தந்தை பெரியாரின் பிறந்த நாளான நேற்று (செப்டம்பர்-17) – ‘பெரியார் எணினி ஓவியக் கண்காட்சி (Periyar Digital Art Exhibition)’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் நான் உருவாக்கிய கருத்தோவியங்களின் கண்காட்சியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் பெரியார் திடலில் துவக்கி வைத்தார்கள்.
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக காட்சிப்படுத்திவிட்டார்.
காட்சியைத் துவக்கி வைத்து ஒவ்வொரு படங்களையும் நுணுக்கமாக கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கி பாராட்டுக்களைச் சொன்னதோடு எனக்கு பொன்னாடை அணிவித்து பெருமைப் படுத்தினார் ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள்!
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அய்யா அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு படத்தையும் ரசித்துப் பார்த்து பாராட்டினார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியரும் திராவிடச் சிந்தனையாளருமான ஓவியர் டிராட்ஸ்கி மருது இந்த ஓவியங்களைக் கண்டு – தான் ஏற்கனவே கூறிவந்தது போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை செய்யப் போகிறது என்ற கருத்தை மீண்டும் நினைவுபடுத்தினார்.
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக வந்திருந்து கண்காட்சியை கண்டு பாராட்டிச் சென்றார்கள்.
என்னோடு பணியாற்றிய தோழர். பொறியாளர் குமரேசன் ராஜபாளையத்தில் இருந்து வந்து கண்காட்சி கண்டு பாராட்டு தெரிவித்துச் சென்றார்.
இளைஞர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த படங்களை உருவாக்குவது பற்றிய சந்தேகங்களையும் பெரியாரின் கொள்கை பற்றிய விளக்கங்களையும் என்னிடம் கேட்டறிந்தனர்.
இந்தக் கண்காட்சி இன்னமும் இரண்டு நாட்களுக்கு அதாவது 19.09.2025 மற்றும் 20.09.2025 தேதிகளில் பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியை சிறப்புற வடிவமைத்து ஏற்பாடு செய்த தோழர் பிரின்ஸ் அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கங்களும்.
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

