இனிக்கும் குரலால் உருக வைத்த உன்னி கிருஷ்ணன்!

கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த உன்னிகிருஷ்ணன், தனது 12-வது வயதிலிருந்தே கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தவர். 

பிரபுதேவா நடித்த ‘காதலன்’ திரைப்படத்தில் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தான் பாடிய முதல் பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார்.

தமிழில், பாடலுக்காக முதல் தேசிய விருத்தைப் பெற்ற முதல் ஆண் பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இனிமையான குரலால் தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத பாடல்களைப் பாடிய உன்னிகிருஷ்ணன், தமிழ்நாட்டின் கலைமாமணி, நாத பூஷணம், இசைப் பேரொளி, யுவ கலா பாரதி, இசையின் புன்னகை, இசைச் செல்வம், சங்கீத கலா சாரதி, சங்கீத சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

சினிமாவில் பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவின் அனைத்து சீசன்களில் நடுவராகவும் பங்களித்தவர். ஏசியாநெட் டிவியின் ஸ்டார் சிங்கரிலும் நடுவராகத் தோன்றியவர்.

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட உன்னிகிருஷ்ணனிடம், பாடகர் ஆகவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள் என் கேட்டபோது,

“நான் பெரிய கிரிக்கெட்டர் ஆக இருந்திருப்பேன். அதுதான் என்னுடைய ஆசையாகவும் இருந்தது, பாடகராக வேண்டும் என்பதல்ல. இசை என்னைத் தேர்வு செய்துக் கொண்டது” என்று பகிர்ந்துள்ளார்.

தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா, விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடல்களாக்கினார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் பாடியுள்ள உன்னிகிருஷ்ணன், சினிமாவைத் தாண்டி பக்தி பாடல்களையும், ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.

இதனிடையே, மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘பவித்ரா’ படத்தில் இடம்பெற்ற “உயிரும் நீயே” என்ற பாடலுக்காக தேசிய விருது  கிடைத்தது.

‘கருத்தம்மா’ படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று, ‘ஆசை’ படத்தில் இடம்பெற்ற மீனம்மா அதிகாலையிலும், காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற ஓ வெண்ணிலா போன்ற எண்ணற்ற[ பாடல்களைப் பாடி தன்னுடைய மாயக் குரலால் நம்மை கட்டிப்போட்டவர்.

தனது குரலால் நம்மை மெய் மறக்க வைத்த உன்னிகிருஷ்ணன் தற்போதுள்ள தலைமுறை ரசிக்கும்படியும் பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

மயக்கும் மந்திரக்குரலால் நம்மை கட்டிப்போட்ட உன்னி கிருஷ்ணனின் மகளும் பாடகி தான். உத்ரா உன்னிகிருஷ்ணன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘சைவம்’ படத்தின் மூலம் இளம் பாடகராக அறிமுகம் ஆனார்.

இவர் பாடிய “அழகு” என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். இளம் வயதில் தேசிய விருதைப் பெற்ற பாடகர் என்ற பெருமைக்குரியவர் உத்ரா உன்னி கிருஷ்ணன்.

அவருடைய சிறந்த பாடல்களின் தொகுப்பு:

1.என்னவளே: 

பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் காதலன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இப்பாடலை உன்னிகிருஷ்ணன் பாடியிருப்பார். இந்தப் பாடலுக்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.

“காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு

நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப்

பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி

இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடைகொண்டு

போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி….”

2.எனக்கே எனக்கா:

பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்த மெகாஹிட் திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். உன்னிகிருஷ்ணன் மற்றும் எஸ்பிபி மகள் பல்லவி ஆகியோர் இப்பாடலை பாடியிருப்பார்கள்.

“அன்பே இருவரும்

பொடிநடையாக அமெரிக்காவை

வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்

கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

நம் காதலை

கவிபாடவே ஷெல்லியின்

வைரனின் கல்லறைத்

தூக்கத்தைக் கலைத்திடுவோம்…”

3. வீசும் காற்றுக்கு:

அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருப்பார். உன்னிகிருஷ்ணன் உடன் சேர்ந்து பவதாரணி பாடியிருப்பார்.

“சிரிக்கிறேன்

இதழ்களில் மலருகிறாய்

அழுகிறேன் துளிகளாய்

நழுவுகிறாய் விழிகள்

முழுதும் நிழலா இருளா

வாழ்க்கைப் பயணம்

முதலா முடிவா

சருகென உதிர்கிறேன் தனிமையிலே

மௌனமாய் எரிகிறேன்

காதலிலே..”

4. சேலையிலே வீடு கட்டவா:

அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் மற்றும் சித்ரா பாடியிருப்பார்கள். இப்பாடலுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார்.

“ஓவியத்தைத் திரை

மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா

காற்று மழைச் சாரலிலே

நனையவிட்டால் நியாயமா

ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை

மூடாதே விழியை மூடும்

போதிலும் விரல்களாலே

தேடாதே…”

5. நிலவை கொண்டு வா:

அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு தேவா இசையமைத்திருப்பார்.

“காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை

இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்

இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு

இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு…”

இதுமட்டுமல்லாது, உயிரும் நீயே, சோனியா சோனியா, ஏதோ ஒரு பாட்டு போன்று உன்னிகிருஷ்ணன் கொடுத்துள்ள பல ஹிட் பாடல்களை விளக்க இன்று ஒருநாள் போதாது.

  • மணி அமுதன்
You might also like