முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் 16 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குடமுழுக்கு நடந்திருக்கிறது.
இன்னொரு விதத்தில் ஊடகங்கள் “கும்பாபிஷேகம்” என்கிறார்கள். முருகனை “அருள்மிகு சுப்ரமணிய சுவாமி” என்கிறார்கள்.
ஏற்கனவே பழனி முருகனை “தண்டாயுபாணி” சுவாமி என்று சொன்னமாதிரி இதிலும் நடக்கிறது.
ஏறத்தாழ பத்துலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்பார்த்த மாதிரியே லட்சக்கணக்கில் கூட்டம் திருச்செந்தூரில் அலைமோதி இருக்கிறது.
பலதரப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் நேரடியாக இந்தக் குடமுழுக்கு நிகழ்வை நேரடி ஒலிபரப்புச் செய்தன.
வெவ்வேறு வர்ணனையாளர்கள் அருணகிரி நாதரின் திருப்புகழ் முதற்கொண்டு பல்வேறு பாடல்களைச் சுட்டிக்காட்டி தமிழில் வர்ணித்ததைப் பார்க்க முடிந்தது.
குடமுழுக்கிற்கு சில தினங்கள் முன்பே யாக சாலையில், யாகங்களுக்கான சடங்குகள் நடந்தபோது, சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்பட்டன. குடமுழுக்கு நிகழ்விலும் சமஸ்கிருதம் மேலோங்கி இருந்தது.
அவ்வப்போது, கோவில் பிரகாரத்தில் பல தமிழ் பாடல்களும் குறிப்பாக சீர்காழியின் பாடல்களும் கூட கேட்டன.
குடமுழுக்கிற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்கள் தான். அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவும் தமிழர்தான். அவருடைய நிர்வாகத்தின் கீழ், பணிபுரிபவர்களும் தமிழர்கள்தான். கருவறையில், காட்சித் தரும் முருகனும் ஆதித் தமிழர்தான்.
இப்படி இருக்கும்போது, “தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று அமைச்சரான சேகர்பாபு சொன்னபடி, குடமுழுக்கு நிகழ்வில், சமஸ்கிருதத்திற்கே முதலிடம் தரப்பட்டிருக்கிறது என்றால், யாருடைய விருப்பப்படி அல்லது யாருடைய கட்டளையின் கீழ் இந்த வழிபாட்டுச் சடங்குகள் நடந்தேறி இருக்கின்றன.
இதற்கு உரிய முறையில் பதில் சொல்கிறவர்களாவது சமஸ்கிருதத்தில் சொல்லாமல், செம்மொழியான தமிழில் பதில் சொல்வார்களா?
ஏன் இந்த மொழி பாரபட்சம்?
– யூகி