கோடம்பாக்கம் ‘படைப்பு’ அரங்கில் ஞாயிறன்று காலை ஒரு நூல் வெளியீடு.
இரா. ம. செளந்தர் எழுதிய ‘தொட்டால் தொடர்ந்து வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீடு.
குடும்ப நிகழ்ச்சிபோல கோலாகலமாக நடைபெற்றது.
சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து பின்னர் குடும்பம், வேலை என பரபரப்பாகி இன்று சொந்தமாக தொழிற்சாலை நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நூலாசிரியர் இரா. ம. செளந்தர்.
இரும்புத் தொழிலில் இருந்தாலும்கூட எழுத்துக் கலையை கைவிடாமல் வைத்திருக்கும் அவரது ஐந்தாவது சிறுகதை நூல் இது.
10.45 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு 1 மணிக்குள் நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே மிகக்குறைவான நிமிடங்கள் பேசியது சிறப்பு.

ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சந்தியா நடராசன், மானா பாஸ்கரன், கோ. வசந்தகுமாரன், தென்றல் சிவக்குமார், நடிகை நீலிமா ராணி, சுந்தரகேசி உள்ளிட்ட படைப்பாளர்களுடன் நானும் பேசினேன்.
நடிகை நீலிமா பேசும்போது, “நடிகைக்கும் இலக்கிய விழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள். என்ன பேசப் போகிறார் என்றும் நினைப்பார்கள். என் தந்தை விஸ்வமோகன் தெலுங்கு எழுத்தாளர். பல புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர்” என்று குறிப்பிட்டார்.
நூலாசிரியரின் குடும்பத்தினர், பள்ளி நண்பர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தது மகிழ்ச்சி. மதியம் சுவைமிகு உணவளித்து உபசரித்தார்கள்.
– சுந்தரபுத்தன்