ஆரோக்கிய உணவு முறைக்கு எப்போது மாறுவோம்?

அரிசி சோறு பண்டிகை கால உணவாக இருந்து தற்போது தினசரி உணவாக மாறிவிட்டது. அதுபோன்று, 30 வருடத்திற்கு முன் பண்டிகை கால உணவாக இருந்த பிரியாணி தற்போது பலருக்கும் தினசரி உணவாக அல்லது வாரம் 3 முறை உண்ணக்கூடிய உணவாக மாறிக் கொண்டிருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் இந்த அளவிற்கு பிரியாணி கடைகள் இல்லை. இப்பொழுது தெருவுக்கு இரண்டு பிரியாணி கடைகள் வந்துவிட்டன.

பழங்கால மக்களுக்கு மட்டும் எப்படி திமில் கொண்ட தோளும், மதர்த்த நெஞ்சும் வந்தது? அதற்கு உணவு முறையும் ஒரு காரணம்.

சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளின் உணவுப் பழக்கம்!

மன்னர்கள் குடிமக்களின் உணவுகளில் வித்தியாசம் இல்லை. அவர்கள் சோளம், கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசி உணவுகளைத் தான் உண்டிருக்கிறார்கள். இவையே முதன்மையான உணவு.

இன்று நாம் சிறுதானியம் என சொல்லும் பயிறு வகைகள் அருந்தானியம் என்றழைத்தனர். அதிகம் அதனையே உண்டனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகள். இதில் வாழ்ந்த மக்கள் அந்த இடத்தின் தன்மைக்கேற்ப உணவு முறைகளை பின்பற்றி வந்தனர்.

குறிஞ்சியில் உள்ள மக்கள் தேன், திணை போன்ற உணவுகளை உண்டனர். முல்லை மக்கள் இறைச்சி, பச்சை காய்கறிகள் போன்றவற்றையே உணவாக பயன்படுத்தினர். மருத நில மக்கள் அரிசி, கேழ்வரகு, திணை, கம்பு, சோளம் போன்றவற்றை உண்டு களித்தனர்.

நெய்தலில் உள்ள மக்கள் அதிக கடல் உணவுகளையே சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தனர். பாலை நிலத்தினர் இறைச்சி, மீன், போன்றவற்றையே பிரதான உணவாக உண்டார்கள்.

இட்லியும் தோசையும் அப்போதே இருந்திருக்கிறது. இதுபோக கோதுமை ரொட்டி உண்டிருக்கிறார்கள். கறி வகைகளில் ஆடு, கோழி, மீன், பன்றியும் உண்டிருக்கிறார்கள்.

இதில் பாண்டியர்கள் மீன் தவிர மற்ற உணவை உண்பர். அயல் தேசத்தினர் வந்தால் கொழுத்த பன்றியை நெய்யில் பொரித்து இளந்திரையன் தொண்டைமான் பரிமாறியதாகவும் அறியப்படுகிறது.

சோழ நாட்டு மக்கள் தேனையும் கிழங்கையும் அதிகம் உண்டனர். பிற நிலத்தார்க்கு இதனை தந்து மீன், நறவை, நெய் இவற்றை பண்டமாற்றில் வாங்கிச் செல்வர்.

நன்னன் என்கிற குறுநில மன்னன் ஆண்ட சவ்வாது மலைப் பகுதியில் அடிவாரத்தில் வாழ்ந்த மக்கள் நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினையினை உண்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.

இவை மட்டுமின்றி உடும்பின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சியையும் உண்டனர். நெல்லில் சமைத்த கள்ளையும், மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்.

மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக் கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பையும் உண்டதாக அறிகிறோம்.

நிறைய மக்கள் வீட்டில் சமைக்காமல் மன்னர்கள் கோவில்களில் வழங்கும் அன்னதான உணவு வகைகளை உண்டதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உண்பதை பிறர் காண இயலாத வண்ணம் திரைச்சீலைகளால் மறைக்கும் வழக்கமும் இருந்தது.

காலை வேளையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி, கம்புக்களி உண்டு வந்தனர்.

களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.
போர் வீரர்களுக்கும் இதுவே உணவு.

மதிய வேளைகளில் முழு உணவு உண்டனர். அப்போதும் அரிசி சோறு கிடையாது. பொங்கல், ஆடி பண்டிகைகளின் போது தான் அரிசி சமையல்.

மற்றபடி வருடம் முழுவதும் சிறுதானியம் எனப்படும் அருந்தானியங்களையும் காய்கறிகள், இறைச்சிகள் கொண்ட உணவு வகைகளை சமைத்தனர்.

இலங்கையில் இன்னும் பல பகுதிகளில் அரிசி என்பதே ஆடம்பர உணவாகவும், பண்டிகை கால உணவாகவும் இருந்திருக்கிறது. 

பழங்கால தமிழர்களின் உணவு முறையை ஆராய்ந்து பார்க்கும்போது நாமும் அரிசி உணவை தவிர்ப்பது நல்லது.

இடியாப்பம், குழி பணியாரம், புட்டு (இட்லி), தோசை உள்ளிட்ட உணவுகளை அரிசியில் செய்து சாப்பிடாமல் கம்பு, தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தயார் செய்து உண்டு வந்துள்ளனர்.

இதேபோல் பழங்கால தமிழர்கள், நெய், நல்லெண்ணை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். நாம் சன்ப்ளவர் ஆயில், பாமாயில்னு உடம்பிற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.

உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளைத் தவிர்த்து பழங்கால தமிழர்கள் போன்று சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like