பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை
‘குடிசை’ ஜெயபாரதி, எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார்.
அதற்கு தேவைப்படும் விலை உயர்ந்த மருந்துகள் வாங்க்கூட பணமில்லாமல் அவதிப்படுகிறார்.
இவருடைய நிலையை நண்பர் உதவி இயக்குனர் ஹரி என்னிடம் சொல்ல, அண்மையில் கொளத்தூரில் இருக்கும் குடிசை ஜெயபாரதி வீட்டுக்குச் சென்று பார்த்தேன்.
மனைவியுடன் தனியாக வசித்துவரும் குடிசை ஜெயபாரதியின் நிலை வருத்தமுறச் செய்தது.
தன்னால் தினசரி மருந்துக்கு ஆகும் செலவை சமாளிக்க முடியவில்லை, உதவி செய்யுங்கள் சார் என்ற குரல் இப்பவும் என்னை அலைக்கழிக்கிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டில் எண்பதுகளில் எதார்த்த சினிமா அலை பேரெழுச்சியாக துவங்கியபோது பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோருடன் பல இயக்குனர்கள் இந்த எதார்த்தவாத அலையில் களமிறங்கினர்.
அதில் குடிசை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் ஜெயபாரதி. தமிழ்நாட்டின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படம் வெறும் 90,000 ரூபாயில் எடுக்கப்பட்ட படம்.
1979 ல் வெளியாகி பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பிடிவாதமாக எதார்த்த சினிமா மட்டுமே எடுப்பேன் என்ற முயறசியில் தொடந்து பயணித்தவர்.
‘அவள் அப்படித்தான்’ எடுத்த இயக்குநர் ருத்ரையாவின் அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் படத்தில் நாயகனாக நடிக்கத் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பின் அதிலிருந்து விலகி மீண்டும் இயக்க ஆரம்பித்தார்.
‘குடிசை’யைத் தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னையை மையமாகக் கொண்டு பாக்யராஜ் நடிக்க ஊமை ஜனங்கள் 1984ல் வெளியிட்டார்.
தொடர்ந்து உச்சி வெயில் (1991), நண்பா நண்பா (2002), சத்யராஜ் நடித்த குருஷேத்திரம் (2006) ஆகிய படங்களை இயக்கினார்.
இதில் ‘உச்சி வெயில்’ இந்தியன் பனோரமாவால் தேர்வுசெய்யப்பட்டு பல திரைப்பட விழாக்களில் பங்கேற்ற திரைப்படம்.
அதுபோல நண்பா நண்பா அதில் நடித்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த திரைப்படம்.
2010 ல் இவர் கடைசியாக இயக்கிய ‘புத்திரன்’ திரைப்படம் வெறும் 6 லட்சத்தில், 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம்.
இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த படமாக தமிழ்நாட்டு அரசால் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு திமுக அரசால் கவுரவிக்கப்பட்டது.
எண்ணிக்கையில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மாற்று சினிமா எடுப்பேன் என பிடிவாதமாக இயங்கியவர்.
‘ஜெயபாரதி சிறுகதைகள்’, ‘இரண்டு பேர் வானத்தை பார்க்கிறார்கள்’ மற்றும் தன் திரைப்பட அனுபவங்களை எழுதிய ‘இங்கே எதற்காக’ போன்ற போன்றவை இவர் எழுதி கவனம் பெற்ற நூல்கள்.
மாற்று சினிமாவுக்காக கருத்தரங்கம் நடத்தும் பண்பாட்டு அக்கறை கொண்ட நம் தமிழ்நாடு அரசு, இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு இன்று நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளின் இறுதிக்கால மருத்துவ செலவுக்காக ஏதேனும் அக்கறை எடுத்துக்கொள்வது அந்தப் பாதையில் பயனிப்பவரக்ளுக்கு பேருதவியாக இருக்கும்.
குடிசை ஜெயபாரதிக்கு நீங்கள் செய்யும் பொருளாதார உதவி அவரை நெருக்கடியான உடல் நிலையிலிருந்து ஓரளவு காப்பாற்றக்கூடும்.
அவரது மனைவி ப்ரீத்தா ஜெயராமன் அவர்களின் வங்கி முகவரி மற்றும் கூகுள் பே எண் கீழே கொடுத்திருக்கிறேன் உங்களால் முடிந்த தொகை அவருக்கு செலுத்தி உதவவும் என்று பாலுமகேந்திரா நூலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புகொள்ள: ஜெயபாரதி : 97899 66945
– தான்யா