ஆபாசப் பேச்சுக்களை எச்சரித்துத் தடுக்க முடியுமா?

“அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வேடிக்கைப் பார்க்க முடியாது!” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் ஆபாசமான பேச்சிற்காக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இப்படிப்பட்ட எச்சரிக்கையை விடுத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.

இதைப் படிப்பவர்களுக்கு தற்கால நவீன யுகத்தில் பொன்முடி மட்டும்தான் ஆபாசமாக பேசுகிறாரா? என்கிற நியாயமான கேள்வி எழலாம்.

உண்மைதான். ஏனென்றால், பொதுவெளியில் பேசப்படுபவற்றை காது கொடுத்துக் கேட்டால், கேட்கிற காதே நிறைந்துவிடும் அளவுக்குப் பொதுவெளியில் ஆபாசமான கொச்சைப் பேச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. 

தொலைக்காட்சிகளாவது நாகரீகம் கருதி, அந்த ஆபாசப் பேச்சின் குறிப்பிட்ட பகுதியை ‘பீப்’ சப்தம் எழுப்பி அந்த அசிங்கத்தின் தரத்தைக் கொஞ்சமாவது குறைத்துவிடுகிறார்கள்.

ஆனால், சமூக வலைதளங்களில் அத்தகைய எடிட்டிங்கும் நிகழாமல், அந்த ஆபாசப் பேச்சுக்கள் வெட்டப்படாமல் அப்படியே வெளியாகிப் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

இதேமாதிரி, தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், முன்பு பேசிய ஆபாசமான வசை, அப்படியே வெளியானது.

ஆபாசமாகப் பேசுவதில், இங்குள்ள கட்சிகளுக்கு இடையே பேதம் இருப்பதில்லை. இதில், தேசியக் கட்சி, மாநில கட்சி, சாதியக் கட்சி என்கின்ற பாகுபாடுகளும் இருப்பதில்லை. 

அரசியல் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேச்சில் எல்லை மீறுகிறபோது அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்வதும் அபூர்வமான நிகழ்வாகவே இங்கு நிகழ்ந்திருக்கிறது.

எல்லாமே ஆபாசத்தில் கொஞ்சமாவது ஊறிய மட்டைகள்தான்.

அதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது, அதன் தலைமையை எதிர்த்து கடுமையான சொற்கள் பொதுமேடையில் வீசப்பட்டிருக்கின்றன.

அதற்கென்றே தனியாக ஸ்பெஷல் பேச்சாளர்கள் இருந்தார்கள். மாதந்தோறும் தமிழ்நாடு முழுக்க சுற்றிவந்த அந்த பேச்சாளர்களின் பேச்சைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில், கூட்டம் திரளும். 

அந்த அளவுக்கு தங்களுடைய சாதுர்யமான ஆபாசப் பேச்சுக்களால் மக்களை வசியப்படுத்தி வைத்திருந்தார்கள் அவர்கள்.

அண்மையில், பரபரப்பாக ஊடகங்களில் அடிபட்ட ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி காட்டமாக விமர்சிக்கும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்த பேச்சாளர், பகிரங்கமாகப் பொதுமேடையில் அந்தத் தே… என்று பேச்சை ஆரம்பிக்கிறார்.

அவருடைய அந்தப் பேச்சைக் கைத்தட்டி ஆரவாரிக்கிறது எதிரில் அமர்ந்திருக்கும் கூட்டம். 

இதேமாதிரிதான் தொலைக்காட்சி விவாதங்களிலும். அதில், பேசுகிறவர்களில், வெகு சிலர் மட்டுமே பேச்சில் கண்ணியத்தை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.

பேசும்போது, அன்றைய பேச்சின் மையப்பொருளுக்கு பொருத்தமான தவறுகளை ஒருங்கிணைத்து, புள்ளி விவரங்களையும் சேகரித்துத் தருகிறவர்களாக இருக்கிறார்கள்.

அதிலேயே, மற்றவரை ஒருமையுடன் பேசி, பேச்சைக் கத்தலாக மாற்றும் ஆசாமிகளும் இருக்கிறார்கள்.

அத்தகைய நபர்கள் தாங்களும் ஒழுங்கான விவாதத்தை முன்வைக்க மாட்டார்கள். மற்றவர்கள் தரப்பையும் முன்வைக்க விடமாட்டார்கள்.

அன்றைய தலைப்பின் வெப்பத்தைப் பொறுத்து அன்றைக்கு தொலைக்காட்சியில் பேசுபவர்களின் பேச்சிலும் வெப்பம் அனலடிக்கும்.

அதில் பேசுகிறவர்கள் சில சமயம், தாறுமாறாகவும் சமயங்களில் ஆபாசமாகவும் பேச நேர்கிறபோது, அந்த விவாதத்தை நெறிப்படுத்த வேண்டிய நெறியாளர்கள் திணறிப்போய் தண்ணீர் குடிக்க வேண்டியதாகிறது.

விவாதத்தில், பங்கேற்கிறவர்களும் நெறிப்படுத்த வேண்டியவர்களுமே தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறபோது, வீட்டின் உள்ளறையில் அந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் அதே வெப்பம் தாளாமல், தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

முன்பு பொதுக்கூட்ட மேடையில் கேட்ட அதே மட்டரகமான பேச்சை, சமயங்களில் தொலைக்காட்சியில் தனது வீட்டிலிருந்தபடியே கேட்க முடியும் என்பதையெல்லாம் தமிழக வாக்காளப் பெருமக்கள் 20 வருடங்களுக்கு முன்பு நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அதிலும் சிலர், நீதிமன்றத்திற்கு ஏதிராகவே கடுமையாகப் பொங்கிய போதும் கூட, அவர்களின் பேச்சுக்கு எதிராக சட்டம் ஒன்றும் கடுமையாகப் பாய்ந்துவிடவில்லை. பொதுவெளியில் தொடர்ந்து பேசியபடியே தான் இருக்கிறார்கள். 

தற்போது கடுமை காட்டுகிற உயர்நீதிமன்றம் இப்படிப் பேசுகிறவர்களில் குறைந்தபட்சம் நான்கைந்து பேரையாவது கைது செய்து, அதற்கான சட்டரீதியான நடவடிக்கையைக் கடுமையாக எடுத்தால்தான், இத்தகைய பேச்சுக்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்பிருக்கிறது.

வள்ளுவன் அன்று ‘நா காக்க’ என்று சொன்னதைவிடவும் வலுவாக யாரும் சொல்லிவிட முடியாது. 

– யூகி

You might also like