செல்லப் பிராணிகளின் தாகம் தீர்த்த நண்பர்கள் குழு!

ராஜஸ்தான் மாநிலத்தில் 35 கிராமங்களில் மாடுகள், செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் உருவாக்குதல், குளங்களை சீரமைத்தல் என சாதனை செய்துள்ளனர் ஏழு நண்பர்கள்.

இங்கே ஜீவ் ஜந்து பிரேமி பந்து சன்ஸ்தா என்ற அமைப்பை உருவாக்கி 690 உறுப்பினர்களின் சந்தா தொகையின் உதவியுடன் தாகம் தீர்க்கும் பணிகளைச் செய்துவருகின்றனர்.

கோடை என்றாலே காடுகள்கூட வறண்டுவிடும். அதுவும் பாலைவனம் உள்ள ராஜஸ்தானைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

வெயில் காலங்களில் வறட்சிதான் அதன் அடையாளமாக இருக்கும். மனிதர்களே தவிக்கும்போது பறவைகளும் மாடுகளும் செல்லப்பிராணிகளும் தாகம் தீர்க்க என்ன வழி…

மார்ச் 2024 கணக்கெடுப்பின்படி 88.2 சதவீத பறவைகள், 5.9 சதவீத ஊர்வன மற்றும் பாலூட்டிகள் நீரின்றி தவிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பசுமை நகரம் என்று சொல்லக்கூடிய பெங்களூரு மற்றும் ராஜஸ்தானில்தான் நிலைமை மோசமாக இருக்கிறது.

ஜோத்பூரில் பவர்லா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழு நண்பர்கள்தான் முதன்முதளில் தாகம் தீர்க்கும் முயற்சியைத் தொடங்கினார்கள்.

சிறு முயற்சியாக தொடங்கப்பட்டு இன்று அவர்களது அமைப்பில் 690 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 35 கிராமங்களைச் சேர்ந்த அந்த மனிதர்களின் ஒரே நோக்கம் பிராணிகளின் தாகம் தீர்ப்பது மட்டுமே.

“ஒட்டகம் போன்ற வறட்சியைத் தாங்கும் விலங்குகள்கூட நீரின்றி மரணிப்பதைப் பார்க்க முடிந்தது. இது தொடரக்கூடாது என நான் நினைத்தேன்” என்கிறார் இந்த அமைப்பை உருவாக்கிய ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் தினேஷ் பிஸ்நோய். பிராணிகளுக்கு நீர் அருந்துவதற்கு பெரிய வழிகள் ஏதும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இந்த ஏழு நண்பர்களும் முதல்கட்டமாக ஆளுக்கு 150 ரூபாய் சேர்த்து ஆயிரம் ரூபாய் செலவில் தெருவில் அலையும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவும் நீரும் வழங்க ஏற்பாடு செய்தார்கள். இதுதான் அவர்களது முதல் முயற்சியாக இருந்தது.

அடுத்தகட்டமாக 18 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பின்னர் அவர்களது தாகம் தீர்க்கும் திட்டத்தை பல கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். 50 கிலோ தானியங்களை வாங்கி சுத்தம் செய்து ஒரு குட்டையில் போட்டார்கள்.

இந்தச் செயலுக்கு மெல்ல மெல்ல கிராம மக்களின் ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. இன்று 485 பேர் பிராணிகளுக்கு நீர் தரும் பணிகளில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

ராஜஸ்தானில் 35 கிராமங்களில் உள்ள 21 பெரிய மற்றும் 50 சின்ன அணைகளில் இருந்து நீர் கிடைக்கிறது.

ஒரு கிராமத்திற்கு 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

அதாவது நான்கு ஆண்டுகளில் செலவான தண்ணீரின் மதிப்பு மட்டும் 24 லட்சம் ரூபாய்.

தாகம் தீர்க்கும் அமைப்பில் 690 உறுப்பினர்களில் காவல்துறை அதிகாரிகள், செவிலியர்கள், ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் உள்ளனர்.

இதுவரை ராஜஸ்தானில் பல ஆயிரம் பிராணிகள் கடும் வறட்சியில் இருந்து மீண்டுள்ளன என்பதுதான் இச்சேவையின் பெருமை.

நன்றி: திபெட்டர் இந்தியா

You might also like