ஒரு பாட்டில்தான் எத்தனை பிணைப்புகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தமிழத் திரையுலகில் திறமையுள்ளவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரமோ, புகழோ சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக அவர்களும் தளர்ந்துவிடுவதில்லை.

திரும்பத்திரும்ப தன்முனைப்புடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களை வெளியுலகம் கவனிக்க ஆரம்பிக்கிறது. 

இந்தப் பட்டியலில் தமிழ்த் திரை இசை வெளியிலும் வெவ்வேறு இசை மேடைகளிலும் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து தன்னை முன்னிறுத்தியபடி இயங்கிக்கொண்டிருப்பவர் பாடகர் முகேஷ். கொஞ்சம் பேரை விரித்துச் சொன்னால், முகேஷ் முஹமத்.

எத்தனையோ படங்களில் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து குறிப்பிடத்தக்க பாடல்களைப் பாடியிருக்கிறார் முகேஷ். சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே’ படத்தில் டைட்டில் சாங்கும் இவர் பாடியிருப்பார்.

தற்போதும் பெரும்பாலான இசை நிகழ்ச்சிகளில், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், தியாகராஜ பாகவதர், டி.எம்.எஸ். என்று பலருடைய ‘கிளாஸிக்’ பாடல்களை கனக் கச்சிதமாகப் பாடி பார்வையாளர்களிடையே வெகுவான அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உள்ளத்தில் நல்ல உள்ளம்…” என்ற சீர்காழியின் பாடலை உச்சகட்டக் குரலில் இவர் பாடும்போது, அரங்கமே மனநிறைவுடன் கைத்தட்டல் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது.

தெளிவான தமிழ் உச்சரிப்புக்கும் குரலின் உச்ச ஸ்தாயிக்கும் பேர்போன முகேஷ், இதைவிடவும் தமிழ்த்திரை இசையுலகில் கவனம் பெறுவார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.

இப்படிப்பட்டவருடன் எனக்கு நேரடியாக சில அனுபவங்கள்.

ஜெயா டிவியில் நான் எழுதி இயக்கிய ‘தமிழ் மண்ணின் சாமிகள்’ என்கிற பிரபலமான காட்சித் தொடருக்கான டைட்டில் சாங்கை பாடியதும் முகேஷ் தான்.

அதற்கான பாடலை நான் எழுதியிருந்தேன். 

மூன்று முறை அவரை ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சந்தித்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கிராமத்து தெய்வங்கள் பற்றிய தொடருக்கான பாடலை அவ்வளவு அழுத்தமான குரலில் அவர் பாடியிருந்தவிதம் அந்தத் தொடருக்கே சிறப்பு சேர்த்தது.

கேட்பவர்களுக்கு துடிப்பேற்றும் அளவுக்கு வீரியத்துடன் அமைந்த அந்தப்பாடலுக்கு இசையமைத்தவர் ஜோயல் தங்கபாலன் என்ற ஒரு கிறிஸ்தவ நண்பர்தான். இதே தொடருக்கு பின்னணிக் கொடுத்தவரும் ரஷல் ஜெயபதி என்கின்ற நண்பர்தான். ஒரு பாட்டின் பின்னணியில் எவ்வளவு நட்பு ரீதியான பிணைப்புகள்.

இதில், குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு தமிழ் மண்ணின் சாமிகளுக்கான முதல் எபிசோடைத் தயாரித்து அதில் வெளிவருவதற்கு முன்பு போயஸ் கார்டனுக்கு செல்வி ஜெயலலிதா அவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டபோது, உடனடியாக அதைப் பார்த்துவிட்டு, “வெரி குட்” என்று அவர் கைப்பட எழுதியிருந்தார்.

இத்தகைய நிறைவான பாராட்டைப் பெற்றதில், முகேஷுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.

தமிழ் மண்ணின் சாமிகள் தொடருக்காக பாடகர் முகேஷ் பாடிய பாடலின் லிங்க் முதல் கமெண்டில் இணைக்கப்பட்டுள்ளது.

– மணா

You might also like