பூச்சிகள் இல்லா உலகம் சாத்தியமா? இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதோ, தேடுவதோ வீணான காரியம் என்போர் பலர். சிலரோ, பூச்சிக்கொல்லிகள் எந்தளவுக்கு வீரியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சாத்தியம் என்பர்.
இவ்விரண்டில் எது சரி, எது தவறு என்பது அவரவர் எண்ணவோட்டத்தைப் பொறுத்தது. எப்படிப்பட்ட எண்ணம் கொண்டவராக இருந்தாலும், இந்த உலகில் மனிதர்களுக்கு முன்னரே அவ்வுயிரினங்கள் தோன்றின என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மிகப்பழமையானவை!
இந்த உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூச்சி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. வண்டுகள், ஈக்கள், வண்ணத்துப்பூச்சிகள், எறும்புகள் என்று இவை பலவகைப்பட்டவை.
சுமார் 900 மில்லியன் பூச்சி வகைகள் இந்த உலகில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படிப் பார்த்தால், மனிதர்களைவிட சீனியர்களாக இருந்துவரும் பல உயிரினங்களில் இவற்றுக்கும் இடம் உண்டு.
வேளாண்மை, தோட்டக்கலை, வனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகளில் தொய்வையும் சிதைவையும் ஏற்படுத்தவல்லவை இப்பூச்சி வகைகள்.

இவற்றைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் முடிந்தால் மட்டுமே மனிதர்களுக்குப் பலன் கிடைக்கும் என்ற நிலை ஒருகட்டத்தில் உருவானது.
அந்தக் கணத்தில் பூச்சிக்கொல்லிகள் என்ற வார்த்தைக்கு மதிப்பு ஏற்பட்டது.
எறும்புகள், கொசுக்கள், கரையான்கள், கம்பளிப்பூச்சிகள் உட்படப் பல உயிரினங்கள் மனித வாழ்வுக்கு ஊறு விளைவிப்பவையாகக் கருதப்படுகின்றன.
அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதால் இயற்கைச் சங்கிலியில் ஒரு கண்ணி விடுபட்டு மோசமான பிரச்சனைகள் வந்துவிடவும் வாய்ப்புண்டு. அதனாலேயே, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலேயே நம்மவர்கள் குறியாக இருந்தார்கள்.
மனிதர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவற்றுக்கு ஊறு விளைவிப்பவை, அழிப்பவை பூச்சி இனங்கள் மட்டுமல்ல; சில தாவரங்கள், விலங்குகள் கூட அந்த வகையில் சேரும்.
எலி, சீமைக் கருவேல மரங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாயத் தாமரை போன்ற பலவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். இவை அனைத்துமே ‘pest’ என்றழைக்கப்படுகின்றன.
அழிவை ஏற்படுத்தும் இவ்வுயிரினங்களைக் கட்டுப்படுத்துவது என்பது எல்லா காலத்திலும் பொதுவானதாக இருந்து வந்துள்ளது.
கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்!
கி.மு.3000ஆம் ஆண்டில் இருந்தே பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகச் சான்றுகள் சில எகிப்து நாட்டில் கிடைத்துள்ளன.
மெசபடோமியா என்றழைக்கப்பட்ட தற்போதைய ஈராக் பகுதியில், கி.மு.2500களில் கந்தகம் சார்ந்த வேதிப்பொருட்கள் பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சீனர்கள் கி.மு.1200இல் கம்பளிப்பூச்சிகள், சில வண்டுகளை வேட்டையாட குறிப்பிட்ட வகை எறும்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
கி.பி.1500க்கு பிறகு வேதிப்பொருட்களும், சில வகை ஆயுதங்களும் பூச்சி ஒழிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவற்றின் நுட்பங்கள் பலவாறாக மாறி வந்திருக்கின்றன.
விவசாயத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்ட பசுமைப்புரட்சி கூட பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியது.

எறும்புகளைக் கொல்ல ஒருகாலத்தில் மளிகைக்கடைகளில் ஒரு வகை தூள் விற்பனை செய்யப்பட்டது.
அதை நுகர்வது கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும் எனச் சொல்லப்பட்டது.
இன்று, அவற்றுக்குப் பதிலாக ‘சாக்பீஸ்’ போன்று கோடு கிழிக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வழக்கம் வந்துவிட்டது.
மனிதருக்கு ஊறு விளைவிக்கும் ஒவ்வொரு உயிரினத்தையும் கட்டுப்படுத்த அல்லது அழிக்கப் பல நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
மழைக்காலங்களில் ‘ர்ர்ர்…’ என்று சத்தம் எழுப்பி கொசுக்களை மின் அதிர்ச்சியில் ஆழ்த்தும் சாதனங்கள் இன்று பரவலாகிவிட்டன.
உலக பூச்சி தினம்!
நாம் வாழுமிடத்தையும், நாம் நுகர்பவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அதற்கான வரைமுறைகளைக் கூர்மைப்படுத்தும்போது, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கான திட்டமிடலும் தேவைப்படுகிறது.
உணவு பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நிரந்தர பாதிப்புகள் என்று பலவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றைச் செயல்படுத்துவது அவசியம்.
அதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 6ஆம் தேதியன்று ‘உலக பூச்சி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வுலகில் பூச்சிகளால் ஏற்படும் கேடுகளைப் பற்றி முழுமையாக அறியவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் முதன்முறையாக இத்தினம் கொண்டாடப்பட்டது.
‘உலகளாவிய தீர்வுகள், உள்ளூர் அளவிலான தாக்கம்: பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிக்கான வழி’ என்பது இந்த ஆண்டுக்கான ‘உலக பூச்சி தின’ கருப்பொருளாக கொள்ளப்பட்டுள்ளது.
நாடு என்றில்லை, வீட்டில் கூட நாம் சுத்தத்தைக் கைக்கொள்ளாதபோது பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். வேண்டாத சில பூச்சிகளின் பெருக்கம் அதிலொன்று.
புத்தகம், துணி, மரச்சாமான்கள், சுவர்கள், கழிவறை, தேங்கிய நீர் என்று பலவற்றில் இதனை எதிர்கொள்ள நேரிடும். ஆதலால், ஓராண்டில் குறிப்பிட்ட இடைவெளியில் நமது வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதற்கான உறுதியைப் பெற, இத்தினத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின்குறிப்பு:

ஏற்கனவே சொன்னது போல, இந்த உலகில் மனிதர்கள் பெறும் ஆதாயங்களைத் தடுக்கும் வகையில் சில உயிரினங்களின் வாழ்வு அமையும்.
அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முயற்சிப்பதுதான் வேண்டாத விளைவுகளில் இருந்து நம்மைக் காக்கும்.
ஏனென்றால், எந்த ஒரு உயிரினத்தையும் அழிக்க முற்படும்போது, அது வாழ்க்கைக்கான திறவுகோல்களைத் தனது மரபணுக்களைத் திருத்தியாவது அடைந்துவிடும். அதற்கான வாய்ப்புகளைத் தராமல் இருப்பது அமைதியான வாழ்வை என்றென்றைக்குமாக நமக்குத் தரும்!
–மாபா
#பூச்சிகள் #பூச்சிக்கொல்லிகள் #பூச்சி_இனங்கள் #வண்டுகள் #ஈக்கள் #வண்ணத்துப்_பூச்சிகள் #எறும்புகள் #வேளாண்மை #தோட்டக்கலை #வனங்கள்_பெருக்கம் #கொசுக்கள் #கரையான்கள் #கம்பளிப்_பூச்சிகள் #இயற்கைச்_சங்கிலி #தாவரங்கள் #விலங்குகள் #pest #விவசாயம் #பசுமைப்புரட்சி #களைக்கொல்லி #உலக_பூச்சி_தினம் #insects #former #forming #pest_control #butterflies #ants #agriculture #agri #mosqueto #nature_circle #plants #animals #World_Pest_Day