முகத்தில் அறையும் அரசியல் கவிதைகள்!

நூல் அறிமுகம்:

நா.வே. அருள் காலம் உருவாக்கிய கலைஞன். சதா முற்போக்கு எண்ணத்தோடு ஒரு மனிதனால் வாழமுடியும் என்பதற்கு உதாரணம் அருள்.

இவரது இலக்கியப் பட்டறையில் இருந்து வார்த்தெடுக்கப்பட்ட குத்துவாள்கள் ‘வரம் வாங்கிவிட்டு கடவுளைக் கொன்றவர்கள்’ மற்றும் ‘கிராம்சி புரண்டு படுக்கிறார்’ தொகுப்புகள்.

மிகச் சிறந்த மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பை வாசிப்பது போன்ற மயக்கத்தைத் தருகின்றன என்று நெகிழ்ந்து பாராட்டுகிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன்.

கவிஞர் நா. வே. அருளின் சமீபத்திய கவிதைத் தொகுப்புதான் ‘கிராம்சி புரண்டு படுக்கிறார்’. தவம் என்ற கவிதையில் தொடங்கி தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடியாதவர்கள் என 47 கவிதைகள் 144 பக்க நூலாக வெளிவந்திருக்கிறது.

முதல் பக்கத்திலேயே ஜார்ஜிய நாட்டுப் பெண் கவிஞர் ஸ்டாலிங்ஸின் கருத்துடன் தொடங்குகிறது இந்த கவிதைத் தொகுப்பு.

நிலைமை பெரும்பாலும் இழிவானதாகவோ அல்லது மனச்சோர்வு அடையக் கூடியதாகவோ இருந்தாலும், காத்திருப்பின் மத்தியில் எப்படியோ மகிழ்ச்சியின் மீட்சியும் இருக்கிறது என்கிறார் ஸ்டாலிங்ஸ்.

நதி, மலை, கடல், மழை என கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது நா.வே. அருள், நம்மை பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றி முகத்தில் அறைவதைப்போன்ற கவிதைகளை எழுதுகிறார்.

இவரது கவிதைகளின் தலைப்புகளே கவித்துவம் மிக்கவையாக இருக்கின்றன.

சர்வாதிகாரியின் மணல் கயிறு, கோழைகளின் அடுக்குமாடியில் தாவும் குரங்கு, ஒரு விவசாயினுடைய கடைசி நிலம், வெள்ளைக்காரர்கள் விட்டுப்போன காலணிகள்… இவை சில உதாரணங்கள்.

நா.வே. அருளின் கவிதைகள் நேரடியாக அரசியலைப் பேசுகின்றன. சமகால சமூக அரசியல் பிரச்னைகளைப் பேசுகின்றன. நம்முடைய முகத்தில் சரமாரியாக அறைந்து பேசுகின்றன.

சர்வாதிகாரத்தின் சமையலறை என்ற கவிதையில்,

சர்வாதிகாரத்தின் சமையலறையில்
உளவு விரல்கள் பொருத்தப்பட்ட
சமையற்காரர்கள்

ஓட்டைகள் விழுந்த
மகாத்மா காந்தியின் மார்புக்கூடு
துருவேறிய நாதுராமின்
கைத்துப்பாக்கி

கைகளில் கரண்டிகளாய்
அநாதைத் தியாகங்கள்
கர்வங்களின் தொப்பி
களவுகளின் சீருடை
பனியனில்
தியாகிகளின் எலும்புக் கூடுகள்

என்கிறார்.

இலக்கிய விமர்சகர் ஜமாலன் எழுதியுள்ள முன்னுரையில், நா. வே. அருளின் கவிதை உலகம் பற்றிய விரிவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

அரசியல்ரீதியான கவிதைகள் எப்படி தமிழில் எழுதப்பட்டன, அப்போது எழுந்த விமர்சனங்கள், போலியான நவீன கவிதைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வுநோக்குடன் எழுதியிருக்கிறார்.

“சமூக உணர்வு சார்ந்த இடதுசாரி, புரட்சிகரக் கவிதைகளை கலை உணர்வுக் கொம்புகளால் தீண்டத்தகாத ஒன்றாக மாற்றியுள்ளனர்.

அதனை மீறிய எதிர் மற்றும் மாற்றுக் கவிதையாடலாக கவிதை எனும் பேராயுதத்தை கையில் ஏந்தக் கூடிய ஒரு மரபு இங்குண்டு.

அம்மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிதைகள் இவை என்று குறிப்பிடுகிறார் ஜமாலன்.

விடுதலையை நோக்கி மனம் ஒரு வேட்டை மிருகத்தைப் போல வெறிகொண்டு அலைகிறது. அனைத்து அடிமைத்தனத்தில் இருந்தும் ஒரு முற்றான விடுதலையின் முழுமையை நோக்கி ஓடுகிறது. கிராம்சி புரண்டு படுக்கிறார்.

கிழக்கு விடிகிறது என்று நா.வே. அருளின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை அவரது கவிதைகள் நிரூபிக்கின்றன.

***************************

கிராம்சி புரண்டு படுக்கிறார்: நா.வே. அருள்

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 18

விலை ரூ. 160/-

You might also like