ஓஹோ எந்தன் பேபி: ட்ராமாவா, ரொமான்ஸ் காமெடியா?

சில திரைப்படங்களின் டீசர், ட்ரெய்லர் வெளியானவுடனே, அதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காகிவிடும். அப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்கியது கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’.

விஷ்ணு விஷால் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிற இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர் நாயகன் நாயகியாக அறிமுகம் ஆகியிருக்கின்றனர். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

‘ஓஹோ எந்தன் பேபி’ ஒரு ரொமான்ஸ் காமெடியாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது அதன் ட்ரெய்லர். உண்மையில் படமும அப்படித்தான் இருக்கிறதா?

’ஓ.எ.பே’ கதை!

அஸ்வின் (ருத்ரா) திரைத்துறையில் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து வருகிறார். இயக்குநர் ஆகும் கனவில், சில நாயகர்களைச் சந்தித்து கதை சொல்கிறார். அந்த வரிசையில், நடிகர் விஷ்ணு விஷாலைச் சென்று பார்க்கிறார்.

அஸ்வின் சொல்ல முயல்கிற கதைகளைக் கேட்கிற நிலையில் விஷ்ணு விஷால் இல்லை. ‘ஒரு ரொமான்ஸ் கதை இருந்தா டெவலப் பண்ணி கொண்டுவாங்க’ என்கிறார்.

ஏமாற்றத்துடன் திரும்பும் அஸ்வின், பாதி வழியில் தனது வாழ்வில் நடந்த காதலையே ஒரு கதையாகச் சொல்வதென முடிவெடுக்கிறார். மீண்டும் விஷ்ணு விஷாலைச் சந்திக்கிறார்.

பள்ளி, கல்லூரி மற்றும் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தனது வாழ்வில் வந்த மூன்று பெண்களின் மீதான காதலைச் சொல்கிறார்.

மூன்றாவதாக வந்த பெண்ணே உண்மையில் அஸ்வினைக் காதலித்திருக்கிறார்; போலவே, அவரும் அப்பெண்ணைக் காதலித்திருக்கிறார்.

தவறான புரிதல் இருவரது காதல் பிணைப்பையும் உடைத்தெறிந்திருக்கிறது.

‘அதுக்குப்பிறகு என்னாச்சுன்னு மீதிக்கதைய முடிங்க’ என்கிறார் விஷ்ணு விஷால்.

முதல் பாதி முழுக்க உண்மையில் நடந்தது. அப்படியானால், இரண்டாம் பாதியும் அப்படி இருந்தால்தானே நன்றாக இருக்கும். விஷ்ணு விஷால் சொல்லும் இந்தக் கருத்தை அஸ்வின் ஏற்றாரா? தன் காதலைத் தேடிச் சென்றாரா என்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’யின் மீதி.

ஏமாற்றம் தருகிறதா?

’ஓஹோ எந்தன் பேபி’யின் ஆகப்பெரிய சிறப்பு, இதில் நாயகன் விஷ்ணு விஷாலும் இயக்குனர் மிஷ்கினும் அவர்களாகவே வருகின்றனர்.

இதற்கு முன்னும் திரை நட்சத்திரங்கள் இப்படி ‘கேமியோ’ செய்திருக்கின்றனர் என்றபோதும், இதில் அவர்களது கடந்த காலம், நிகழ்கால நிகழ்வுகளை ஆங்காங்கே உணர்த்துவதாக உள்ளது அந்த இருப்பு.

’மெட்ராஸ், அட்டகத்தி படங்களை நான் மிஸ் பண்ணேன்’ என்கிறார் விஷ்ணு விஷால்.

உதவி இயக்குநராக இருக்கும் பெண்ணை ‘டி’ சேர்த்து விளிக்கிறார் மிஷ்கின்.

இவை அனைத்தும் பொதுவெளியில் அவர்கள் தந்த பேட்டிகளில் இடம்பெற்ற விஷயங்கள்.

‘அந்த பொண்ணு டைரக்ட் பண்ண படத்தோட ஹார்ட் டிஸ்க் காணாம போனவுடனே எடுத்தவரைக்கும் போதும்னு அதை ரிலீஸ் பண்ணச் சொன்னோமே’ என்று வருகிற சில வசனங்கள், ‘ப்ப்பா..’ என்று நம்மை ஆச்சர்ய அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றன.

இந்த படத்தில் பிரதான பாத்திரங்களான அஸ்வின், மீராவாக நடித்துள்ளனர் ருத்ரா மற்றும் மிதிலா பால்கர்.

இந்திப் படமான ’கார்வான்’, ‘ஓ மை கடவுளே’வின் தெலுங்கு ரீமேக் உட்படச் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகத் திகழ்பவர். இப்படத்தின் வழியே தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவரது வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்றதொரு பாத்திரம். அதில் பாந்தமாகப் பொருந்தி நிற்கிறார்.

வெவ்வேறு கெட்டப்களில் தோன்றுகிற வாய்ப்பை முதல் படத்திலேயே பெற்றிருக்கிறார் ருத்ரா. நடிப்பு மற்றும் குரல் பயிற்சியில் இன்னும் தேற வேண்டும் என்பதாக உள்ளது அவரது திரை இருப்பு.

அதனால், ‘குருவி தலையில் பனங்காய்’ வைத்தது போலத் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறார்.

சமூகவலைதளங்களில் வைரலாக விளங்கும் அஞ்சு குரியன் இப்படத்தில் இருக்கிறார்.

ஆனால், அவருக்குத் திரையில் முக்கியத்துவம் தரப்படவில்லை.

ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் இருவரும் மிகச்சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.

இன்னும் கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, விஜயசாரதி, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களில் எவருமே நம் மனதில் பதியும்படியான நடிப்பைத் தரவில்லை. அதற்கேற்ற காட்சியமைப்பு படத்தில் இல்லை. ’ஓஹோ எந்தன் பேபி’யின் மிகப்பெரிய பலவீனமாக அதுவே இருக்கிறது.

இதுபோக நிர்மல், நிவாஷினி, வைபவி தாந்த்லே ஆகியோர் இதிலுண்டு.

நாயகனின் பள்ளித்தோழனாக நடித்த நிர்மல், கல்லூரித் தோழியாக நடித்த நிவாஷினி இருவருமே படத்தில் ஜோடியாகத் தோன்றியிருக்கின்றனர். அவர்களது நடிப்பு சட்டென்று ஈர்க்கிறது.

அனைத்தையும் தாண்டி, இந்த படத்தில் பளிச்சென்று தெரிவது வைபவி தாந்த்லே. ’திரையில் தோன்றினாலே தீப்பற்றிக்கொள்ளும்’ என்கிற அளவுக்கு இருக்கிறது அவரது இருப்பு.

சரியான படங்களைத் தேர்ந்தெடுத்தால், இன்னொரு மமிதா பைஜுவாக, கயாடு லோஹர் ஆக அவர் திரையுலகில் வலம் வரக்கூடும்.

’ஒவ்வொரு பிரேமும் உங்களை வசீகரிக்கும்’ என்று படம் பார்க்க வந்திருக்கிற நமக்குச் சொல்கிற வகையில் ’ஓஹோ எந்தன் பேபி’யின் காட்சியாக்கம் உள்ளது.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் மற்றும் கலை இயக்குனர் ராஜேஷ் இருவரும் அதனைச் செயல்படுத்தியிருக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் பிரணவ் பெரும்பாலான காட்சிகளில் நிதானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சீராகக் கதை திரையில் விரியத் துணை நின்றிருக்கிறார். ஆனாலும், பல காட்சிகள் விடுபட்ட உணர்வே நம்மை வந்தடைகிறது.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் முதல்முறை கேட்டவுடனேயே பிடித்துப் போகின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, காட்சிகளுக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். ஆனாலும், அது திரையைப் பார்வையாளர்கள் இறுக்கி அணைக்க உதவவில்லை.

இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல தொழில்நுட்ப அம்சங்களில் தனிக்கவனம் செலுத்தப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது.

இப்படத்தின் கதையை அமைத்திருக்கும் முகேஷ் மஞ்சுநாத், அதற்கான திரைக்கதையை சாரதா உடன் சேர்ந்து எழுதியிருக்கிறார்.

பாத்திர வார்ப்பு, கதை முடிச்சு, அவற்றை விலாவாரியாக விளக்குவதற்கேற்ற காட்சிகள் என்று எல்லாமே இருந்தும் நாயகன் நாயகியின் காதலோடு நாம் முழுமையாக ஒன்ற முடியவில்லை.

சில வெளிநாட்டு படங்கள் அந்த மாயாஜாலத்தை எளிதாகச் செய்துவிடும்.

காரணம், அவர்களது பின்னணி தெளிவாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கும்.

இப்படத்தில் அது ‘மிஸ்’ ஆகியிருக்கிறது.

இதற்கு மேல் இடம்பெறுகிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ லிஸ்டில் சேர்ந்துவிடும் என்பதால், ‘அது வேண்டாம்’ என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.

நாயகனுக்கும் நாயகிக்குமான காதலைச் சிதைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் தவறான புரிதல் ஏற்படக் காரணமாக இருப்பது இருவரது கடந்த கால அனுபவங்கள்.

இருவருமே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளின் தவறான வாழ்க்கை அணுகுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள்.

அதனைத் திரையில் அடிக்கோடிட்டுச் சொல்லும்போது, அந்த பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

‘இதுதான் இவர்களது பிரச்சனை’ என்று தெளிவாக, தீர்க்கமாகச் சொல்ல வேண்டும். அதனைக் கோட்டை விட்டிருக்கிறது ‘ஓஹோ எந்தன் பேபி’.

நாயகன் – நாயகி இடையேயான புரிதலில் பிளவு ஏற்படும்போது, ‘அதனால என்ன’ என்கிற மனநிலைக்கு அது நம்மை அழைத்துச் செல்கிறது.

அதேநேரத்தில், அது போன்ற தவறான புரிதல்கள் இன்று பல காதலர்களின் வாழ்வைச் சிதைக்கிறது என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு சுமாரான ‘ரொமான்ஸ் ட்ராமா’வாக இருக்கிறது இப்படம். இதில் காமெடியும் போதுமான அளவுக்கு இல்லை என்பது இன்னொரு குறை.

கொஞ்சம் முயற்சித்திருந்தால், கவனம் கூட்டியிருந்தால், திரைக்கதையில் கொஞ்சமாய் சில காட்சிகளைச் சேர்த்து, அந்த குறையைச் சரி செய்திருக்க முடியும்.

அது நிகழாத காரணத்தால், ’ஓஹோ’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது இந்த ‘ரொமான்ஸ் பேபி’..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like