ஆண்களின் ஆளுமைக்கு உட்பட்ட ஒவ்வொரு இடமாக கைப்பற்றி வருகிறார்கள் பெண்கள்.
கடந்த வாரம் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ‘சின்னர்ஸ்’ (Sinners) என்ற படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றுள்ளார் ஆட்டம் துரால்ட் அர்காபா.
இதன்மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை இதுவரை பெண்கள் வாங்கியதில்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறார்.
இப்பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பிரதிநிதி என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்நார்ட் நகரில் பிறந்தவர்தான் ஆட்டம் துரால்ட். இவரது அம்மா பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

அப்பா ஆப்பிரிக்க – அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அந்த வகையில் இரு நாடுகளும் இப்போது ஆட்டமின் வெற்றியால் ஆஸ்கர் விருதுக்கு சொந்தம் கொண்டாடுகிறது.
அமெரிக்காவில் வளர்ந்த ஆட்டமுக்கு சிறுவயதில் இருந்தே கலையின் மீது மிகுந்த ஈடுபாடு அதிகம்.
அதனாலேயே முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு உதவி கேமராமேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் இசை வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று படிப்படியாக வேலை பார்த்து, திரைப்படங்களுக்கான கேமராமேனாக உயர்ந்திருக்கிறார்.
இந்த சூழலில்தான் 2025-ஆம் ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படத்தில் கேமராமேனாக பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
1930-களில் நடப்பதாகத் திரையமைக்கப்பட்ட ‘சின்னர்ஸ்‘ திரைப்படத்தை ஐமேக்ஸ் தரத்தில் படம்பிடித்து அசத்தியுள்ளார் ஆட்டம்.
படம் வெளியானபோதே, அது படமாக்கப்பட்ட விதத்துக்காக பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
அப்போதே ரசிகர்கள் பலரும் ஆட்டம் துரால்டுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதினர்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இப்போது ஆட்டமுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
ஆஸ்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆட்டம், ‘‘இங்கு இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
இந்த அறையில் இருக்கும் அனைத்துப் பெண்களும் எழுந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஏனெனில், நீங்கள் இல்லாமல் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது.
இந்த முழுப் பயணத்திலும் அனைத்துப் பெண்களிடமிருந்தும் நான் மிகுந்த அன்பை உணர்ந்தேன்.
உங்களைப் போன்றவர்களால்தான் இது போன்ற தருணங்கள் சாத்தியமாகின்றன.
என்னைப் போலவே இருக்கும் பல சிறுமிகள் இன்று இரவு நிம்மதியாக உறங்குவார்கள்,” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆஸ்கரில் கிடைத்த வெற்றியின் மூலம் பெண் சமுதாயத்துக்கு மற்றுமொரு சிறகை ஆட்டம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
இனி இப்பிரிவில் பெண்களும் கடுமையாகப் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
– ராதா