அப்பா செஸ் சக்கரவர்த்தி – மகன் ஓவிய இளவரசன்!

அப்பாக்கள் எந்தத் துறையில் ஜொலிக்கிறார்களோ, அதே துறையில் ஈடுபடுவதைத்தான் பொதுவாக அவர்களின் வாரிசுகள் விரும்புவார்கள். சச்சினின் மகன் அர்ஜுன் அப்பா வழியில் கிரிக்கெட்டில் நுழைந்தார்.

இளையராஜாவின் மகன் யுவனுக்கும், யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸுக்கும் தந்தையின் துறையான இசையில்தான் ஈடுபாடு ஏற்பட்டது.

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அன்புமணி என்று அரசியலில் இந்த வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

வழக்கமான இந்த ஃபார்முலாவில் இருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்தின் மகன் அகில் ஆனந்த்.

விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் பெரிய செஸ் வீரராக இருந்தாலும், அவரது மகன் அகிலுக்கு அதில் நாட்டமில்லை. மாறாக ஓவியம் வரைவதில்தான் ஆசை.

கணிதம், புராணம் மற்றும் இயற்கையை ஒருங்கிணைத்து சிக்கலான காட்சியமைப்புகளை வரைந்தும், நெய்தும் அவர் உருவாக்கிய ‘மோர்ஃஜெனெசிஸ்’ வகை ஓவியங்களின் கண்காட்சி விரைவில் நடக்கவுள்ளது.

டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் அகில் ஆனந்த்துக்கு சிறுவயதிலேயே ஓவியங்களை வரைவதில் அதிக விருப்பம் இருந்துள்ளது.

இதைப் பார்த்த விஸ்வநாதன் ஆனந்த், இந்த துறையில் அகிலுக்கு பயிற்சி கொடுக்க விரும்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து 9 வயது முதல் டயானா சதிஷ் என்ற ஓவியரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார் அகில்.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிராமப்புற கலைஞர்களிடம் இருந்து ஹஸ்தா என்ற கலை வடிவத்தையும் கற்ற அகில் ஆனந்த், பின்னர் இவை இரண்டையும் இணைத்து, ‘அகிலிஸம்’ என்ற பெயரில் தனது பாணியில் ஓவியங்களை தீட்டி வருகிறார்.

“2022-ம் ஆண்டில் நான் பிங்க்ளா கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் கலை ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் கலைத் தொழிலையே செய்துவருகின்றனர்.

அவர்கள் என்னைப் பெரிதும் ஈர்த்தனர். அங்குள்ள கலைஞர்கள் மரங்கள் மற்றும் பூக்கள் போன்ற இயற்கையான விஷயங்களில் இருந்து வண்ணங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை.

நமக்கு எளிதில் கிடைக்கும் விஷயங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

அப்படி இருந்தாலும் அவர்களின் கலைவடிவங்கள் தனித்துவமாக உள்ளன.

அவர்களிடம் இருந்து ஓவியம் சார்நத பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்” என்கிறார் அகில் ஆனந்த்.

அகிலின் ஓவிய ஆர்வத்தை வளர்க்க அவரது அப்பா ஏதாவது அறிவுரைகளை கூறுவாரா என்று கேட்டதற்கு, “என் அப்பா எனக்கு எப்போதும் நேரடியாக அறிவுரைகளைச் சொல்வதில்லை.

ஆனால், சிலமுறை நான் தப்பாக வரைந்துவிட்டேனோ என்ற கவலையில் இருக்கும்போது என்னை வெளியில் அழைத்துச் செல்வார். தனது வாழ்க்கையில் தவறுகளைச் செய்தபோது அதைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதை எனக்கு எடுத்துச் சொல்வார்.

நாம் எந்த விஷயத்தைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்யவேண்டும் என்று அப்பா கூறுவார்.

நான் ஏதாவது வரையும்போதெல்லாம் என் அருகிலேயே அமர்ந்து அதைக் கவனிப்பது அப்பாவின் வழக்கம்.

அப்போது நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் கேள்விகள் கேட்பார்.

நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேட்மேன் மற்றும் ஸ்டார்-வார்ஸ் சீரிஸ்களைப் பார்ப்போம்.

அவரும் நானும் ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றுள்ளோம்.

ஸ்டிங் மற்றும் யூ2 இசை ஆல்பங்களை நாங்கள் இருவரும் அமர்ந்து கேட்போம். ஆனால், எனக்கு அப்பாவைவிட நிறைய பாடல்கள் தெரியும்” என்கிறார் அகில்.

அப்பா வழியில் மகனும் சாதனைகளை படைக்கட்டும்.

 – பி.எம். சுதிர்

You might also like