தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், சட்டசபைத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார். தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், இரண்டாம் மாநாட்டை மதுரையில் நேற்று நடத்தினார்.
முதல் நாளே தொண்டர்கள் வர ஆரம்பித்தனர். நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை சாரையாக தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
பிற்பகலிலேயே மாநாட்டுத் திடல் நிரம்பியது. 3.40 மணி அளவில் மேடைக்கு வந்தார் விஜய். ரேம்ப் வாக் மேடையில் சென்று தொண்டர்களைச் சந்தித்தார். செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தொண்டர்களின் அன்புப் பிடியில் இருந்து அவரைப் பாதுகாக்க பவுன்சர்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். மேடையில் அவருக்கு ஜல்லிக்கட்டுக் காளை பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் மைக் பிடித்த விஜய், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் உரையை ஆரம்பித்தார். அவரது பேச்சின் சுருக்கம்:
”ஒரு சிங்கம் எப்போதும் பெக்கூலியர் தான். ஒரு முறை சிங்கம் கர்ஜித்தால் அந்த சத்தம் 8 கிமீ தூரம் அதிரும். அனைத்து திசைகளிலும் அதிரும்.
அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கைப் பார்க்க வராது. வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் விலங்குகளைத் தான் வேட்டையாடும்.
அதிலும் தன்னைவிட பெரிய மிருகங்களை குறிவைத்துத் தாக்கும். ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும், உயிரில்லாதது, கெட்டுப்போனதைத் தொட்டுப் பார்க்காது. அவ்வளவு பெரிய சிங்கம் எதையும் தொடாது. தொட்டால் விடாது.
காட்டுக்குள் எல்லையை வகுத்துக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்துக்குக் கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும்.
தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்தா, தனியாக வந்து அத்தனைக்கும் தண்ணி காட்டும்.
எப்போதும் எதிலும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும். காட்டில் நரிகள், குள்ளநரிகள் இருக்கலாம். ஆனால் அந்தக் காட்டின் ராஜா சிங்கம் தான்.
சிங்கத்தைப் பற்றி பேசிட்டு சிங்கக் குட்டிகளையும் சிங்கப்பெண்களையும் பேசாமல் இருக்க முடியுமா?
என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர், தோழிகளுக்கும் நேரில் வர முடியாத சூழலில் வீட்டில் இருந்தபடியே இந்த மாநாட்டை டிவியில் பார்த்து கொண்டிருக்கும் எனது அக்காக்கள், தாய்மார்களுக்கு எனது வணக்கம். என்னுடைய உயிர் வணக்கம். வீரம் விளையும் மதுரை மாமண்ணை வணங்குகிறேன்.
மதுரை என்றால் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது வைகை ஆறு தான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை மீனாட்சி அம்மன். இந்த மண்ணோட உண்மையான குணம் உணர்வுப்பூர்வமான மண்.
இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமான ஆட்கள் தான். இந்த மண்ணில் கால் வைத்த பிறகு ஒருவரைப் பற்றி தான் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
எம்.ஜி.ஆர். எனும் மாஸ்
சினிமா என்றாலும், அரசியல் என்றாலும் சரி நமக்கு பிடித்தது எம்.ஜி.ஆர். அவரது மாஸ் என்னவென்று தெரியுமா? அவர் உயிரோடு இருக்கும் வரை வேறு யாரும் முதல்வர் சீட்டைப் பற்றி யாரும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

‘எப்படியாவது முதல்வர் சீட்டை எனக்குக் கொடுங்க.. எனது நண்பர் வந்ததும் கொடுத்து விடுகிறேன்’ என எதிரியைக்கூட கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர். அவரோடு பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவரைப் போன்ற குணம் கொண்ட விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?
தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமாக நம்முடன் நிற்பவர்கள். அதற்கு அடையாளம் தான் மதுரை மண். தவெக கையில் எடுத்து இருக்கும் அரசியல் அப்படி போன்றது தான்.
உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்லவர்கள் அரசியல், நல்லவர்களுக்கான அரசியல், நாட்டு மக்களுக்கான அரசியல் நல்லது மட்டுமே செய்யும் அரசியல்.
இதோ நம்முடைய 2-வது மாநில மாநாடு வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. அப்படித்தான் இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்திருக்கிறோம்.
சட்டசபைத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக. இன்னொன்று திமுக.
1967, 1977-ல் அரசியல் மாற்றம் நடந்ததைப் போல் 2026-லும் மாற்றம் நிகழப்போகிறது என்று உறுதியாக சொல்லும் மாநாடு தான் நம்முடைய 2-வது மாநில மாநாடு.
நம்முடைய நிலையில் வலிமையாக இருக்கிறோம். நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக தான். நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான்.
ஏதாவது அண்டர்கிரவுண்ட் ஆதாயத்துக்காக டீல் போட்டுக் கொண்டு, கூட்டணி அமைத்து அரசியல் ஆதாயத்துக்காக ஊரை ஏமாற்றும் கட்சி தவெக அல்ல. யாருக்காகவும் எதற்காகவும் பயம் கிடையாது என்று முழங்கிவிட்டு ஓய்ந்தார் இளையதளபதி.
– பாப்பாங்குளம் பாரதி.