புதுமைக் காந்தியர் – மகபூப் பாட்சா!

டாக்டர் க. பழனித்துரை

மதுரையில் சோக்கோ அறக்கட்டளை என்றால் ஒடுக்கப்பட்டோருக்கு புது வாழ்வளிக்கும் ஒரு புது வாழ்வு மையம் என்பது அனைவருக்கும் தெரியும்.

சுதந்திரம் பெற்ற ஒரு அடிமை நாடு, சுதந்திர நாட்டில் பலரை அடிமைப்படுத்தி வெள்ளையனைவிட கொடூரமாக சுரண்டி வாழும் ஒரு மனோபாவத்தில் பலரை அடிமைப்படுத்தி குட்டி காலணியாத்திக்கம் நடத்திய பலரிடமிருந்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு நல் வாழ்வு அளித்த மனித மீட்பராகச் செயல்பட்ட மகபூப் பாட்ஷா சமீபத்தில் இயற்கை எய்தினார்.

மரணம் இயற்கையானதுதான். இருந்தாலும் சமூகத்திற்கான மனிதர்கள் இறப்பது சமூகத்திற்கு பெரும் இழப்பு.

குடும்பத் தலைவர்கள் இறந்தால் குடும்பத்திற்கு இழப்பு. கட்சித் தலைவர்கள் இறந்தால் கட்சிக்கு இழப்பு. நல்ல தலைவர்கள் இறந்தால் நாட்டுக்கு இழப்பு. இவர் ஒடுக்கப்பட்டவருக்கும், புறக்கணிக்கப்பட்டவருக்கும் மறுவாழ்வளித்த மீட்பர். இவர் இறந்தது மிகப்பெரிய இழப்பு விளிம்பு நிலை மக்களுக்கு. இவர் மூப்பு எய்துவதற்கு முன்னே இயற்கை எய்தியதுதான் பேரிழப்பாகும்.

அப்படித்தான் பாட்ஷாவின் இறப்பை சமூகம் பார்த்தது. அவரின் நினைவு அஞ்சலிக் கொண்டாட்ட நிகழ்வில் கூடியிருந்தோர் அனைவரையும் பார்த்து உரையாடியபோது நமக்கு ஓர் உணர்வு பிறந்தது.

அவர் பிறந்ததற்கு பொருள் உணர்ந்து அவர் கடமைகளை சமூகத்திற்கு ஆற்றி விட்டார். காலன் அழைத்தான் சென்று விட்டார். எனவே அவர் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். கொண்டாடும் வேளையும் அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் எப்படி முன்னெடுப்பது என்பதனை நாம் ஆய்வு செய்து முன்னெடுக்க வேண்டும். அதுதான் நாம் இன்று அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவருடன் எனக்கும் கிராமியப் பல்கலைக் கழகத்திற்கும் இருந்த உயிரோட்டமான தொடர்பின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.

நான் புதிய பஞ்சாயத்து அரசாங்க விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியபோது எனக்குத் தேவைப்பட்டது குடிமைச் சமூக அமைப்புக்கள்.

அந்த நிலையில் நான் செரு வெள்ளைச்சாமி, மறைந்த நண்பர் அமைதி அறக்கட்டளைத் தலைவர் பால்.பாஸ்கர் இருவரின் அறிமுகத்தில் பாட்ஷாவுடன் தொடர்புக்கு வந்தேன்.

பொதுவாக பாட்ஷா ஆழமான சிந்தனையுள்ள மனிதர், எளிமைக்கு இலக்கணமானவர். அதே நேரத்தில் அழுத்தமானவர். நேர்மறைச் சிந்தனை கொண்டவர், மிகவும் இனிமையானவர், பண்புமிக்கவர்.

என்நேரமும் செயல்திட்டத்துடன் தொடர் செயல்பாட்டில் இருப்பவர். எந்த நேரத்திலும் பதட்டப்படாத நிதானமான மனிதர். மனிதர்களை போற்றி மதிக்கும் மானுடப் பண்பாளர். அவருடன் இணைந்து பல நிகழ்வுகளை நான் பல்கலைக் கழகத்தில் நடத்தியுள்ளேன்.

அதேபோல் தோழமைக்கு இலக்கணம் வகுத்துச் செயல்பட்டவர். பல்கலைக்கழக அரசியல் என்பது ஒரு கொடுமையான அரசியல். அந்தச் சூழலிலெல்லாம் நான் பல்கலை.யில் செய்ய முடியாத பணிகளை அவரிடமும், பால் பாஸ்கரிடமும் கூறிச் செய்யச் சொல்வேன். எந்த மறுப்பும் இன்றி செயல்படுத்துவார். எதையும் முடியாது என்று கூறியதே கிடையாது.

கருத்து மட்டும்தான் எனதாக இருக்கும், அனைத்துச் செயல்பாடுகளும் அவர்களின் செயல்பாடாக இருக்கும். ஆனால் அந்த நிகழ்வில் என்னை முன்னிலைப்படுத்துவார்.

அதேபோல் தனிப்பட்ட நிலையில் எனக்கு சிரமங்கள் பணிச்சூழலில் வருகின்றபோது, அந்த சிரமங்களை யாருக்கும் தெரியாமல் அகற்றுவதற்கு செயல்பட்டது மட்டுமல்ல, அந்தச் சிரமங்களை போக்கி விடுவது மட்டுமல்ல, அதை எவருக்கும் தெரியாமல் செய்து தருவது என்பது பண்புகளிலேயே மிக உயர்ந்தது. அதை நான் பாட்ஷாவிடம் பார்த்திருக்கிறேன்.

அவரிடம் கற்றுக்கொள்ள சமூகச் சேவர்களுக்கு நிறைய இருக்கின்றது. கடைக்கோடி மனிதனை சென்றடைவது, அவனுக்கான இடத்தை உருவாக்குவது என்பது நெருப்பாற்றில் நீச்சலிடுவது போலாகும். அதை அவர் செய்து கொண்டேயிருந்தார்.

சவால்களை அமைதியாக சந்திப்பது, நிதானமாக சந்திப்பது, மற்றவருடன் இணைந்து பணி செய்வது, தனிமனிதர்களை இயக்கமாக்கி விடுவது, அனைத்தையும் நாம் அவரிடம் காணமுடியும்.

மற்றவரை மதிக்கும் பண்பு, அதைவிட முக்கியமாக சரிசமமாக பார்க்கும் பார்வை நாம் அனைவரும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சமத்துவப் பார்வை ஒருவர் உருவாக்கிக் கொள்வது என்பது இன்றைய சமூகத்தில் அவ்வளவு எளிதானதல்ல. அந்தப் பார்வையை அவர் தன் சிந்தனைப் போக்கில் வைத்திருந்தார்.

எவ்வளவு நெகிழ்வு, எளிமை, அவரிடம் இருந்தாலும் அவர் கொண்ட கொள்கையில் சமரசம் என்பதற்கு இடமே கிடையாது என்ற நிலையில் செயல்படும் தன்மை கொண்டவர்.

மிக எளிதாக எவரையும் கவரக்கூடிய வசீகரத் தன்மை கொண்டவர். எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. அது மட்டுமல்ல அவைகளை எளிதாகவும் கடக்கக்கூடியவர். எந்த நிலையிலும் நிதானம் இழக்காமல் இனிமையாக புன்முறுவலுடன் தன் செயல்பாடுகளை தொய்வின்றி செய்யும் செயல்வீரர்.

எங்கள் துறையில் பல அறக்கட்டளைகளை உருவாக்கிக் கொண்டிருந்தேன் சாதனை மனிதர்கள் பெயரில். அப்போது நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணர் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று அவரிடம் ஒருமுறை கூறினேன். நிச்சயமாக நான் அதற்கு எவ்வளவு நிதி தரவேண்டும் எனக் கேட்டவர் ஒரு வாரத்தில் அதற்கான காசோலையை எனக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்து அமைதி அறக்கட்டளைத் தலைவர் நண்பர் பால்.பாஸ்கர் நீதியரசன் பி.என்.பகவதி பெயரில் எங்கள் துறையில் ஓர் அறக்கட்டளை உருவாக்கியபோது, அதன் முதல் அறக்கட்டளைச் சொற்பொழிவை நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ய்யர் ஆற்ற வேண்டும், அதற்கு எப்படியாவது அவரை அழைத்து வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

உடனே முயல்வோம் என்று கூறி, அவரை எங்கள் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்து மிகப்பெரிய நிகழ்வை பல்கலையில் நடத்தியது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.

அதேபோல் பல நினைவுச் சொற்பொழிவுகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளை, உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்துவர எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

அவரை எங்கள் துறை நிகழ்வுகளுக்கு செழுமை சேர்க்க பல முறை பயன்படுத்தினேன். அது எந்த நிகழ்வாகட்டும், எனக்கு எந்தச் சிரமும் இன்றி செய்து தந்தார்.

அப்போதெல்லாம் அவருக்கு அந்த நிகழ்வுகளுக்கு சில நேரம் நிதி தேவைப்படும். அவற்றை என்னிடம் கேட்கமாட்டார். அதை நான் கேட்கும்போதுகூட, என்னால் முடிந்தது நான் செய்தேன். உங்கள் மாணவர்கள் சாதாரண ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், அவருக்கு உதவுவது நம் கடமை என்று கூறுவார்.

அவர் அலுவலகம் செல்லும்போதெல்லாம் சமூக நீதி மற்றும் மானுட உரிமை பற்றிய நல்ல புத்தகங்கள் இருந்தால் அவைகளை எடுத்து வாசிப்பேன். அப்போது சார், உங்களுக்குத்தான் அந்தப் புத்தகம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடுத்து ஒரு பையில் போட்டு அவரே வழி அனுப்பும்போது காரில் வைத்துவிடுவார்.

பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தி மானுட உரிமைகள் சார்ந்த பாடத்திட்டம் கட்டாயம் உயர்கல்வியில் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு முன் எங்கள் துறையில் எம்.ஏ. வளர்ச்சி நிர்வாகத்தில் மானுட உரிமை பற்றிய பாடத்திட்டத்தைச் சேர்த்துவிட்டோம்.

அதற்குக் காரணம் நண்பர் பாட்ஷா என்பதை இன்று நினைக்கும்போது எப்படியெல்லாம் உயர்கல்வி நிலையங்களுக்குள் சென்று ஆசிரியர்களை மானுட உரிமை சார்ந்து சிந்திக்க பழக்கலாம் என்று அவர் யோசித்து செயல்பட்டது நமக்கு விளங்குகிறது.

அவருடன் ஒருமுறை பெங்களூருக்கு பயணித்தபோதுதான் எனக்குத் தெரிந்தது, அவர் ஆரோக்யமாக இல்லை என்பது. உடல் உபாதையால் சிரமப்படுவார், அதையும் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். ஏன் அப்படி இருந்தார் என்பதுதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புவியில் ஒவ்வொன்றும் தனி, அதேபோல் மனிதர்கள் ஒன்றுபோல் இருக்க முடியாது. அவர் ஒரு தனி ரகம். அவர்போல் இருக்க முடியாது.

இன்று பல்லாயிரம் பாட்ஷாக்கள் வேண்டும் என்ற நிலையில், இருந்த ஒருவரும் மறைந்துவிட்டார் என்பதுதான் பெரும் துன்பியல்.

அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வது, அவர் கடைப்பிடித்த உயர் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றுவதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

You might also like