என்றைக்கும் ஒலிக்கும் பராசக்தி வசனங்கள்!

நடிகர் வி.கே. ராமசாமி நெகிழ்ச்சி

சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் மதுரை பால கான சபாவிலிருந்த போதே. நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை.

பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார்.

இந்த காலகட்டத்தில் ‘இழந்த காதல்’ என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், ‘கள்வர் தலைவன்’ நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், ‘பராசக்தி’யை படமாக எடுக்கும்போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து, திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக் கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.

பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்.மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப் பற்றி ஒரே பேச்சாக இருந்தது.

மற்ற ஃப்ளோர்களில் நடித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா, “நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன். இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது” என்று மனந்திறந்து பாராட்டினார்.

1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனங்கள் கிளப்பிய வேட்டுச் சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

– நன்றி : விகடன்.காம்

You might also like