vels

ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

vels

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண விவரங்கள்:

> புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்;

> சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்;

> முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,

> மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்;

> பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;

> மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிடவும்;

> எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும்;

> வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்;

> அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;

> மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்;

> மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vels
You might also like