இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம்.
அப்போது நான் மூன்று மாதக் குழந்தை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட சண்டையில், என் அம்மாவழிப் பாட்டி குடும்பத்திடம் கொடுத்து என்னை வளர்க்கச் சொல்லிவிட்டார்கள். பச்சிளம் குழந்தையிலிருந்தே அவர்கள் நிழலில்தான் வளர்ந்தேன்.
ஆனாலும், அவர்களிடம் ஒரு தூரம் இருந்துகொண்டே இருக்கும். நினைத்தவற்றை அவர்களிடம் பேச, பகிரவும் முடியாது; வேண்டியவற்றை அவர்களிடம் கேட்கவும் முடியாது. இதனால், தனிமைதான் என் நீங்காத துணை என்று ஆனது.

பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் படித்தேன். உயர்கல்வி பயில, இரண்டு வருடங்கள் என் பெற்றோருடன் இருக்க வேண்டிய சூழல் அமைந்தது.
ஆனால், அம்மா, அப்பா, தங்கை, தம்பி என எல்லோரும் என்னிடம் தாமரை இலை தண்ணீர்போல ஒட்டாமலே இருந்தனர்.
சொல்லப்போனால், இதுவரை நான் என் அப்பாவை 100 முறைக்குள்தான் ‘அப்பா’ என்றே அழைத்திருப்பேன்.
இதுபோன்ற உறவுச் சிக்கல்களால், அந்த இரண்டு வருடங்களும் எனக்கு வெறுமையிலேயே கழிந்தன.
நடனம் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். ஆனால், வீட்டுக்கு பயந்து நான் யாருக்கும் தெரியாமல் நடனம் கற்றுக்கொண்டேன்.
அவர்களுக்குத் தெரியவந்தபோது, அத்தோடு அந்த ஆசை முற்றுப்பெற்றுவிட்டது. அம்மா, படிப்புக்கான பணத்தை மட்டும் எப்படியோ கொடுத்துவிட்டார்.
தனிமை, துயரம், அன்புக்கான ஏக்கம் எல்லாம் சேர்ந்து என்னை மன உளைச்சலில் தள்ளின.
பால பாடங்களைக் கற்க வேண்டிய வயதில் வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டது.
வெளியில் சொல்ல முடியாத வலிகள் இன்றும் மனதில் ஆறாத புண்ணாகப் புரையோடிப் போயுள்ளன.
இவையெல்லாம் போதாது என, முதுகுத் தண்டுவடத்தில் பிரச்னை ஏற்பட்டு, 5, 6 வருடங்கள் சிரமப்பட்டுத்தான் மீண்டேன். குடும்பத்தில் இருந்து வெளிவந்து, வேலை செய்து, என்னை நானே பார்த்துக் கொள்ள நினைத்தேன்.
பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்தேன்; வேலை கிடைக்கவில்லை. ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் வேலை கிடைத்தது. சமையல் முதற்கொண்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும்.
ஒருநாள், நான் வேலை செய்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் வந்திருந்த மலேசியத் தமிழர்கள், தங்களின் வயதான தாயைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆள் வேண்டும் என்றும், வாரத்தில் இரண்டு நாள்கள் விடுமுறை என்றும் கூறினர்.

பொருளாதார நெருக்கடி என்னை உந்தித் தள்ள, அவர்களுடன் மலேசியா சென்றேன். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது ஒரு நரகத்தில் இருந்து தப்பி வந்து இன்னொரு நரகத்தில் மாட்டிக் கொண்டேன் என்று.
வீட்டு வேலைகளில் இருந்து எல்லா வேலைகளையும் நேரம், காலம், ஓய்வு இல்லாமல் செய்யச் சொன்னார்கள்.
பல போராட்டங்களுக்குப் பிறகு, மூன்று மாதங்களில் அங்கிருந்து இலங்கை திரும்பினேன்.
தோழி ஒருத்தி, இந்தியாவில் பியூட்டிஷியன் வேலை எளிதாகக் கிடைக்கும் என்று கூற, தெரிந்த குடும்பம் ஒன்று நான் சென்னை வர ஏற்பாடு செய்தது.
ஆனால், கோடம்பாக்கத்தில், உள்ள ஒரு சின்ன டீக்கடையிலதான் வேலைக்குச் சேர முடிந்தது. காலையில் கடையைத் திறப்பது முதல், இரவு கணக்கு, வழக்குகளை முடித்துவிட்டுச் செல்வது வரை எல்லா வேலைகளையும் செய்யப் பழகினேன்.
அப்போதுதான், இங்கு தங்கியிருந்த, கொழும்புவைச் சேர்ந்த காயத்ரி என்ற தோழி அறிமுகமானார்.
அவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
உணர்வுபூர்வமான உரையாடலின் தொடர்ச்சியாக, அவர் என்னைக் கல்லூரிப் படிப்பைத் தொடரச் சொல்லி உற்சாகப்படுத்தினார். கல்லூரியில் சேர்வதற்கும் வழிகாட்டினார். கல்லூரியில் சென்ற வருடம் நான் சேர்ந்தபோது, எனக்கு வயது 28.

நாட்டியத் துறையில், தற்போது இரண்டாமாண்டு பயின்று வருகிறேன். என் கனவை அடைந்த மகிழ்ச்சி எனக்கு.
கல்லூரியின் தலைவர், முனைவர் குமார் ராஜேந்திரன் சார் என் சூழலைப் புரிந்து கொண்டு, அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து எனக்கான உதவிகளைச் செய்கிறார்.
அவரது அனுமதியின் பேரில் கல்லூரியில் இயங்கி வரும் ‘தாய்’ இணைய இதழில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
அங்கு பணியாற்றும் இதழாசிரியர் மணா, பேராசிரியர்கள் கவிதா, கோதை உட்பட, இன்னும் பல உள்ளங்கள் இந்தக் கல்லூரி வளாகத்தில் என்னை அரவணைத்துக்கொண்டன.
குறிப்பாக கோதை மேம், நான் இலங்கையைச் சேர்ந்த மாணவி என்பதால் என் கல்வி தொடர்பான சிக்கல்கள் எழும் போதெல்லாம் எனக்காக சென்னைப் பல்கலைக்கழகம் வரை அலைந்து திரிந்து, சிரமங்களைப் பொருட்படுத்தாமல் உதவி செய்தார்.
இப்போது நான் நடனக் கல்வியோடு சேர்த்து, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கற்று வருகிறேன்.
எதிர்காலத்தில் நடன ஆசிரியர் ஆக வேண்டும். எத்தனையோ பேருக்கு ஒளியாக இருந்த இந்தக் கல்லூரி எனக்குக் கொடுத்திருப்பதோ பேரொளி. இதுவரை வலிகளை மட்டுமே பார்த்த நான், இப்போது வானவில் வாழ்க்கை வாழ்கிறேன்.
என் கல்லூரிக்கும், இங்கு எனக்குக் கிடைத்திருக்கும் மனிதர்களுக்கும், அன்புக்கும், அக்கறைக்கும் ஒற்றை வார்த்தையில் நன்றி சொல்லிவிட முடியாது. என் ஐந்து வருடக் கல்வி முடியும்போது, எனக்கு வாழ்வில் கிடைத்திருக்கும் இந்த வண்ணங்கள் இனி என்னை விட்டு அகலாது.
நன்றி: அவள் விகடன்

