சொல்லாதது…!

உலகக் கவிதை நாள்:

பேச ஆரம்பித்ததும்
தூறல்.

சிமிண்டுத் தாழ்வாரத்தின்
கீழ் ஒதுங்கியிருந்தோம்.

அந்தரத்தில்
எவ்வளவு காலம் நிராதரவாயிருந்து
மண் தொடுகிறது மழைத்துளி.

நிலம் முழுவதும்
சீரான மழைச் சந்தோஷம்.

காலடியில் தெறிக்கிற ஈரம்
சிறு குழந்தை விரல் போலக் கொஞ்சுகிறது.

பார்க்கிற மனங்களை
நெகிழ்த்தியிருந்தது மழை.

இளகிய பாவத்துடன்
பேச்சைப் பகிர்ந்து கொண்டிருந்தோம்.

பிரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்
மழையை நண்பன்.

தனித்துச் சில தசைகளைக்
குலுக்கிக் கொண்டிருந்தது மழை.

அவன் கன்னத்தசைகள், விரல்கள்
துடித்துக் கொண்டிருந்தன.

தூறலுடன்-
கிளம்பிப் போனான் அவன்.

பரவசத்தில்
சொல்ல மறந்து போயிருந்தேன்
என் பசியை அவனிடம்.

மழை எல்லாவற்றையுமே
நனைத்து விட்டிருக்கிறது
பசியைத் தவிர.

– மணா

* லக்‌ஷ்மா என்ற பெயரில் பத்திரிகையாளர் மணா எழுதி, 1987 ல் வெளியான ‘இன்னொரு விழிப்பு’ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

You might also like