கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!

கப்பலை அடையாளம் கண்ட ஆய்வாளர்கள்

இன்று இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் நகை 80 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது.

இன்னும் சில மாதங்களில் அது ஒரு லட்சத்தைத் தொடலாம். இதனால் இப்போது தங்கம் எல்லோருக்கும் பொக்கிஷமாகிவிட்டது.

இது நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தங்கம் பொக்கிஷம்தான். அப்படியான பொக்கிஷம் கொட்டிக் கிடந்தால் யார்தான் சும்மாவிடுவார்கள்?

அதனால்தான் கடலில் மூழ்கிப்போன சான் ஜோஸ் கப்பல் புதையல் வேட்டையாளர்களுக்கு ஒரு புனிதப் பொருளாக இருந்து வருகிறது. இதற்காக சொந்தம் கொண்டாடி பல நாடுகள் சண்டைகட்டி வருகின்றன.

என்ன விஷயம்?

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல்.

இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதன் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்படுகிறது.

அதனாலேயே இதற்கு உரிமை கோரி போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில், தற்போது கொலம்பிய ஆய்வாளர்கள், மூழ்கிப்போன அந்தக் கப்பலிலிருந்து தங்க நாணயங்களின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதனை ரோபோடிக் டைவிங் வாகனம் மூலம் எடுத்துள்ளனர். இதிலுள்ள தங்க நாணயங்களை ஆய்வு செய்ததில் அது கடலில் மூழ்கி சிதைந்தபோனது சான் ஜோஸ் கப்பலேதான் என்று உறுதிபடுத்தி உள்ளனர்.

சான் ஜோஸ்…

சான் ஜோஸ் என்பது ஸ்பானிஷ் கடற்படையில் 64 துப்பாக்கிகள் கொண்ட ஒரு பாய்மரக் கப்பலாகும். கடந்த 1698ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் ஸ்பானிஷ் புதையல் கடற்படை என அழைக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதியாக விளங்கியது.

அதாவது, ஸ்பெயின் மன்னர் ஐந்தாம் பிலிப்பின் போருக்கு உதவியாக இந்தக் கப்பல், ஸ்பெயின் காலனி ஆதிக்கத்திற்குள் இருந்த தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து

தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவர பயன்படுத்தப்பட்டது. அதனால்தான் ஸ்பானிஷ் புதையல் கடற்படை கப்பல் எனப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானிஷ் வாரிசுரிமைப் போரின் போது இந்தக் கப்பல் கொலம்பியா நாட்டின் கார்டீஜினா மாகாணத்தின் அருகே உள்ள தீவுப்பகுதியில் மூழ்கிப்போனது.

அதாவது 1708ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்சொன்ன பொக்கிஷப் பொருட்களை எடுத்து வரும்போது பிரிட்டிஷ் படையுடன் நடந்த சண்டையில் இந்தக் கப்பல் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் 600 வீரர்கள் இருந்தனர். அதில் 11 பேரே மீண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

அப்போது இதிலிருந்து விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் கடலில் மூழ்கிப்போயின. அதாவது 200 டன் வெள்ளி, மரகதம் மற்றும் பதினொரு மில்லியன் தங்க நாணயங்கள் உட்பட ஏராளமான புதையல்கள் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

அத்துடன் இந்தக் கப்பல் நினைவிலிருந்தும் மறைந்துபோனது. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் புதையல் வேட்டைக்காரர்களின் நினைவுகளிலிருந்து இந்தக் கப்பல் நீங்கவில்லை. தேடிக்கொண்டேதான் இருந்தனர்.

இந்நிலையில் 1981ம் ஆண்டு கடலுக்கடியில் புதைந்துபோன கப்பல்களை ஆய்வு செய்யும் க்ளோக்கா மோரா என்ற அமெரிக்க நிறுவனம் கப்பல் இருக்கும் இடத்தைக் கண்டறிந்ததாகச் சொன்னது.

ஆனால், கொலம்பியா அரசோ அவர்கள் கேட்ட பங்கை தர மறுத்தது. அதுமட்டுமில்லாமல், மேற்கொண்டு ஆய்வினைத் தொடரவும் கொலம்பியா அரசு அனுமதி தரவில்லை.

இதனால் அந்த நிறுவனம் 1989ம் ஆண்டு கொலம்பியா அரசு மீது கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இது ஒருபுறம் நடக்க கொலம்பியா அரசு 2015ம் ஆண்டு தன்னிச்சையாக செயல்பட்டு இந்தக் கப்பல் இருக்கும் இடத்தை தங்கள் ஆழ்கடல் டைவர்கள் மூலம் 600 மீட்டர் ஆழத்தில் கண்டறிந்ததாக அறிவித்தது.

அதுமட்டுமில்லாமல் அந்த அமெரிக்க நிறுவனம் கண்டறிந்த இடத்தில் சான் ஜோஸ் கப்பல் இல்லை என்றும், தற்போது சான் ஜோஸ் கப்பல் கண்டறியப்பட்ட இடம் ரகசியமானது என்றும் தெரிவித்தது.

பின்னர் செய்யப்பட்ட ஆய்வின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதில் சிதறிக் கிடக்கும் தங்க நாணயங்கள், சிறு பீரங்கிகள், சீனா நாட்டு பீங்கான் கோப்பைகள் உள்ளிட்டவை காணப்பட்டன.

இதனால், சான் ஜோஸ் கப்பல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து பலரின் கண்களை உறுத்தியது.

இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் உள்ள கொலம்பியா அதிகாரிகள், கப்பலிலிருந்து பொருட்களை மீட்கும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தனர்.

இதற்கிடையில் அந்தக் கப்பலில் உள்ள பொருட்கள் தங்களுக்குச் சொந்தம் என்றனர் பொலிவியா நாட்டிலுள்ள குரா குரா (Qhara Qhara) பூர்வகுடி மக்கள்.

ஏனெனில், அப்போது இந்தப் பொருட்களை எடுத்துவர தங்கள் மூதாதையர்களைத்தான் ஸ்பெயின் படையினர் வலுகட்டாயமாகப் பயன்படுத்தினர் எனக் குறிப்பிட்டனர்.

இதுதவிர, ஸ்பெயின் நாடும் சான் ஜோஸ் தங்கள் நாட்டுக்கு சொந்தமான கப்பல் என்பதால் இந்தப் பொக்கிஷத்திற்கு உரிமை கொண்டாடுகிறது.

ஆக, கொலம்பியா அரசு, அமெரிக்கா தனியார் நிறுவனம், ஸ்பெயின் அரசு, குரா குரா மக்கள் ஆகியோர் இதற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்தான் கொலம்பியா ஆய்வாளர்கள் புகைப்படங்களில் உள்ள தங்க நாணயங்களை ஆய்வு செய்ததில் அதிலுள்ள சின்னங்கள், அச்சுகள் எல்லாவற்றையும் கொண்டு அது 18ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைக் குறிப்பதாகவும், 2015ம் ஆண்டு கொலம்பியா கண்டறிந்தது சான் ஜோஸ் கப்பலின் சிதைவே என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீண்டும் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது சான் ஜோஸ் கப்பல்.

 – கவின்

You might also like