உண்டு என்பதையும் குறிப்பிட்டார்.
அதோடு இந்த தங்கம், சாதாரண அடித்தட்டு மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஏன் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய கேள்விக்கு, அவர் இப்படிச் சொன்னார்.
“இந்தியா தற்போது நகை உற்பத்திக்கான மூல நகையை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கான வரியும் சேர்கிறபோது தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருகிறது.
அதேசமயம், உலக நாடுகளில் தங்கத்தை வாங்குவதில் முன்னணியில் உள்ள பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வீடுகளில் தனிநபர்கள் வைத்திருக்கின்ற நகையினுடைய மொத்த மதிப்பு 25 லட்சம் டன் அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த பல்வேறு வீடுகளில் இருக்கக்கூடிய, பலர் சேமித்து வைத்திருக்கின்ற நகைகளை வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்லி அதை அரசு சரிவர பயன்படுத்தினால், தங்கத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதோடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையும் தடுக்க முடியும்.
இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதைக் கட்டுப்படுத்தி ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் அல்லது ரூ.60,000 என்கிற அளவுக்கு மறுபடியும் கொண்டு வரமுடியும் என்பதை குறிப்பிட்டார்.
அதோடு, இது குறித்து அண்மையில் நடந்த நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், இது பற்றிய விரிவான குறிப்புகளுடன் தங்கத்தின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒரு ஆவணத்தோடு சமர்ப்பித்ததாகவும் குறிப்பிட்டார்.
இத்தகைய ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தினால், எளிய மக்களும் தங்கத்தை வாங்குவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு போவதைத் தடுக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
இம்மாதிரியான ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு சீரியஸாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்பது தான் கேள்விக்குறி.
– அ. பெரியநாயகி