மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அது உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது.
எண்பதுகளில் படத்தொகுப்பாளர் லெனின் ‘நக்கீரன்’ இதழில் எழுதிவந்த தொடருக்கான படங்களை ஓவியர் மருதுவிடம் வந்து வாங்கிச் செல்லும் யாரோ ஒருவராகத்தான் ‘ஜனா’ அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
‘நாளடைவில் அந்தப் படங்களின் நுட்பத்தையும் அது பேசும் அரசியலையும் ரசித்து மருதுவின் தோழராய் அவர் மாறிப்போனாராம்.
பல படங்களுக்குத் துணை இயக்குநராகப் பணியாற்றிவந்த ‘ஜனா’வுக்குத் தனியே ஒரு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கைகூடி வந்திருக்கிறது. அதனை மருதுவிடம் தான் ‘ஜனா’ முதலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்போது மருது “தயாரிப்பாளரிடம் போய் கதையை வாய்மொழியாகச் சொல்வதைவிட அதையே வரைந்து காட்சிப்படுத்தி வைத்துக் கொண்டு, காட்சிக்குக் காட்சி சித்திர வடிவத்தில் விவரித்தால் அவர்களுக்கு உங்கள் தன்னம்பிக்கையும் தனித்துவமும் புரியவரும்” என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.
அடுத்து அவர் சொல்லியிருப்பதுதான் மிக முக்கியமான ஒன்று.
“ஜனாவின் மீதிருந்த பிரியத்தின் காரணமாக 20 நாட்கள் அவருடன் அமர்ந்து ஒவ்வொரு காட்சியாய் விளக்கி விளக்கி மொத்தம் எடுக்கப்பட வேண்டிய 500 காட்சிகளையும் சித்திரமாக்கித் தந்தேன்.
அதையெல்லாம் பத்திரமாக வைத்திருப்பதாகப் பின்னர் என்னைச் சந்தித்த நேர்வுகளில் ஜனா நன்றிப்பெருக்கோடு சொல்லியிருக்கிறார்” என்கிறார் மருது.
அதைப் படித்ததும் நான் அசந்துபோனேன். மேற்கொண்டு நகர முடியாமல் ஆணியடித்தாற்போல அங்கேயே நின்றுவிட்டேன்.
ஜனா அப்பொழுது கயிற்று ஏணியில் ஏறியேறி மேலே செல்ல எத்தனித்துக் கொண்டிருந்த ஓர் அறிமுக இயக்குநர் மட்டுமே. மணிரத்தினமோ, சங்கரோ, மருதுவின் நண்பரான நாசரோ கூட அல்லர்.
ஆனால் ஜனாவுக்காக இருபது நாட்கள் அமர்ந்து ஐந்நூறு காட்சிகளை மருது வரைந்து கொடுத்தார் என்பது நினைக்க நினைக்க பிரமிப்பை அளிக்கும் அசாதாரணமான ஒரு நிகழ்வு.
என் பிரமிப்பு அடங்குவதற்குள் என் நண்பர்களிடம் மருதுவின் கலைமனதைப் பாராட்டித் தள்ளிவிட்டேன். ஆனால் இதில் வேடிக்கை என்ன தெரியுமா? மருதுவிடம் மட்டும் நான் இதுவரை இதுபற்றிப் பேசவில்லை என்பதுதான்.
ஆகவே, மருது, உங்கள் அர்ப்பணிப்புக்காக இதோ ஊரறிய, உலகறிய உங்களைப் பாராட்டுகிறேன். தமிழ்ச் சமூகத்தின் சார்பாக ஓர் எளிய ஓவிய அன்பனான என் நன்றியறிதலை ஏற்றுக் கொள்ளுங்கள்!
– வேணு மாதவன்
நன்றி: காக்கைச் சிறகினிலே. மே – 2021