மனைவி ஷாலினிதான் என் வாழ்வின் பலம்!

நடிகர் அஜித்குமார் உருக்கம்

நடிகர் அஜித்குமார் திரையுலகில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதை நினைவு கூர்ந்து, தனது ரசிகர்களுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனைக் கொண்டாடுவதற்காக எழுதவில்லை.

எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு,  “இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் என் சுய முயற்சியால் மட்டுமே நுழைந்தேன். காயங்கள், தோல்விகள், அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை.

ஏனெனில், விடாமுயற்சி என்பதை நான் வெறுமனே கற்றுக்கொள்ளவில்லை; அதைப் பரிசோதித்து வாழ்ந்து வருகிறேன்.

என் வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதெல்லாம் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வரச் செய்தது.

மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. இருந்தும் தொடர்ந்து பயணிக்கிறேன்.

இது விருதுகளுக்காக அல்ல; ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலியின் மூலம் என்னை எனக்கே நிரூபிப்பதற்காக.

எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை பலப்படுத்திய இந்திய அரசுக்கு நன்றி.” என்றார்.

அதோடு, ரசிகர்களின் அன்பைத் தவறாகவோ, சுயலாபத்துக்காகவோ பயன்படுத்த மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள அஜித்குமார்,   

என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான் எனவும் எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார் எனவும் தனது மகன், மகள், பெற்றோர் என குடும்பத்தாரின் ஆதரவுக்கும்  அஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like