எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிடுவது சரியா?

அண்மையில் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் பிரச்சாரம் செய்தபோது, ஊடகங்கள் அதைப் பெருந்தீனியைப் போல வெளியிட்டன.

கிட்டத்தட்ட விஜய் படத்தின் பன்ச் டயலாக்குகள் நிறைந்த ஒரு கிளைமாக்ஸ் காட்சி, நேரடியாக திருவாரூரிலும் நாகப்பட்டினத்திலும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டதைப் போன்றுதான் மீடியாவின் பார்வை இருந்தது.

அதை சில காட்சி ஊடகங்கள் நாகப்பட்டினத்திலிருந்து அவர் கிளம்பி திருவாரூரில் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட அந்த இடத்திற்கு அவருடைய வாகனம் வருகிறவரை தொடர்ந்து காட்சிப்படுத்திக் கொண்டே இருந்தன.

அவருடைய தமிழக வெற்றிக் கழகப் பாடல்களை மனப்பாடம் செய்யும் அளவிற்கு தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். அது குறித்து தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடந்தன.

அப்படி தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில், இவ்வளவு ஜனத்திரள் கூடியிருக்கும்போது விஜய் 9 நிமிடம் மட்டுமே பேசி தன்னுடைய உரையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதில் அளித்த தொலைக்காட்சி நெறியாளர் ஒருவர் இப்படிச் சொன்னார்.

“சிலர் தன்னுடைய தோற்றத்தை மட்டும் மக்களிடம் காட்சிப்படுத்தவே அந்தப் பிரச்சாரப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஜய்யும் அப்படித்தான். தன்னுடைய பேச்சை அல்ல, தன்னுடைய தோற்றத்தை முன்னிலைப்படுத்தவே இந்தப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் இதே மாதிரி தான், தன்னுடைய பேச்சைவிட தன்னுடைய தோற்றத்தை மக்கள் முன்காட்டுவதற்குத்தான் அவர் அந்தப் பிரச்சார பயணத்தைப் பயன்படுத்தினார்” என்கிற ரீதியில் ஒரு கருத்தை முன் வைத்தார்.

அந்தக் கருத்தை எதிர்த்தரப்பில் உள்ளவர்களும் மறுக்கவில்லை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இரண்டு தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் உடன் சென்றவன் என்கிற முறையில் சொல்ல விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரைப் பற்றி அந்த நெறியாளர் தெரிவித்த கருத்து உண்மையானதுமல்ல, அனுபவம் சார்ந்ததுமல்ல. 

இளம்வயதில் அவருடைய பிரச்சாரப் பயணத்தை அவர் மாலை நேரத்தில் ஆரம்பித்து விடிய விடிய மேற்கொள்ளும்போதுகூட ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சமாக அங்கு கூடியிருக்கும் மக்கள் திரளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு 15 நிமிடங்கள் வரையுமாவது பேசுவார்.

குறிப்பாக அவர் எந்த ஊரில் பயணம் மேற்கொள்ள வந்திருக்கிறாரோ, அந்த ஊரில் உள்ள முக்கியமான தலைவர்கள் அல்லது அங்குள்ள பிரச்சினைகள் இவற்றை மையப்படுத்தியே தன்னுடைய பேச்சைத் துவங்கி, பிறகு பொது அரசியலை முன்வைக்கிறபடி அவருடைய பிரச்சாரம் முடியும்.

அந்தப் பிரச்சாரத்திற்கு, மூத்த எழுத்தாளரான சோலை போன்றவர்கள் வெவ்வேறு ஆதாரப்பூர்வமான குறிப்புகளைத் தந்து உதவியிருக்கிறார்கள். இது அப்போது உடன் சென்ற பல பத்திரிகையாளர்களுக்கு நேரடியாக தெரிந்த விஷயம்.

இரண்டாவதாக அவர் தென் மாவட்டங்களில் போட்டியிட்டபோது, அவருடைய பிரச்சாரப் பயணங்களில் நானும் ஒரு பத்திரிகையாளனாக உடன் சென்றிருக்கிறேன்.

வெவ்வேறு இடங்களில் கிராமப்புறங்களில் கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் திரண்டிருந்த நிலையில்கூட, அவர் 15 நிமிடங்கள் வரை உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தன்னுடைய கருத்துக்கள் மக்கள் மத்தியில் மிக எளிமையான மொழியில் சென்றடைய வேண்டும் என்பதில் கவனம் கொண்டவராக இருந்தார்.

எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள உள்ளூர் பிரச்சினைகளைப் பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்.

ஒரு ஊருக்கும், இன்னொரு ஊருக்கும் இடையில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு வரச் சொல்லி அன்புடன் போராட்டம் நடத்தியபோதுகூட, அவருடைய காருக்கு முன்னால் படுத்துக்கொண்டு எங்கள் ஊருக்கு வந்தாக வேண்டும் என்று மறியல் செய்தபோதுகூட மிகவும் அன்புடனும், உரிமையுடனும் அவர்களைக் கண்டித்து,

”குறிப்பிட்ட இடத்தில் நிறைய மக்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். அந்த மக்களை வெகுநேரம் காக்கவைத்து, காலம் தாழ்த்திச் சென்று சந்திக்கக்கூடாது.

இதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று அதிகாலை இரண்டு மணி அளவில் அந்த நேரத்தில் சொன்னதுகூட, பின்னால் சென்ற பத்திரிகையாளரான நான் நேரடியாகப் பார்த்து உணர்ந்தவன்.

ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து மணிக்கு அவருடைய பிரச்சாரப் பயணம் முடியும் வரை, அவர் ஒவ்வொரு ஊரிலும் எழுதி வைக்கப்பட்ட உரையை அல்ல, தானாக அந்தந்தச் சூழலுக்கு ஏற்றபடி அவருடைய இயல்பான முறையில்தான் அவருடைய பிரச்சாரப் பயணம் அமைந்திருந்தது என்பதை இன்றைய காலகட்டத்தில் உணராமல், எம்.ஜி.ஆரின் பேச்சை விஜய் பேச்சுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது சம்பந்தப்பட்ட நெறியாளர்களின் அனுபவப் போதாமையைத் தான் வெளிக்காட்டுகிறது.

எத்தனையோ நிகழ்வுகளை அவர்களுக்கான வணிக நோக்கத்துடன் (டி.ஆர்.பி ரேட்டிங்) அவசரத்துடன் வெளியிட முற்படும் காட்சி ஊடகங்கள், இம்மாதிரியான செய்திகளை, மக்களுக்கு முன் இன்றைக்கு காட்சிப்படுத்தும்போது குறைந்தபட்ச கடந்த கால வரலாற்றில் நடந்த அசலான சம்பவங்களையாவது கொண்டு செல்வது நல்லது.

எம்.ஜி.ஆரோடு விஜய்யை ஒப்பிட்டுப் பேசுகிறவர்கள், இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

நள்ளிரவு நேரத்தில்கூட எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்யும்போது அவ்வளவு திரளான மக்கள் கூட்டம் கூடி இருப்பதை பத்திரிகையாளர்களால் நேரடியாகப் பார்க்க முடிந்திருக்கிறது.

சிலர் மரங்களிலும் ஆர்வ மிகுதியால் சிலர் மின்கம்பங்களிலும் ஏறி நிற்பதைக் கவனிக்கும்போது எம்.ஜி.ஆருடைய வேண்டுகோளின்பேரில் உடன் இருந்த பாதுகாவலர்கள், அந்த வேனை விட்டுக் கீழே இறங்கி மின் கம்பங்களிலும், மரங்களிலும் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்கச் சொல்லி, அவர்கள் கீழே இறங்கியபிறகு பாதுகாவலர்கள் வேனில் ஏறியதையும் பார்த்திருக்கிறோம்.

இப்படித் தொண்டர்களின் அத்துமீறல்களைக் கவனித்து, அதை உடனடியாக சரி செய்யக்கூடியவராகவும் எம்.ஜி.ஆர். இருந்திருக்கிறார்.

இன்னொரு சம்பவம்.

ஒரு ஊரில் பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டு, இன்னொரு ஊருக்குக் கிளம்பும்போது அவருக்கு பின்னாடியே நள்ளிரவில் சைக்கிளில் 60-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் அவரைப் பின் தொடர்ந்து விரைவாக வந்தனர்.

அதைப் பார்த்த எம்.ஜி.ஆர், உடனடியாக வேனை நிறுத்தி, பின்னால் வந்துகொண்டிருந்த தொண்டர்களை அருகில் அழைத்து,

“எதற்கு இவ்வளவு தூரம் பின்னாலேயே வருகிறீர்கள். அதுவும் இருட்டில். இவ்வளவு தூரம் வருவது எவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தும் தெரியுமா?

அப்படி உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படுவது யார்?. உங்கள் குடும்பம் தானே. ஏன் இவ்வளவு தூரம் வருகிறீர்கள்” என்று கேட்டார்.

அப்போது தொண்டர்கள், “உங்களை அருகிலிருந்து பார்க்க வேண்டும்.” என்றனர்.

அதற்கு எம்.ஜி.ஆர்., “இப்போது அருகில் தானே இருக்கிறேன். இப்போது என்னை பார்த்து விட்டீர்கள் இல்லையா, நீங்கள் தயவுசெய்து அப்படியே திரும்பி உங்கள் ஊருக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்.

எம்.ஜி.ஆர். அன்புடன் சொன்னபிறகு அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தொண்டர்கள் திரும்பிச் சென்றதை பின்னால் இன்னொரு வேனில் இருந்தபடி பத்திரிகையாளர்களான நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்படி, தொண்டர்களை ஒழுங்குபடுத்தக்கூடிய இயல்பும் எம்.ஜி.ஆரிடம் இருந்தது என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது.

இதைப்போலவே விஜய் ஊடகவியலாளர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பற்றி ஒரு பிரச்சினை அடிக்கடி எழுப்பப்படுகிறது.

இவ்வளவுக்கும் ஒரு நாள் முழுக்கக் காத்துக் கிடந்து அந்த நேரடி ஒளிபரப்பை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகள் இடையில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

அவர்களுக்கு இருக்கிற நெருக்கடிகள் என்ன? அதில் பணியாற்றும் ஊழியர்கள் சரிவர சாப்பிட்டார்களா? என்பதை எல்லாம் கவனிக்கும்போது, இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆருடைய பிரச்சாரப் பயணத்தில் நாங்கள் கவனித்த ஒரு நேரடிச் சம்பவத்தையும் நினைவுகூற வேண்டி இருக்கிறது.

நள்ளிரவு, ஆண்டிப்பட்டிக்கு அருகில் ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்குமான இடைவெளியில், ஒரு பரந்த வெளியில் மரத்தடியில் ஒரு ஜமுக்காலத்தை விரித்து, அதில் அவருடன் வந்திருந்த பத்திரிகையாளர்களான எங்களையும் அழைத்து சம்மணமிட்டு சாப்பிடச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.

அப்போது வெகு இயல்பாக, கேஷுவலாக எங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்.

பத்திரிகை தேவைகளுக்காக அவர் பேசியதைவிட, நட்பு ரீதியாக பத்திரிகையாளர்களுடன் பேசியது அதிகம். பத்திரிகையாளர்களும் அவரிடம் நேரடியாக பேச முடிந்தது. அதற்கான ஒரு நெருக்கத்தை அவர் உருவாக்கியிருந்தார்.

இதையொட்டி இன்னொரு சம்பவம் விருதுநகரில் நடந்தது. இதைப்பற்றி ஏற்கனவே நான் சில இடங்களில் குறிப்பிட்டு இருந்தாலும், மீண்டும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

மதிய நேரத்தில் அவருடன் சாப்பிட அமரும்போது, அவருக்கு நேர் எதிரே எங்களுக்கு மேசையில் பரிமாறப்பட்டிருந்தது.

நாங்கள் உட்காரும்போது அந்த மேஜையில் அமர்வதற்கு முன்னால், நேரே பத்திரிகையாளர்களின் பகுதிக்கு வந்தவர், அதில் பரிமாறப்பட்டிருந்த உணவு வகைகளை எண்ணிப் பார்த்தார்.

எதிரே அவருக்குப் போடப்பட்டிருந்த இலையில் வைக்கப்பட்டிருந்த உணவு பதார்த்தங்களையும் எண்ணிப் பார்த்தவர், அவருடைய பகுதிக்கு அதிகமாகவும் எங்களுடைய பகுதிக்கு குறைவாகவும் பரிமாறப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு நேரடியாக அந்த நிர்வாகிகளைக் கூப்பிட்டு கடுமையாக சத்தம் போட்டார்.

அதோடு, “ஒன்று அவர்களுக்குக் கூடுதலாக பரிமாறுங்கள் அல்லது எனக்குப் பரிமாறப்பட்டதை எடுத்துவிடுங்கள்” என்று சற்றுக் குரலை உயர்த்திப் பேசிவிட்டு கைகளை கட்டியபடியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது எங்கள் பகுதியில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர், அவர் கைகட்டி எங்களுக்கு பரிமாறப்பட்ட மேஜைக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது அவரை படம் எடுக்க முயற்சி செய்தார்.

அப்போது அதைத் தடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார், “உங்களுக்காக நான் பரிந்து பேசிக் கொண்டிருக்கும்போது இதை நீங்கள் தயவு செய்து புகைப்படமாகவும் வெளியிடக்கூடாது, செய்தியாகவும் வெளியிடக்கூடாது. இதை ஒரு நண்பனைப் போல கேட்டுக்கொள்கிறேன்” என்று அங்கிருந்த பத்திரிகையாளரிடம் சொல்லிவிட்டு,

அதன்பிறகு தனக்கு பரிமாறப்பட்டிருந்த இடத்திற்குப் போய் சாப்பிடப் போனதை நேரடியாக அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்.

ஆக, ஊடகவியலாளர்களுடன் எப்படிப்பட்ட ஒரு நல்ல உறவு எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்பதை வெளிக்காட்டவே இந்த இரண்டு சம்பவங்களையும் சொல்ல வேண்டி இருக்கிறது.

இதைப்போன்ற ஊடகவியலாளர்களுடன் ஒரு உறவை, தற்போது பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளும் விஜய் மேற்கொண்டிருக்கிறாரா அல்லது விஜய் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் ஊடகவியலாளர்களுடன் இப்படிப்பட்ட நல்லுறவை வளர்த்திருக்கிறார்களா என்பதெல்லாம்தான் இப்போது கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரையும் விஜய்யையும் ஒப்பிட்டு ஊடகங்களில் விவாதம் நடத்துகிறவர்கள், இத்தகைய கடந்த கால சம்பவங்களையும் நினைவுகூர்வது நல்லது.

– மணா

You might also like