ஆசியக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே அபார வெற்றியை ருசித்துள்ளது இந்தியா.
ஐக்கிய அரபு அமீரக அணியை 4.3 ஓவர்களிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பொட்டலம் கட்டியுள்ளது.
இதன்மூலம் மிகக்குறைந்த ஓவர்களில் வெற்றியை ருசித்து ஒரு புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்த முதல் போட்டியில் ரசிகர்களைக் கவனிக்க வைத்த மற்றொரு விஷயம் இந்தியாவின் தொடக்க ஜோடி.
கடந்த பல போட்டிகளாக இந்திய டி20 அணிக்கு அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும்தான் தொடக்க ஜோடியாக இருந்தார்கள்.

ஆனால், இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் பொறுத்தவரை, எதிர்காலத்தில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க விரும்புகிறது.
ஒரே கேப்டன் 3 வகையான போட்டிகளுக்கும் தலைமை வகித்தால்தான் நல்லது என்று பிசிசிஐ நினைக்கிறது. அதற்காகத்தான் டி20 அணிக்குள் கில்லை நுழைத்துள்ளது.
சுப்மான் கில்லைப் பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டருக்கு அனுப்பி கில்லைத் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கியுள்ளனர்.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் சுப்மன் கில் – அபிஷேக் சர்மா ஜோடி புதிய தொடக்க ஜோடியாக தெரியலாம்.
ஆனால், சிறுவயதில் இருந்து அவர்களின் ஆட்டத்தைக் கண்காணித்து வருபவர்களைப் பொருத்தவரை இது பல ஆண்டுகளுக்கு முன்பே இணைந்த ஜோடி.
சுப்மன் கில்லுக்கு 13 வயதும், அபிஷேக் சர்மாவுக்கு 12 வயதும் இருந்தபோதே இந்த ஜோடி 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடியுள்ளனர்.

அந்தக் காலத்தில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அருண் பேடி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது,
“அந்த காலகட்டத்தில் பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் இருந்தார்கள். அப்போதே அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்வார்.
சுப்மன் கில் கொஞ்சம் பொறுமையாக, ஆனால் உறுதியாக பேட்டிங் செய்வார். இவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்த ஆண்டில் பஞ்சாப் அணி டெல்லியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி வட இந்தியாவில் நடந்த துருவ் பாண்டோவ் கோப்பையை வென்றது” என்கிறார்.
பதின் பருவத்தில் இருவரிடையே தொடங்கிய நட்பு இப்போது மேலும் வலுப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது கில்லின் பேட்டை பயன்படுத்தினால் தன்னால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்று நம்பியுள்ளார் அபிஷேக்.
கில்லும் பேட்டைக் கொடுக்க அதைப் பயன்படுத்தி சதம் விளாசியுள்ளார் அபிஷேக் சர்மா.
“சிறுவயதிலும் இப்படித்தான்… அபிஷேக் என் பேட்டைப் பயன்படுத்தி ஆடுவான். அவன் அதிரடியாக ஆடும்போது, எங்கே என் பேட் உடைந்துவிடுமோ என்று பயப்படுவேன். ஆனால், பேட்டை பாதியில் திரும்ப கேட்கமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார் சுப்மன் கில்.
கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் ஒன்றாகக் கடைக்குப் போய் பீட்சா சாப்பிடுவது அவர்களின் வழக்கம். பீட்சா சாப்பிட்டு ரன்களைக் குவிப்போம் என்பதை ஒரு தாரக மந்திரமாகவே அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
இந்திய அணிக்காக ஆடும் இந்தக் காலகட்டத்திலும் அவர்களின் நட்பு தொடர்வது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இருவரும் ஒன்றாக ஒரே பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினாலும் இருவரின் ஆட்ட ஸ்டைலும் வேறாக இருக்கிறது.

ஒருபக்கம் விக்கெட் போனாலும் கவலையில்லை என்ற மனநிலையில் அதிரடியாக ரன்களைக் குவிக்கிறார் அபிஷேக் சர்மா.
மறுபுறம் சுப்மன் கில் பொறுமையாக அதேநேரத்தில் கடைசிவரை உறுதியாக நின்று அணியைக் கரைசேர்க்க விரும்புகிறார்.
நீரும் நெருப்புமாக இருக்கும் இந்த ஜோடியைப் பார்க்கும்போது, முன்காலத்தில் சுனில் கவாஸ்கரும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்த நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன. அதே பாணியில் இந்த ஜோடியும் சாதனைகளைப் படைக்கட்டும்.
– பி.எம். சுதிர்