மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம்

நமது தினசரி வாழ்வோடு சில விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். அவற்றின் பங்களிப்பை அறியாமலேயே, அவை குறித்த புரிதல் இல்லாமலேயே நமது இருப்பு அமைந்திருக்கும். திடீரென்று ஒருநாள் அது தெரியவரும்போது, ஆச்சர்யத்தை விட அதிர்ச்சியே மேலோங்கி நிற்கும். வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்.

அப்படியொன்றாக உள்ளது, மூங்கில் நம் வாழ்வில் அளித்து வரும் பயன்பாடு குறித்து அறிய நேர்வது.

’பந்தல் கட்ட மூங்கில் கம்பு பயன்படுத்துவாங்க’, ‘புல்லாங்குழல் மாதிரி இசைக்கருவிகள் சில உருவாக்க அது பயன்படுது’, ‘கட்டடம் கட்டுற தொழிலாளிகள் அதை வச்சு சாரம் கட்டுவாங்க’ என்று நம்மில் சிலர் அதன் பயன்களைச் சொல்லக் கூடும்.

வெகு சிலர் ‘மூங்கில்ல பிரியாணி சமைச்சா வேற லெவல்ல இருக்கும்’ என்பார்கள்.

நாம் ரசிக்கும் திரையிசைப் பாடல்களிலும் கூட, மூங்கில் என்ற வார்த்தை மிக அரிதாகத்தான் இடம்பெற்றிருக்கிறது.

‘மூங்கில் காடுகளே’, ‘மூங்கில் தோட்டம்’, ‘மூங்கிலிலைக் காடுகளே’, ‘மூங்கில் காட்டோரம்’, ’மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்’, ’கரட்டோரம் மூங்கில் காடு’ என்று வெகு சில பாடல்களே மூங்கில் என்ற வார்த்தையில் தொடங்கியிருக்கின்றன.

’மூங்கில் மரங்கள் நிறைந்த இடத்தில் வண்டுகள் அவற்றில் சில கிளைகளைத் துளைக்க, அந்த துவாரம் வழியே புகுந்து வெளியேறும் காற்று இசையாக மாறும்போது தெய்வீக ராகம் கேட்கும்’ என்ற கற்பனை நம்மை கனவில் மிதக்கச் செய்யும்.

மேற்சொன்னவற்றை எல்லாம் யாராவது சொன்னாலோ அல்லது எங்காவது படித்தாலோ மட்டுமே நமக்கு ‘மூங்கில் நினைவுகள்’ வரும்.

மூங்கிலின் பயன்கள்!

 புல் வகையைச் சேர்ந்த தாவரம் மூங்கில், உலகம் முழுக்கச் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மூங்கில் இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாக, 30 சென்டிமீட்டர் பருமன் கொண்டதாக, இவை அதிகபட்சம் வளரக்கூடியவை. ஒரேநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை மூங்கில் வளரும் என்று கூறப்படுகிறது.

குடிசை வேய, கைவினைப் பொருட்கள் செய்ய என்று பலவாறாக மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. காகிதத் தொழிற்சாலைகளில் மரக்கூழ் செய்யவும் இவை அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மூங்கிலின் இலைகள், குருத்துகளை பாண்டா கரடி, லெமூர் உள்ளிட்ட சில விலங்குகள் உணவாகப் பயன்படுத்துகின்றன. இவற்றின் பழங்களை எலிகள் உண்கின்றன.

மூங்கிலை எவ்வளவு வெட்டினாலும், அவை மீண்டும் துளிர்க்கக் கூடியவை. அதனால், காடுகள் அழியாமல் காக்க இவற்றை பயன்படுத்த முடியும்.

இவை அதிகளவில் கார்பன் டை ஆக்சைடை உட்கிரகித்து அதிகளவு ஆக்சிஜனை வெளியிடக்கூடியவை. அதனால் பசுமைக்கூட வாயுக்களை குறைத்து சூழலை ஆக்சிஜன் நிறைந்ததாக மாற்ற இவை உதவுகின்றன.

ஆசியா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மூங்கிலானது கலை, கலாசாரம் சார்ந்தும் பயன்படுத்தப்படுகின்றன. காற்று மூலமாக இசைக்கப்படும் கருவிகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

இது போக தினசரிப் பயன்பாட்டு பொருட்களிலும் மூங்கிலைப் பயன்படுத்த முடியும். பல் துலக்கும் குச்சிகள், ஸ்ட்ரா போன்றவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க இவற்றை முன்வைக்கலாம். நீர் சுத்திகரிப்பில் இவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றின் இழைகள் கொண்டு துணிகள் தயாரிக்க முடியும்.

இப்படி ஒவ்வொன்றாகக் கூர்ந்து நோக்கத் தொடங்கினால், மூங்கில் நமக்கு தரும் பயன்கள் மூச்சு முட்டும் அளவுக்கு நிச்சயம் இருக்கும்..!

மூங்கில் தின கொண்டாட்டம்

மூங்கில் பயன்பாட்டைப் பரவலாக அறியச் செய்யும் வகையிலும், அதன் பெருமைகளை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ம் தேதியன்று ‘உலக மூங்கில் தினம்’ கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2009-ம் ஆண்டு நடந்த உலக மூங்கில் மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளூக்கும் மேலாகக் கட்டுமானம், நுண்கலை, உணவு மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைகளில் மூங்கில் பயன்படுத்தப்படுவதைக் கொண்டாடும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘அடுத்த தலைமுறைக்கான மூங்கில்: தீர்வு, கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் தத்தமது வழிகளில் நவீனமான, நிலைத்த தன்மை கொண்ட, புதுமையான வழிகளில் மூங்கிலைப் பயன்படுத்துவது குறித்து கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

நகரமயமாக்கம் பெருகியுள்ள சூழலில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கோடு, மறுசுழற்சியை அதிகப்படுத்தும் வகையில் மூங்கில் பயன்பாட்டை அதிகரிக்கும் முடிவை உலகின் பல நாடுகள் எட்டியுள்ளன.

உலக மூங்கில் தினத்தை ஒட்டி பல கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெற இவை வகை செய்யும்.

அனைத்தையும் தாண்டி, நமது தினசரி வாழ்வில் ஏதோ ஒரு வகையில் பிணைப்பைக் கொண்டதாக உள்ளது ‘மூங்கில்’.

எங்கோ ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்போது மூங்கில் மரங்களைக் காணும்போது, அவை நமக்கு அந்நியமானதாகத் தோன்றுவதே இயல்பு. அதிலிருந்து விடுபட்டு, அவற்றின் பயன்களை நினைவுகூரவும் பயன்பாட்டைப் பெருக்குவது குறித்த சிந்தனைகளை ஊட்டவும் ‘உலக மூங்கில் தினம்’ நிச்சயம் வழிகாட்டும்.

மூங்கில் காட்டுக்குள் பயணிக்கிற அனுபவம் நம் அனைவருக்கும் கிட்டுவது கடினம். ஆனால், தினசரி வாழ்வில் மூங்கிலின் பயன்பாட்டைக் கொஞ்சமாய் கண் மூடிச் சிந்தித்தால் நிச்சயமாக அது போன்றதொரு கற்பனை மனதுக்குள் விஸ்வரூபமெடுக்கும். அப்போது, இந்தக் கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாக மாறும்..!

  • மாபா
You might also like